புதுயுகம் உருவாக்குவோமே என் தோழா
திமிரென்னும் ஆலகால விஷம், மனிதநேயமழித்து,
மனிதனில் உள்ள மிருகத்தை வெளிக்கொணரும்,
உடற்கொழுப்பால்,
மனச் செருக்கால்,
அறிவின்மையால் ஏற்படும் உணர்வே என் தோழா...
இதில் பெருமை கொள்ள ஏதுமில்லையே
என் தோழா...
உன்னுள் திமிர் குடிக் கொண்டால், உனது அறிவையும், அன்பையும், கருணையையும் இழப்பாயே என் தோழா...
மகாபாரதத்தில் பாண்டவர்களின் மூத்தவன் தானே தருமவானென்னும் மமதை கொண்டதாலே சூதாட்டத்தில் தனது மனைவியையும், தனது தம்பிகளையும், தனது இராஜ்ஜியத்தையும் தோற்றானே என் தோழா...
திமிரால் பல அரக்கர்கள் அழிக்கப்பட்ட நாட்களை பண்டிகைகளாகக் கொண்டாடகிறோமே என் தோழா...
இருப்பினும் நாம் நாளும் திமிர்பிடித்த அரக்கர்களாய் வாழ்கிறோமே என் தோழா...
இந்நிலை மாற வேண்டுமே என் தோழா...
இல்லாவிடில் மனித இனமே இல்லாதொழியுமே என் தோழா....
இயற்கையின் அன்பால், கருணையால் பூங்காவாய் பூத்துக் குலுங்கிய பூமியில் இன்று எங்கு நோக்கினாலும் வெறித்தனங்களும்,
அதனால் ஏற்படும் வன்முறைச் சம்பவங்களும், தீவிரவாதச் செயல்களும் பூத்துக் குலுங்குகின்றனவே என் தோழா...
இந்நிலை மாற்ற என்னோடு புறப்படாயோ என் தோழா?..
அன்பால், கருணையால், தூய சிந்தனையால் யாவும் மாற உனது கடமையுணர்ந்து செய்யாயோ என் தோழா??..