ஏன் என்னை கொலை செய்தாய் அன்பே
-றிகாஸ்
டீவியில் ஒரு திரைப்படம்..
அதில் ஹீரோ மாயாஜால வித்தைக்காரன்.. சீட்டுக்கட்டுக்களை விரித்து காட்டுகிறான், பக்கட்டில் இருந்து மிட்டாய் எடுக்கிறான், புத்தகத்திலிருந்து முயல்கள், புறாக்கள்.. அவளை இரண்டாகப்பிளக்கிறான், மீண்டும் ஒட்டிவிடுகிறான்.. அற்புதமான வித்தைக்காரன்..
அகிலேஷை இந்த திரைப்படம் அவ்வளவாக ஈர்க்க வில்லை.. அந்த வீட்டில் தனிமையில் நேரத்தை கடத்துவதற்காகத்தான் பார்த்துக்கொண்டிருக்கிறான்.
"ர்ரீங்.. ர்ரீங்..." மேசையில் இருந்த தொலை பேசி அலறியது.
"ஹலோ.. சொல்லு ஜெனி.. என்ன இந்த நேரத்துல.."
"நீ இப்போ எங்க இருக்க? அகிலேஷ்"
"பன்னிரண்டு மணிக்கு எங்க சுடுகாட்டுலயா இருப்பன்.. வீட்டதான்டி"
"உனக்கு எதுவுமில்லயே.. ஆர் யூ சேர்ப்??.."
"ஏய்.. ஏய்.. என்ன இப்போ??.. ஏன் பதட்டமா இருக்க?.. வட் த ஹெல் இஸ் திஸ்..ஏன் இப்போ அழுற ஜெனி?.. என்னாச்சு உனக்கு.."
"ஏன் என்ன கொன்ட அகி.." விம்மி விம்மி அழுவது அவனுக்கு பதட்டமாக இருந்தது.
"நீ தான்டி இப்போ என்ன கொல்லுற"
"நான் விளையாடல அகி.. நீதான் என்ன கொலை பன்னின.." ஜெனி அவனை அதட்டினாள்.. வழமைக்கு மாறாக அவளுடைய தொனி எகிறியிருந்தது..
"ஒகே.. ஒகே.. கூல்.. நான்தான் உன்ன கொலை பன்னிட்டன்.. நீ இப்போ தூங்கு.."
"நீ கத்தியால குத்தும் போது வலிச்சதுடா.. அந்த வலி உனக்கு எப்படி இருக்கும்னு தெரியுமா..??"
"ஹேய்.. வட்??... என்னடி பேசுற.."
"நீக்.. நீக்.." தொடர்பு துண்டிக்கப்பட்டு விட்டது..
மீண்டும் அவளுக்கு அழைத்தான்..
"தி நம்மர் யு ஆர் டயலிங் இஸ் கரன்ட்லி சுவிட்ச் ஓப்"
டீவியில் ஒரு பெண்ணை மாயாஜாலக்காரன் கத்தியால் இரண்டு துண்டுகளாக வெட்டி பிளந்தான்.. பார்வையாளர்கள் வாயில் விரல் வைத்து ஆச்சர்யமாக கைதட்டினார்கள்..
டீவியை ஓப் செய்துவிட்டு சமயலறைக்குச் சென்றான்.
அங்கிருந்த பிரிட்ஜ்சை திறந்து இளம் பழுப்பு நிற மது ரச போத்தலை எடுத்துக்கொண்டு சுவரில் தொங்கிக்கொண்டிருந்த கண்ணாடிக்குவளையை எடுப்பதற்காக எட்டினான். கத்தியொன்று இரத்தம் சொட்டச் சொட்ட ஆடிக்கொண்டிருந்தது..
திடுக்கிட்டுப்போனான் அகிலேஷ்.. கையில் இருந்த போத்தல் பதட்டத்தில் தவறி தரையில் விழுந்து படாரென நொருங்கிய அதே கணம் மின்சாரம் துண்டிக்கப்பட்டு அறை முழுதும் இருள்.. மையிருள்..
அங்கு ஏதோ பழைய அழுகிப்போன மாமிசத்தின் வாடை..
பளாரென ஒரு மின்னல் வெளிச்சம்..
அந்த நுன் கணங்களில் சமயலறையின் மூலையில் ஒரு முகமூடி தொங்குவது போல் இருந்தது.. திரைப்படத்தில் அந்த வித்தைக்காரன் அணிந்திருந்த அதே முகமூடி போல...
"ர்ரீங்.. ர்ரீங்.. ர்ரீங்..ர்ரீங்.." முன்னறையில் இருந்து தொலைபேசி கொலை வெறியில் அலரியது.. திக்குமுக்காடி ஓடிச்சென்று தூக்கினான்..
கும்மிருட்டில் மொபைல் வெளிச்சம் மட்டும் வியாபித்திருந்தது.
"ஹலோ.. சொல்லு ஜெனி.. நீ இன்னும் தூங்கல.."
"ஐ லவ் யூடா.."
"ஐ லவ் யூ டூ டியர்.. இப்போ என்ன பண்ற.."
"தூக்கமே வரல.. பேஸ்புக்ல உன்னோட போட்டோ எல்லாத்தையும் ரிவைன்ட் பண்ணி பார்த்திட்டு இருக்கன்.."
"ஓ.. பாரு பாரு.."
"ஆமா உன்னோட முகமூடி போட்டிருக்கிற போட்டோவ ஏன் என்கிட்ட காட்டல"
"என்ன முகமூடி.. என்ன போட்டோ.."
"நடிக்காதடா.. அதப் போட்டிருக்கும்போதுதானே என்ன கொன்ட.. ஹி.. ஹி.."
"வாட்..?? ஹேய்.. இப்போ ஏன் சிரிக்குற.. ஹே ஜெனி சிரிக்குறத்த நிறுத்தப்போறியா இல்லயா.. பிளீஸ் டோன்ட் பிளே வித் மி.." அவளது சிரிப்பு அகோரமானது..
சிரிப்பை நிறுத்திய அதே கணம் அவளது குரல் மென்மையானது..
"அகி.. நான் அப்போவே சொன்னனேடா.. இது ஆபத்து, இப்புடி பண்ணாத.. நீ என்னய கத்தியால குத்தும் போது எப்புடி வலிச்சது தெரியுமாடா?.." அப்பாவித்தனமாக சொல்லிவிட்டு விசும்பினாள் ஜெனி..
"ஹேய் ஜெனி.. வட் ஆர் யூ டோக்கிங் அக்ஷுவலி.."
"நீக்.. நீக்.." தொடர்பு துண்டிக்கப்பட்டது.. பளீரென்று அறை முழுதும் வெளிச்சம்.. மின்விளக்குகள் மீண்டும் ஒளிபெற்றிருந்தன.
“Don’t do it, it’s dangerous!
I don’t give a fuck, I’m going.” டீவி யில் இருந்து ஒரு பெண்ணின் குரல் சத்தமாக அலறியது..
கதாநாயகி முகமூடி அணிந்த மாயாஜால வித்தைக்காரனான ஹீரோவை பார்த்து கோவமாக பேசிவிட்டு திரும்பி நடக்கிறாள்..
அந்த வித்தைக்காரன் அவனது கைகளை தானே வெட்டிக்கொண்டு வித்தை காட்ட முயற்சிக்கிறான்.. பின்னணியில் ஒருவிதமான மரண வயலின் இசையும் பழைய அராபிய பாடல் போல ஒரு பாடலும்..
"நான் டீவி ஒப் பண்ணித்தானே வச்சிருந்தன்.. ஹொவ் இஸ் இட் பொஷிபிள்?.." பதட்டமடைந்தவாறு டீவியை மீண்டும் ஓப் செய்கிறான்..
சமயலறையில் யாரோ பேசுவது போல் கேட்கிறது.. பேசவில்லை யாரோ விசும்புகிறார்கள்.. அது ஆண்குரல்.. ஏதோ ஒரு அமானுஷ்யம் தன்னை சூழ்ந்துவிட்டதை தெளிவாக உணர்கிறான் அகிலேஷ்.. கைகள் படபடத்தது.. தெளிவான நடுக்கம்.. உரோமம் சிலிர்த்தது.. கீழ் உதட்டை மெதுவாக பற்களால் கடித்துக்கொண்டவாறு சமயலறைக்கு செல்கிறான்.. மறைந்திருந்து கதவிடுக்கால் எட்டிப் பார்க்கிறான்.. அங்கு உயரமாக கறுப்பு நிற போர்வையணிந்த வித்தைக்கார ஹீரோ.. அவனுடைய பின்புறத்தைத்தான் அகிலேஷால் பார்க்க முடிந்தது.. பிடரியில் அகோரமாக சிரிக்கும் இரத்தம் படிந்த முகமூடி அணிந்திருந்தான்.. அறையில் இருந்து மாமிச வாடை மூக்கை குடைந்தது..
அவன் எதையோ முகர்ந்தவாறு கதவு நோக்கி மெதுவாக திரும்பினான்.. அகிலேஷின் விழி பிதிங்கியது..
"இட்ஸ் மி.. அது நானேதான்.. வட் த ஹெல் இஸ் கொயிங் ஹியர்.." அவனது கைகளில் ஜெனியின் தலை.. தலை மட்டும்.. கழுத்தில் இருந்து இரத்தம் வழிகிறது.. அறை முழுதும் இரத்தம்..
மின்சாரம் துண்டிக்கப்பட்டு விட்டது. கும்மிருட்டு..
முன்னறையில் இருந்து ஜெனியின் கதறல் கேட்கிறது.
"அகிலேஷ்.. பிளீஸ்.. என்னைக் கொல்லாத.. " மரண ஓலமாகத்தான் அவனுடைய காதுகளுக்கு கேட்டது.. அவளுடைய கதறல் வீடு முழுவதும் வியாபித்திருந்தது..
"ஏய்.. அகி எங்கடா இருக்க.. பயமா இருக்குடா.. பிளீஸ் அகி என்ன இங்க இருந்து கூட்டி போயிடு அகி.." விசும்பல் கேட்கிறது..
"ஏய்.. வாடா..." ஆக்ரோஷமான அதட்டல்..
தனியாக இந்த வீட்டில் வசமாக மாட்டி விட்டேன் என்பதை உணர்ந்தான்.
எப்படியாவது வீட்டை விட்டு வெளியில் தப்பி ஓடிவிட வேண்டிய நிலையில் முயற்சித்தபோதும்.. அவனால் அந்த இடத்தை விட்டு நகர முடியவில்லை.. பலம் கொண்டு முயற்சித்தான்.. ஏதோ ஒன்று அவனது கால்களை இறுகப் பற்றிபிடித்து இழுத்தது.. அகிலேஷ் தலை குப்புற விழுந்தான்..
அருகில் இருந்த மேசை அவனது கன்னத்தை பலமாக பதம்பார்த்தது..
"ஸ்.. ஆ.." வலித்தது..
"ஸ்சிட்.. கனவா?.." இப்போதுதான் தான் கன்டது கனவென்று உணர்ந்தான்.. கண்களை கசக்கியவாறு பெருமூச்சு ஒன்றை இழுத்து விட்டான்..
டீவியில் மயாஜால வித்தைக்காரன் நடனமாடிக்கொண்டிருந்தான்.. குழந்தைகள் அவனை சுற்றி கைதட்டி மகிழ்ந்து கொண்டிருந்தார்கள்.. சீட்டுக்கட்டை காட்டி வித்தை செய்து அவர்களை சிரிப்பூட்டிக்கொண்டிருந்தான்..
மேசையில் இருந்த தனது மொபைலை எடுத்து பார்த்த போது நேரம் இரண்டு மணி தாண்டியிருந்தது.. ஐெனியிடம் இருந்து இரண்டு மிஸ்ட் கோல்கள்..
"இப்போ அவள் தூங்கி போயிருப்பாள்.. காலைல பார்த்துக்கலாம்"
டீவியை அணைத்தான், அறையின் கதவு ஜன்னல்களை சரிபார்த்து மின்விளக்குகளை அனைத்து விட்டு படுக்கைக்கு சென்றான்.. சற்று நேரத்தில் உறங்கிப்போனான்..
நிம்மதியான தூக்கம்..
காலையின் மிருதுவான குளிர் அவனது உடம்பின் போர்வைகள் மூடாத பகுதிகளில் ஸ்பரிசித்தது..
எழுந்தான்.. புத்துணர்வுகள் புடை சூழ்ந்திருந்த முகம்..
தலையில் ஏதோ ஈரம் கசிவதுபோல இருந்து.. தடவிப்பார்த்தபோது இரத்தம்.. திடுக்கிட்டு அண்ணார்ந்து பார்த்த போது ஜெனி தூக்கில் தொங்கிக்கொண்டிருந்தாள்.. அவளது கால் வழியாக இரத்தம் சொட்டிக்கொண்டிருந்தது..
பதறினான்.. நிலைபுரண்டு எழுந்து ஓடினான்.. யாரோ அவனைப்பிடித்து பலமாக இழுத்தார்கள்.. தலை குப்புற விழுந்தான்..
அகிலேஷ் கட்டிலில் இருந்து கீழே விழுந்து கிடந்தான்..
"ஸ்சட்.. கனவு.."
நேரம் இப்போது பன்னிரண்டு மணி.. மீண்டும் உறங்கிப் போனான்..
நிம்மதியான உறக்கம்..
"டாக்டர்.. உங்கள பார்குறத்துக்கு இன்ஸ்பெக்டர் அரவிந் வந்திருக்கார்"
"யெஸ்.. உள்ள வரசொல்லுங்க"
"சார்.. அகிலேஷோட கன்டிஷன் எப்படி இருக்குன்னு தெரிஞ்சுக்கலாமா?"
"பிசிக்கலா ஹி இஸ் பேர்பக்ட்லி ஆல் ரைட்.. பட் சைக்கோலஜிக்கலா ஹீ இஸ் இன் வெறி ஸ்ட்ர்ரேன்ஜ்"
"அவர் கோமா ஸ்டேஜ்லன்னு சொன்னீங்ளே டாக்டர்.."
"யூ ஆர் க்கரக்ட்.. பட் கோமா ஸ்டேஜ் என்டு சொல்லிட முடியாது.. இட்ஸ் சம்திங் வெரி ட்டெரிபிள்.. அதவிட மோஷமான நிலைமை"
"அவரால சுய நினைவோட பேச முடிஞ்சாதான் இந்த கேஸ்ல இருந்து எனக்கு கொஞ்சமாவது ரிலக்ஸ் ஆக முடியும் டாக்டர்.. பெரிய இடத்து சமாச்சாரம் வேற.. பிரைமினிஸ்டர் வரைக்கும் கேஸ் ரீச்சாவிருக்கு.. அந்தப் பொண்ண பல தடவ கத்தியால குத்தி சிதச்சிருக்கானுங்க.. ரோட்டோரமா ஒரு ட்ரைனேஜ் க்கனெல்ல அகோரமா பொணம் கெடந்திருக்கு.. அதோட போட்டோ வேற மீடியாக்கு லீக்காயிடுச்சி.. சோஷல் மீடியா.. மகளிர் அமைப்புக்கள்னு அவனுங்க பாட்டுக்கு தொல்ல பண்ணிட்டே இருக்கானுங்க.. அந்த பொண்னு பேரு ஜெனிபர்.. அதோட வயசுல எனக்கும் ஒரு பொண்னு இருக்கு டாக்டர்.. என்னால தூங்கக்கூட முடியால..
ரெண்டு பேரும் லவ்வர்ஸ்.. லேட் நைட் சினிமா பார்த்திட்டு பைக்லதான் வந்திருக்காங்க.. அப்பதான் இவனுங்க இந்த கொடுமயெல்லாம் பண்ணிருக்கானுங்க..
ஏன் பண்ணினானுங்க எதுக்கு பண்ணினானுங்க எதுவுமே புரியல.."
"கார்ம் டவுன் அரவிந், அகிலேஷோட தலையில பெரிய ஸ்டீல் ராட் ஆல பல தடவ அடிச்சிருக்கானுங்க.. சாகனும்னுதான் அடிச்சிருக்கானுங்க ஆனா அவர் பொலச்சிட்டாரு..
அவர் இப்போ கனவுலகில்தான் வாழ்றார்.. அவருக்குள்ள இருக்கிற கோவம் இயலாமை ஏக்கம் எல்லாம் சேர்ந்து அவரோட கனவ கலைச்சிட்டே இருக்கு.. அவரால ஒரு கனவுல நிரந்தரமா இருக்க முடியாது.. கனவுக்குள்ளேயே அவர் முழிச்சிடுறார்.. அப்புறம் தான் கனவு கண்டதாகவும், இப்போ முழிச்சிட்டதாவும் பீல் பண்றார்.. ஆனால் அவரால நிஜ உலகத்துல முழிக்க முடியல.. கனவுக்குள்ளேயே கனவு தொடர்ந்துட்டே போவுது.."
"ஹெள டூ பிரிங் அன் இன்ட் போர் திஸ் டாக்டர்?.."
"இது அகிலேஷால மட்டும்தான் முடியும். அவரோட கோவமும் ஆத்திரமும் தனியனும்.. தான் எழும்பி வரனும்னு ரொம்ப பிரயத்தனம் எடுக்கார், அக்சுவலா அவசரப்படுறார்.. அதனால அவர் அடுத்தடுத்த கனவுகளுக்குத்தான் போக முடியுமே தவிர நிஜ உலகத்துல எழுந்திருக்க முடியாது.. அவரோட பல்ஸ் செக் பண்றப்போ அவரோட கனவுகள் ரொம்ப ஆக்ரோஷமாகவும், வன்முறையாவும் இருக்கிறது தெரியுது.. கனவுகளின் ஆக்ரோஷங்கள் எப்போ குறையுதோ அப்போதான் அவர் கியோர் ஆக க்கூடிய ஸ்டேஜ்கு வாறார்.. கூடிய சீக்கிரம் அவரால வரமுடியும்னு நம்புங்க.. பிரே பார் ஹிம்.. வீ ஆர் ரையிங் அவர் பெஸ்ட்"
"ஒகே டாக்கர்.. லெட்ஸ் மீட் யு எகய்ன்"
போகும்போது அருகில் இருந்த கண்ணாடி அறையை நெருங்கிச் சென்று பார்த்தார் இன்ஸ்பெக்டர் அரவிந்.
நிம்மதியாக பல இயந்திரங்களுக்கும் குழாய்களுக்கும் மத்தியில் உறங்கிக்கொண்டிருந்தான் அகிலேஷ்..
ஆனால் அவன் இருப்பது நரிகளும் பேய்களும் சூழ்ந்த சுடுகாடு.
முற்றும்.