மறக்க முடியுமா மனமே - மரபு கவிதை

மறக்கவுமே முடிந்திடுமா ?
------ மனமேநீ சொல்வாயா ?
திறக்கின்ற வாய்மொழியும்
------ திண்டாடும் என்மனத்தை
உறவாகி உரைத்திடுமே !
------ உண்மையினை அறிவாயோ !
மறவாமல் வாராயோ
------- மனம்முழுதும் நீயன்றோ !!!


கண்களினால் அழைக்கின்றேன்
------ கால்கொலுசும் தாளமிடப்
பெண்களிலே சிறந்தவள்நான்
------ பெண்களுமே காதலிப்பர்
விண்மீனின் எழிலுருவம்
------ விரைந்துவாராய் பூச்சூட்ட .
வண்ணமிகு இதயத்தினால்
------ வந்திடுவாய் என்னருகே !


கனிபோன்ற சுவையுடனே
------ கன்னிநானும் காத்திருக்கப்
பனிமலர்கள் மலர்கின்ற
------ பசுமைமிகு வேளையிலே
நனியழகு நடையழகில்
------ நளினமுடன் நானிருக்க
இனியாவும் நற்காலம்
------ இணைந்திடுவோம் என்னவனே !


உணர்வுகளின் நீட்சியினால்
------ உண்மையானக் காதலினால்
புணர்தலுமே நன்றாகும்
------ புன்னகையின் பூவன்றோ ?
மணம்வீசும் மயக்கத்திலே
------ மாலையினைச் சூடிடுவாய் !
குணமுடைய மங்கைநானும்
------- குலமகளாய் உன்நினைவே !!!!



மொத்த வரிகள் :- 20
ஆக்கம் :- கவிஞர் . சரஸ்வதி பாஸ்கரன் .

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (29-Jan-17, 4:21 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 130

மேலே