முகத்தில் முறுவல் அகத்தில் அமைதி
முகத்தில் முறுவல் ;அகத்தில் அமைதி
இதழை விரித்து மலரும் பூவின்
மடலின் நுனியில் முத்தாய் மிளிரும்
பனியின் திவலைத் துளியில் பட்டு
தெறிக்கும் எழுநிறக் கலவையைக் காண்கையில்
முகத்தில் முறுவல்
அகத்தில் அமைதி
மடலின் நுனியில் பனித்துளி மிளிர
இதழை விரித்து மலரும் பூக்கள்
மக ரந்தசுகந்த மணத்தைப் பரப்ப
நுகர்ந்ததை நாசியும் சுகமாய் விரிகையில்
முகத்தில் முறுவல் .
அகத்தில் அமைதி
பொல பொல போல வெனக் காலை விடிய
சிலு சிலு சிலு வெனக் காற்றும் வீச
கரு கரு மேகம் பன்னீர் தெளிக்கும்
சிறு சிறு துளிகள் முகத்தில் விழுகையில்
முகத்தில் முறுவல்
அகத்தில் அமைதி
இருகை தூக்கி சிறுகால் உதைத்து
கருவிழி இரண்டிலும் முறுவலை ஏற்றி
கன்னம் குழிவிழ குமிழிதழ் விரித்து
சின்னக் குழந்தை சிரிப்பதை பார்க்கையில்
முகத்தில் முறுவல்
அகத்தில் அமைதி
துயிலைக் கலைத்து தூக்கம் துறக்கையில்
வெயிலின் வெளிச்சம் விளிம்பில் இருக்கையில்
குயிலின் குக்கூ கூவலின் கூட
புள்ளினம் பாடும் பாடல்கள் கேட்கையில்
முகத்தில் முறுவல்
அகத்தில் அமைதி
ஐந்து நட்சத்திர விடுதி களிலே
அறுசுவை உண்டி உண்பதை விடவே
பாசம் கலந்த பழந் தயிர் சோற்றைப்
பசிக்கும் வேளையில் பகிர்ந் துண்ணுகையிலே
முகத்தில் முறுவல்
அகத்தில் அமைதி.
சுவை, ஒளி ,ஊறு, ஓசை, நாற்றம்
இவ்வைம் புலன்கள் இயக்கும் இவ்வாழ்வே
இயந்திர கதியில் இடைவெளி யின்றி
இயங்கிடும் ; அதிலுள அனுபவங் களிலே
இனிதாய் இருக்கும், அனுபவம் பலவாம் ;
நினைத்து அவற்றை நிறுத்தி மனதினில்
முகத்தில் என்றும் முறுவல் பதித்தும்
அகத்தில் அமைதியை அணிந்தும் வாழ்வோம்.