கவிஜியின் நிழல் தேசத்துக்காரனின் சித்திரப் பறவைகள் - நூல் விமர்சனம் - காதலாரா
கவிஜியின் நிழல் தேசத்துக்காரனின் சித்திரப் பறவைகள்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நூல் விமர்சனம் - காதலாரா
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஒரு பறவை தன் சிறகில் வண்ணமிட்டு .. அது ஒட்டு மொத்த வானைத் தொட்டு..தீரா தாகத்தில் பால்வெளியை முட்டி மோதி..மானுடம் பேசும் கவி ஊசிகளை கடவுளின் கரத்தில் ஆழ புகுத்த சாத்தான் சாயலும் சரியெனும் வரிகளை ..வாசகன் வெறுமனே கடக்கவோ மறக்கவோ முடியாது ...அத்தனை அழுத்தம் ..நூலெங்கும்
அட்டைப்பக்கம் முதல் அத்தனை பக்கத்திலும் தன்னை ஒரு பறவையாகவே உருமாற்றி ..சித்திர பறவையின் சீரிய கோணத்தை கவி கருவில் ஊற்றி ..வரி முழுக்க தேன் நதி கடக்கும் கரைகளை ...மணலோடும் நிலவோடும் ரசிகனுக்கு விட்டு செல்லும் கவிஞரின் தேசம் வெறும் நிழல் தேசமட்டுல்ல ...அது பெரும் நிற தேசம் .
என்னுரையில் எழுமிந்த பறவை ..கனவு ..நிஜம் ..கற்பு ..கற்பனை ..தீராக் காதல்..விற்பனை.. கல்வி..யாசகம் ..யட்சி ..பிணம் ..மனம் ..குணம் ..விதி ..வலி ...முரண் ..முதுகு ..வீடு ..காடு ..ஜென்...பெண் ..அம்மு ..துளி இரவு ..வெற்றிட சிவப்பு ..ஆன்மா ...என பெரும் தேசம் பறந்து முகர்ந்து ..பல முறை கிளர்ந்தெழுந்து ...தொடுத் திரையில் தொலைந்த நம் நெஞ்சைக் கொத்தி..மூளைக்குள் முடங்கிய புத்தியின் வேர் கீற என்றும் பறக்கிறது நிழல் அலையாய்...நிஜத்தின் அசுர கலையாய்.
செத்தே போனான் புத்தன் ..இப்படி ஒரு கவிதை ..யாவரும் ஆளுயர சதையென ஓங்கி அடித்துக் கொல்கிறது...ஆணென நிரூபிக்க ஏனிந்த அற்ப செயல் ..பெரும் ஆசை ஆடைக்குள் அடங்கி கிடக்கும் அறிவு கொள்கையை எந்த மார்பிற்குள் மடித்து வைப்பீர்கள்..வாழ்வாதாரம் அழிக்கும் சுகாதார திட்டத்தின் தீர்வெது.??..ஒட்டு மொத்த புத்தனையும் எப்படி கடக்கிறோம் ஏன் மறக்கிறோம் ..?
அம்முவின் கவிதை ..அள்ளி அணைத்த வரிகளில் அவளும் ..கள்ளிப் புணர்ந்த மொழிக்குள் கவிஜியும் ..மாறி மாறி நூலகம் நிரப்பும் ரகசிய ஒளிக்கீற்றாய் நுழைகிறார்கள் ..நீல சட்டையும் ரோஸ் வண்ணமும் கவிக்குள் புதைந்துக் கிடக்கும் காதலை ஒரு பாதையில் விட்டு விட்டு ஒதுங்க இயலாது ..
நெருப்பாய் எரிவது நீரின் நிலையா..திரியின் பிழையா ..?.. நீண்ட இரவின் துயரத்தைத் தூக்கிலிட ..வரையறை மதுவில் நகைத்து சொல்கிறார் ..எத்தனை கவிதை சருகெனப் பறந்தது ..மிருக மூளையின் முடிச்சுகளை அவிழ்க்கவே முடிவதில்லை ..கோழிக் கொன்று தின்னும் மானுடத்தில். நான்காம் கொலை தடுக்கும் தாயின் தர்க்கத்தை சுயநலத்தில் சுருக்கவில்லை இவர் .. இவரின் யாசக வேண்டுதல் உடல் முழுக்க உறுத்தும் வலி தூவி நிற்கிறது ..எதன் பசி ஏதேன் தோட்டத்தில் மின்மினி கூட்டம் நிறைய செய்தது ?..
கவிதை காடுகளில் ஆர்ப்பரிக்கும் அக்னிக்குஞ்சு பாரதி பிள்ளை ..அதை மீறிப் பறப்பதே கவிஜி எல்லையென கவி வரிக்குள் ரெளத்திரம் எழுகிறது ..பிரமிளின் நீட்சியாகவும் ..நகுலனின் மறதியாகவும் மாறி கிடக்கும் கவிஜி ..ஆன்மாவின் அடுத்த கட்ட ஆத்திரத்தை உயிர் படித்து எழுதுகிறார் ..மயிர் எடுக்கும் அவனே உடல் எரியும் வரை நிற்கிறான் ...நாய்கள் துரத்திய நெஞ்செலும்பு எனும் கவிக்குள் மாண்டுப் போன தேகத்தின் மகத்துவ கோத்திரத்தை ..ஆரிய திராவிட அரசியல் வாதத்தை ..கரு கலைப்பு வேகத்தை வேர் வெட்டி வீசுகிறது ..
இரண்டு முறை ஒரே தலைப்பில் வந்துள்ள கவிதை .."அவள் செய்த கவிதை" ..அது அம்முவாகிய கவிதை.. அம்முவிற்கான கவிதை ..அதில் கவிஜியின் விரக்தியும் ..விட்டு சென்ற அல்லது தொலைத்து விட்ட இடமும் நேர்பட நிற்கிறது ..குடைப் பிடித்த அம்முவின் கவி நடையும் சொல் விடையும் ...ஒவ்வொரு கவிஞனனும் கடந்தோ ..கடத்தியோ வரும் நிகழ்வின் நீட்சியது ..அடுத்து எங்கள் ஊர் ராஜகுமாரி..கனவு தேவதை ..ஒருவனுக்கு அல்ல ..ஊரில் சுற்றும் ஒவ்வொருவனுக்கும் ..அவள் இரவை கொன்றவன் யார் ..அது ஒட்டு மொத்த ஊரின் ஆண் ..அவள் மூலமே எல்லாம் அறிமுகம் என்ற கவிஞர் மானுடத்தை அவள் உருவத்தில் வரைகிறார் ..
வெற்றிட சிவப்பு ..புலம் பெயரும் கவிதை ..காவுக் கொடுக்கும் ரணம் ..ஒரு பிடி சோற்றுக்கு எத்தனை விடியலின் மரணப் பிடி ..பாலுறுப்பை விற்கும் நிலை ..அது மானுடப் பிழை ..வறுமை ஒழிக்கா நாகரிகத்தில் பின்னி பிணைந்து என்ன பயன் ..?.. எல்லாம் விட்டு வா ..ஆதி விலங்காய் மாற ..அப்படியே மழலை தேடும் வரிக்குள் குங்க்பூ பாண்டா கவிதை ..நயவஞ்சக பெற்றோர் நாமென யார் கூறினும் தவறில்லை ...இதன் நீட்சியை ஒரு பிச்சைக்காரி ..குடித்து முடித்து படுக்கும் பிணத்திற்கு எதற்கடா உயிர் ?...மது ...அரசின் நிதி ..பிச்சை எடுப்பதே லட்ச பிள்ளையின் விதி ..
கவிஞனின் தெய்வம் காதல் ..காதலின் தெய்வம் அது அம்முவின் மடி...நொடிக்கு நொடி உயிர் குடிப்பதும் ..உயிர் கொடுப்பதும் அதுவே ..கொலுசுப் பரல் அவளின் குரலென தொடங்கிய "காதலின் தெய்வம் உன் மடி " கவி வரியெங்கும் மெய் பிழியும் உணர்வலை .. "கிழியும் இதயத்தை என்னவென்பேன் ...??" வெட்டி எடுத்தப் பின்னும் தீ மூட்டும் இந்தப் பறவையின் வரிக்குள் மயங்கி கிடப்பதில் மோட்சம் கிட்டும் . "பாரடி இன்னும் ஓரடி என் நரம்பெல்லாம் புது பறையடி" ..என வசீகரம் மீற எழுதி எழுதி வாழ வைக்கிறார் .." கவிதை போல் நீ நடி " என்பது அம்முவோடு வாழ்ந்த வரிகளின் உச்சம் .."செத்தும் விடாத பித்தம் நீயடி "...எனைக் கொன்றே விட்டது இந்த கவிதை ..
"சாலைவாசிகளின் நிலவிற்கு வண்ணமிருக்கிறது " எனும் கவிக்குள் ஒளிந்து கிடக்கும் கொடூரம் பலரின் வாழ்வு .கடைசி வாய் சோற்றின் முடிவென்ன ?...மழையும் வெயிலும் ஒழுகி விழும் வீட்டின் நிலை ..அதை தவிர்க்க எந்த கடவுள் என்ன செய்தார் .." திரைவாசிகளின் " ஒரு நிகழ்வு உள்ளம் குத்தி ஊமையாக்குகிறது ..இப்படியே நீளும் " பெரிய வீட்டின் மிச்சம் "..தொலைத்த சந்தோசம் ..பூட்டி வைத்த கதவிற்க்குள் நாம் காலத்தை கடத்தி விட்டோம் ..படிக்கட்டு கிணற்றில் நீரின் சுவை தேன்..பெரும் வீடு சுற்றி காற்று கொடுத்த உயிர் சுவாச மரங்களின் கல்லறையில் எத்தனை வீடு கட்டினோம் ..இன்னும் நம் கல்லறை ஒட்டிய மரமே மிச்சம் ..இன்னும் சுடுகிறது ..
யட்சியின் மிச்சம் கவிக்குள் மூன்றாம் பால் முளைத்து விடுகிறது வரி வரியாய் ..கூந்தலை மத யானையோடு ஒப்பிட்ட கவிஞன் கவிஜி மட்டுமே ..அள்ளி பருகனும் அவனின் போதையை .." மற்றவை நேரில் " இன்னும் கூடி நிறைந்த வேகம் ..கூடும் நிலையின் தாகம் ..வியர்வை குடித்து தீப் பற்றிய காமத்தின் கவியிது..இரவு முழுக்க பிழைத்து... நிலவை தழுவும் களமது..ஒவ்வொரு கணமும் ரசனை ..அது மட்டுமே கவிஜியின் வினை ..
புரியாத நள்ளிரவை புரிய வைக்கும் புத்தனாகவும்..பெரும் கோபத்திற்கு முன் கடிக்கும் எறும்பையும் ஊதி தள்ளும் மானுட உருவாகவும் இந்த பறவை பறக்கும் இடமெங்கும் உயிர் இறகை உதிர்கிறது ..மாயச் சுவரில் பூட்டி வைத்த கரிசனத்தை அடுத்த தலைமுறைக்கு சுட்டிக் காட்டவே தனைக் சுட்டு கொல்லும் நம் காலம் நடப்பதும் ..கடப்பதும் கடவுளின் செயலெனில் ...அக்கடவுளின் கூட்டை கொத்தி தின்பதே இந்த சாத்தான் பறவையின் மானுடம் ...சரி என்பது யாவருக்கும் பொது ..சரிகளின் கருவாகவே இந்த சாத்தான் எங்கும் எழுகிறது..
தொண்ணூறுகளின் வாழ்வு சுவையை ..கல்லூரி அகத்தை..அந்த நட்புகள் முகத்தை தொடுதிரை மனதில் உறைய வைக்கிறார் ..நண்பன் என மார்தட்டி நிற்கும் எத்தனை முகங்கள் முகமூடி தரித்துத் தொலைகிறது.."அது " எனும் கவிதை உங்களுக்கே உரிய கோணத்தில் வாசிக்கலாம் ..அகிம்சை வரியில் புத்தனை சிலையாக்கிய கவிஜி நிழலல்ல ..நிஜம் ..
நம்மை தொலைத்த ..நாம் ஏன் அடுத்த தலைமுறையை தடுக்க வேண்டும் .."சே" வின் மழைக்குள் துளி துளியாய் நனைக்கிறார்..வந்து விடுங்கள் ..குடைப் பிடிப்பதும் ..குடை வெறுப்பதும் அவன் கலை .." சே" வை அவன் வானத்தில் பறக்கும் விடும் இந்த பறவை தான் பாட்டியை மறப்பதே இல்லை ..நிழல் தேசத்தை பாட்டிக்கு சமர்ப்பித்த கவிஜி வெளி மிக பெரியது.. கவிதாவின் கனவது..
ஆழ்ந்த கவிப் பசிக்கு பெரும் தீனி நிழல் தேசத்துக்காரனின் சித்திரப் பறவைகள்..எத்தனை முறைப் படிப்பினும் கவிதைக் கோணம் சுடும் ..வெறும் வெளியை கூர் உளியால் செதுக்கும் கலை கவிஜி கைக்குள் ..நகுலனையும் ..பிரமிளையும்...இன்ன பிற யாவரையும் வேரோடுப் படித்து மாரோடு தைத்து ரசிக்கும் ரசிகனாக ..சக கலைஞனை கைக்கோர்த்து உயர்த்தி நிற்கும் பக்குவம் வரியெங்கும் ..வாழ்வெங்கும் கொட்டிக் கிடக்கிறது ..ஒரு தவமென மாறும் இந்நூலின் வாசிப்பு..வேறு தேசம் மிதக்க செய்யும் ..அதில் உடல் ஊறி சிவக்க..எழுத்துருவம் இரு புருவம் கீறும் ..மெல்ல மெல்ல கர்வம் கழன்று ஓடும் ..சிறகில் சிறைப்பட்ட மனம் மானுட கூடாகும் ..
- காதலாரா
நூல் ஆசிரியர் : கவிஜி
வெளியீடு: அன்னை முத்தமிழ்ப் பதிப்பகம், சென்னை - 600041
நூல், ஆசிரியர் கவிஜியிடமும் (கைபேசி 8807215457), கோவையில் உள்ள விஜயா பதிப்பகம், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், ஸ்வப்ணா புக் ஹவுஸ் ஆகிய புத்தகக் கடைகளிலும் மட்டுமே கிடைக்கும்.