வீர வணக்கம் மாணவர்களுக்கு
#வீர வணக்கம் மாணவர்களுக்கு
மிருகவதையாம் சல்லிக்கட்டு
சொல்லிக்கிட்டு திரிந்தவை
பசுத்தோல் போர்த்தி
பாசாங்கு காட்டியவை
மனித வதையை
மகிழ்ச்சியோடு புரிந்தது..!
லத்தி இல்லை
வெறுங்கைதான்
வாய் நிறைய
பொய் அள்ளி வந்தவை
அவர்களுக்கு பள்ளியில்
கற்றுத்தரவில்லையாம்
பயிற்சிக்காலத்திலும்
எவரும் எடுத்துரைக்கவில்லையாம்
உண்மை பேசவேண்டுமென்று..!
சீருடை அணிந்த வன்மம்
அரங்கேற்றியது நாடகத்தை
ஆணி அடித்திருக்கிறது
மாணவ மணிகளின்
நெஞ்சினில்..!
வேல் பாய்ச்சியிருக்கிறது
தமிழனின் தேகமெங்கும்..
"காவலர்"
என்பதன் அர்த்தத்தை
அகராதியில்
இனி மாற்றி எழுதுங்கள்..!
மெரினா சாலை வேண்டும்
மேடையிட்டு
மரியாதை பெற்றுக்கொள்ள
குடியரசு தினத்தை
ஒத்திகையிட்டு கொண்டாட..
எவர் குருதி சிந்தினால்
அவர்களுக்கென்ன
விழாவேண்டும்..
வரவேற்பு வேண்டும்..!
சுதந்திரம் பறிக்கப்பட்ட நாட்டில்
உரிமைகள் போராட்டம்
குடியரசுதினத்தை
குருதியோடு கொண்டாட
விருப்பமில்லை
ஜல்லிக்கட்டு போராட்டத்தில்
மல்லுக்கட்டி வலிகொண்டோருக்கு
என் வீர வணக்கங்கள்..!
-சொ.சாந்தி-