அமைதிப் பொங்கல்

====================
எங்கள் உழைப்பாளர் ஏர்பிடித்தும் நெல்லின்றிப்
பொங்க வகையற்றப் போராட்டம் – தங்க
இடமின்றி செய்தாலே இங்கேநாம் வைக்க
தடல்புடலாய் பொங்கலுண்டு தான்.
வனைந்தெடுத்தப் பானை விலையின்றிப் போன
தனைஎண்ணி வாடித் தவிக்கும் - வினைஞன்
அடுப்பு விறகாய் அகத்துள் புகையும்
கடுப்பகற்றப் பொங்கலுண்டு காண்.
நாளும் தளிர்கொய்தும் நாதியற்றுப் போனோரை
ஆளும் தரப்பினர் ஆதரித்து – தோளோடு
தோள்சேர்த் தவர்வாழ்வின் துன்பம் துடைத்தெரியின்
நாள்தோறும் பொங்கலுண்டு நம்பு.
அடுப்புகளே இல்லாமல் அன்றாடம் நாட்டைக்
கெடுப்பதற்குப் பொங்குகின்றக் கேட்டை – நடுத்தெருவில்
போட்டுக் கொழுத்திப் புகைத்துடைத்து விட்டமைதி
நாட்டிவிடில் பொங்கல் நமக்கு.
*****தோழமைகள் யாவர்க்கும் பொங்கல் நல்வாழ்த்துகள்!*****
*மெய்யன் நடராஜ்