காற்றினிலே கட்டியக் கனவுக்கோட்டை

காற்றினிலே கட்டினேன்நான் கனவுதனில் கோட்டையொன்றை
ஏற்றமிகு தாய்மொழியும் எண்டிசையும் நிலைபெறவே
வேற்றுமைகள் நீங்கிடவும் வேதனைகள் மாறிடவும்
போற்றுகின்றேன் காற்றினையும் பொல்லாதக் காதலையும் !


நிலையில்லா உலகினிலே நிலைத்திடுமா உணர்வுகளும்.
மலைமலையாய் உன்நினைவு மறந்திடுமா என்னுள்ளம்.
களையிழந்த மதிமுகத்தாள் கண்களிலே கண்ணீரே !
சிலையாகி நின்றுவிட்டேன் சித்திரமே பாராயோ !


பாராயோ நீஎன்னை பார்த்துவிடும் தூரத்தில்
வாராயோ தேனிசையே வந்தருகே நில்லாயோ
சேராயோ என்னோடு சேர்ந்துவிடும் நாளருகில்
சீரான செவ்விதழால் சிந்துகின்றாய் சிரிப்பொலியை . !!


சிரிப்பொலியை நான்கேட்டு சிந்தையும் மயங்கி
உரித்தாக்கும் மோனநிலை உணர்வாயோ எனதழகே !
விரிவாக்கும் தனைநோக்கி விரைந்திடுமே காதல்தீ
பரிதாபம் வேண்டாமே பாசத்தால் காண்பாயே ! !



தெள்ளமுதே தேனே பாலே தெவிட்டாத மானே
உள்ளமுத வார்த்தையிலே உண்மையிலே சொக்கி
கள்ளமிலா நேசத்தோடு காசினில் வாழ்ந்திடவே
வெள்ளை மனத்தால் வேண்டுகின்றேன் என்னவளே !!


ஆக்கம் :- பைந்தமிழ்ப் பாமணி . சரஸ்வதி பாஸ்கரன்

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (23-Jan-17, 9:36 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 305

மேலே