இறுதி நிமிடம்

துவைத்த உடைகளை காயப்போடுவதற்காக சென்று கொண்டிருந்த மீராவின் கைகளைப் பிடித்து நிறுத்தினான் வாசு.
"மீரா நான் உன்னிடம் ஒன்று சொல்ல வேண்டும்."
மீரா அமைதியாக வாசுவின் முகம் நோக்கினாள். அவளுடைய கண்களில் தெரிந்த வலி வாசுவை பேசவிடாமல் தடை செய்தது. ஆனால் அதையும் தாண்டி தன் மனதில் இருப்பதை வெளியிட்டான்.
"நாம் இனி சேர்ந்து வாழ முடியாது மீரா."
மீராவிற்குள் இலட்சம் இடிகள் ஒன்றாகத் தாக்கிய உணர்வு. சில நாட்களாகவே வாசுவுக்கும் தனக்கும் இடையில் இடைவெளி அதிகரித்திருப்பதை மீரா உணர்ந்து தான் இருந்தாள். ஆனால் அது பிரிவிற்கான பாதை என்று அப்போது அவளுக்கு தெரியவில்லை. இப்போது தெரிந்த போதோ தாங்க முடியாத வலி நெஞ்சை அடைத்தது. கண்கள் குளம் கட்ட உதடுகள் நடுங்க "ஏன்?" என்ற ஒற்றை வார்த்தையில் காரணம் கேட்டாள்.
வாசு அவளுடைய கேள்விக்கு பதில் கூற விரும்பாதவன் போல் அவளைத் தாண்டிச் சென்றான். இது மீராவிற்கு கோபத்தை உண்டுபண்ணியது. "ஏன் என்று கேட்டேன்?" சத்தமாக கத்தினாள். அவளது கோபம் அவனையும் கோபப்படுத்தியது. அவனும் பதிலுக்கு கத்தினான்.
"ஏன்னா இப்ப என் மனசில நீ இல்லை. வேற ஒரு பொண்ணு இருக்கா." கத்திவிட்டு வேகமாக வீட்டை விட்டு வெளியேறினான்.
இப்படி ஒரு பதிலை அவனிடம் இருந்து சத்தியமாக மீரா எதிர்பார்க்கவில்லை. "அப்போ நம்ம காதல் செத்துப் போச்சா? நில்லுங்க. நின்னு எனக்கு ஒரு பதில் சொல்லிட்டுப் போங்க." அழுகையூடே பேசியவாறு அவன் பின்னே ஓடினாள்.
"ஆமாம். செத்துப் போச்சு. நான் நிம்மதியா இருக்கணும்னு ஆசைப்படுறன். தயவு செய்து என் வாழ்க்கைய விட்டுப் போயிடு." திரும்பியும் பாராமல் சொன்னவாறு நடையின் வேகத்தைக் கூட்டினான். தொடர்ந்த அவனது வேக நடை வீதியுடன் உராய்ந்தவாறு நின்ற வாகனத்தின் 'கிறீச்' சத்தத்தை தொடர்ந்து வந்த பெண்ணின் அலறல் சத்தத்தில் நின்றது.
நின்ற இடத்தில் இருந்து திரும்பிப் பார்த்தான். எது நடந்திருக்கக்கூடாது என்று அவன் மனம் எண்ணியதோ அது தான் நடந்திருந்தது. சாலை நடுவில் இரத்த வெள்ளத்தில் மீரா.
"மீரா" கதறியவாறே மக்கள் கூட்டத்தை விலக்கிக் கொண்டு அவளருகில் சென்றான். மீராவிடம் அசைவில்லை. சுவாசமில்லை. அவள் போய் விட்டாள். சற்றுமுன் அவளை தன் வாழ்விலிருந்து போய் விடு என்று சொன்னவனால் ஒரேயடியாக அவள் தன்னை விட்டுப் போய் விட்டதை ஜீரணிக்க முடியவில்லை. அவளது முகத்தை நெஞ்சோடு அணைத்தவாறு கதறி அழுதான். அவன் மனம் பத்து வருடங்களுக்கு முன்பு அவர்களது திருமணத்தின் போது மீரா கூறிய வார்த்தைகளை நினைவு கூர்ந்தது.
"வாசு உங்க மனசில எனக்கு இடம் இல்லை என்று நான் அறியும் அந்த நிமிடம் தான் என் வாழ்வின் இறுதி நிமிடம்."

எழுதியவர் : துளசி (23-Jan-17, 3:39 pm)
Tanglish : iruthi nimidam
பார்வை : 866

மேலே