விழிகள்

அதோ அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் நோக்கி நடந்து வருகிறார்கள். இடைவெளி சுமார் இருபது அடி இருக்கும்...

அவனுக்கு அவள் வருவது தெரிந்துவிட்டது.. அவ்வளவு தூரத்திலும் அவள் கை உரோமங்கள் சிலிர்ப்பது அவனுக்குத் தெரிகிறது.. அல்லது அவன் கற்பனையா..? தலை நிமிர்ந்து நோக்க, அவள் தலை குனிந்த வண்ணம் நடந்து வருவது தெரிகிறது.

அவளுக்கும் தெரிந்திருக்கிறது அவன் வருவது.. அவன் கேசம் காற்றில் பட படப்பது உணர முடிகிறது... அல்லது கற்பனையா.? சற்று தலை நிமிர்கிறாள்.. அவன் தலை குனிந்த வண்ணம் நடந்து வருவது தெரிகிறது...

நொடிக்கொரு முறை இருவரும் தலை நிமிர்ந்து பார்க்க இருவருக்கும் மற்றவர் தலை குனிந்து நடந்து வருவது போல்தான் தோன்றியது... எத்தனை கணங்கள் அந்த இருபது அடி தாங்கியிருக்கும் என்று அங்குள்ள புல், பூண்டு, பூச்சிகளுக்குள் ஒரு பெரிய விவாதமே நடந்து கொண்டிருந்தது... அவைகளுக்கு ஒவ்வொரு நொடியும் ஒரு யுகமாகவே தொன்றியிருக்க வேண்டும்...

இதோ நெருங்கி விட்டார்கள்....

இருபது அடியில் ஓராயிரம் முறை தப்பித்த விழிகள் சந்தித்துக் கொள்கின்றன.. இமைகள் பட படக்கின்றன.. அசையாக் குளத்தில் ஒரு கல் விழுந்தது போல் விழிகளில் பேரலை அதிர்வுகள். இதழ் ஒரு மெல்லிய புன்னகை பூத்ததா என்று சட்டென்று யூகிக்க முடியவில்லை... இமைப் பொழுதில் கடந்து விடுகிறார்கள்... தலை குனிந்த நடை தொடர்கிறது...

இவர்கள் இன்னும் பத்தடி சென்று திரும்பிப் பார்ப்பார்களா என்று அங்குள்ள புல், பூண்டு, பூச்சிகள் மற்றும் சற்றுமுன் மலர்ந்த பூக்களும் உரத்த குரலில் விவாதிக்கத் துவங்கின...

யுகங்கள் மெல்ல மெல்ல வேகமாகக் கடக்கின்றன....

---- முரளி

எழுதியவர் : முரளி (2-Feb-17, 9:24 am)
சேர்த்தது : முரளி
Tanglish : vizhikal
பார்வை : 627

மேலே