வாழ்வில் தவிர்த்திடுக - கொல்லாமை --- கவியரங்கம்
தமிழ் வணக்கம் :-
தமிழுக்கு வணக்கத்தைத் தாய்மொழியில் சொல்ல
அமிழ்தமாய்த் தித்திக்கும் அன்பு .
தலைமை வணக்கம் :-
தலைமை வணக்கம் தரணி ஆள
கலைகள் சிறந்தவராம் கண் .
சபை வணக்கம் :-
நிலாமுற்றம் ஊக்கத்தை நிற்கவே செய்தே
உலாவரும் நம்மிடையே ஊன்று .
தலைப்பு :- வாழ்வில் தவிர்த்திடுக
துணைத்தலைப்பு :- கொல்லாமை .
வாழ்வில் தவிர்த்திடுக வாழட்டும் மண்ணுலகில்
தாழ்வில்லை கொல்லாமை தப்பு .
தப்பாது வாழ்வினிலே தஞ்சம் உயிரினமே
எப்போதும் வாழட்டும் என்று .
என்றும் தவிர்ப்போமே எவ்வுயிரும் நம்மினமே
மன்றுள் மறவாதே மண் .
மண்ணுலகில் வாழும் மனிதர்கள் எந்நாளும்
கண்ணெனவே போற்றிக் கனிந்து .
கனிந்து தவிர்த்துக் கரம்கொடுத்துக் காப்போம்
மனிதம் இனியுண்டாம் மாண்பு .
மாண்புடன் மானிடா மாறட்டும் கொல்லாமை
ஆண்டவன் தந்த அறம்.
அறத்தில் சிறந்ததுவே அன்புடைய நெஞ்சம்
மறத்தைத் தவிர்ப்போம் மறந்து .
மறந்தும் உயிர்களை மண்ணில் வதைத்தல்
திறமிகு செய்கையல்ல வே.
வேண்டுவனக் கிட்டிட வேகமுறப் பற்றிடக்
காண்பீர்கள் கொல்லாமை கண்டு .
கண்ணிலே தென்படும் காசினியில் வாழ்ந்திடும்
உண்ணுதல் நன்றோ உணர் .
நன்றி :-
நன்றிநான் சொல்லிடுவேன் நல்வாய்ப்புத் தந்தமைக்கே
கன்னலென சொன்னேன் கவி .
ஆக்கம் :- பைந்தமிழ்ப் பாமணி . சரஸ்வதி பாஸ்கரன்