மாதத்தின் முதல் நாள்
வறுத்தெடுத்த மாதக் கடைசிக்கு
விடைகொடுத்துப் பிறப்பெடுத்த
மாதத்தின் முதலாம் நாள்
சந்தோசத்தின் மழையைப்
பெய்வித்து விடுகிறது
பள்ளிக்கூடப் பிள்ளையின்
சுற்றுலா பயணத்தைப்போல்
கடன் கொடுத்தவனின்
வசூல் பயணம் குதூகலமாக
தொடங்கிவிடுகிறது இன்று
வட்டியை எதிர்பார்த்துப்
பிழைப்பு நடத்தும் மனிதர்களின்
வங்கிக் கணக்கைபோலவே
நிறைந்து விடுகிறது இந்நாளில்
அவர்களின் மனதும்.
முற்பணம் எல்லாம் பிடிக்கப்பட்ட
சம்பளக் கூட்டில் எஞ்சியிருப்பதில்
முழுமாதத்தையும் ஓட்டத்
தீட்டுகின்ற வரவு செலவு திட்டத்தில்
துண்டு விழும் நிலையை விவாதிப்பதற்கு
ஏழையின் வீடு பாராளுமன்றமாய்
ஆகிப்போகிறது இன்று
மனைவியரின் ஆனந்தக் கனவுகளுக்கு
வருணம் பூசிக்கொண்டு
கணவர்களின் வருமான வண்டியின்
ஊர்வலம் தொடங்கும்
மாதத்தின் முதல்நாளில்
குடும்பத்தின் இரதோற்சவம்
கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது
*மெய்யன் நடராஜ்