கூடா நட்பு - கே-எஸ்-கலை

எந்த புலியாவது
பிச்சை எடுத்து
கண்டதுண்டா நீங்கள்....?
யானைகளைக் கண்டிருப்பீர்கள் !

ஒட்டிய வயிறோடு...
பட்டினி கிடக்கும் ஓநாய்
கண்டிருக்க மாட்டீர்கள்
ஆனால் நாய்கள் !?

தூசனம் பேசுமா
தூக்கணாங்குருவிகள்?
கிளிகளைப் பாருங்கள்...
ஜோசியம் சொல்கின்றன !

கோவிலுக்கு நேந்துவிட்ட
கரடியினம் எங்குமில்லை....
கொம்பு வைத்திருந்தாலும்
கடாக்கள் அடிமையே !

சிறுத்தை மடி சுரந்த பாலை
சிங்கங்கள் திருடுவதில்லை....
கன்றுகளின்
கால்வயிறு நிரம்புவதும்
மாடுகளின் பெருங்கனவே !

வித்தைக் காட்டும்
வேங்கைகள் எங்குமில்லை
சீத்தைக் கட்டிய
குரங்குகள் நிறையவுண்டு...!

களவாடி தின்றால் தான்
மனசு நிறைகிறது
எலிகளுக்கும்...பூனைகளுக்கும் !

சந்தி வெளிகளில்
சல்லாபம் செய்யும்
தந்திர நரிகளைக் கண்டதில்லை
வன்புணரும் நாய்கள்
வாசல்தோறும் காண்பதுண்டு !

கூடா நட்பு
கேடாய் முடியும் !?

எழுதியவர் : கே-எஸ்-கலை (3-Feb-17, 9:07 am)
பார்வை : 546

மேலே