காதல் அலைகள்
"கலித்தாழிசை"
மாதுளைப் பூமேனி மானொன்று நெஞ்சத்தில்
மாதுளை யொன்று மலர்விழியால் போட்டுவிட்டு
மாதவன் செய்திடும் மாயங்கள் போலென்றன்
மாதவம் கொண்ட மனதினை வென்றாளே
மங்கை மலரிதழ் முத்தொன்று தந்தாளே......
பித்தம் தலைக்கேறி பின்னாலெ னையடித்து
பித்தளை பாத்திரம் போலுள்ளம் சத்தமிட்டு
பித்தனாய் நான்நிற்கும் போதென்றன் மென்னுயிரை
பித்தான்போ லொட்டும் பவளவாய் கொண்டு
பருவமிள நங்கை பருகி மகிழ்ந்தாள்......
ஆழ்கடல் துள்ளுகின்ற ஆனந்த வெள்ளலையாய்
ஆழ்மனம் நீந்தும் அவளின் நினைவலைகள்
தாழ்ந்த மரக்கிளை தாவிடு மோரணிலாய்
தாழ்கள் திறந்து தனிமையில் நெஞ்சின்
தசைகள் குடைந்தும் தணியாத இன்பமே......
வித்துகளாய் மண்ணில் வீழ்ந்து கிடந்தவனை
வித்தைகள் செய்தந்த விண்மீனாய் மாற்றினாள்
சித்தமெங்கும் நின்றாடும் சிற்பமாய் வந்தென்னுள்
சித்திரப் பூஞ்சிலையாய் சிந்தையி லாயிரம்
சிந்துகிறாள் புத்தொளி சித்திரை தேனிலவாய்......