பணம் பாபம் போக்கிடம்

பகவத் சிருஷ்டியில் தாவரம் (செடி, கொடி, மரம்) ஊர்வன, மிருகம் மனிதன் முதலிய அனைத்து ஜீவராசிகளிலும் மனித இனத்திற்கு மட்டும் “பாபம்” தொடர்புடையது. செய்யக் கூடாததை ஒருவன் செய்யும் போது அவனுக்கு பாபம் சம்பவிக்கிறது. ஒருவன் பாபம் செய்வதற்கு தூண்டுதலாக இருக்கும் காரணங்களில் “பணம்” முக்கிய இடம் பெறுகிறது. வடமொழியில் இது “அர்த்தம்” எனப்படுகிறது.

அன்றாட வாழ்க்கை நடைபெற பணம் சம்பாதிக்கவேண்டும். அதை நியாயமான முறையில் சம்பாதிக்க வேண்டும். சம்பாதித்தப் பணத்தை நியாயமான முறையில் செலவழிக்க வேண்டும். இந்த இரண்டு வழிகளிலும் ஒருவன் தவறுகள் செய்வதற்கு வாய்ப்புகள் உள்ளன. ஒருவன் தர்ம நெறிகளை நன்கு தெரிந்து கொள்ள வேண்டும். அதன் பிறகு அவன் எச்சரிக்கையுடன் தர்ம நெறி தவறாது பணம் சம்பாதிக்க வேண்டும். கிடைத்த பணத்தைக் கொண்டு இல் வாழ்க்கையை மகிழ்ச்சிகரமாக நடத்திக் கொள்ள வேண்டும். இதை வரிசைப்படுத்தும் வகையில் திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள் அறம், பொருள், இன்பம் என்று மூன்று பிரிவிலடங்கியுள்ளது.

வடமொழியில் “ஆசாரம்” என்ற சொல் “பரிசுத்தம்” என்ற பொருளை குறிக்கிறது. ஒருவன் எப்போதும் ஆசாரசீலனாக இருக்க வேண்டும். அவனுடைய சுத்தம் கெடாதவாறு தன்னை காப்பாற்றிக் கொள்ள வேண்டும். இந்த ஆசாரம் நான்கு பிரிவிலடங்கியது. மனம், வாக்கு, செயல்பாடு, சம்பாதிக்கும் தனம் ஆகியவை. ஒருவனுடைய மனத்தூய்மை கெட்டுவிட்டால் அதை எவ்வளவு மூடி மறைத்தாலும் அவனுடைய வாக்கு அல்லது செயல்பாடு காட்டிவிடும். அதேபோல் பேசும் போது தூய்மையை காப்பாற்ற வேண்டும். பிறர் மனம் நோகும்படியோ, அல்லது உண்மைக்கு புறம்பாகவோ பேசக் கூடாது. அடுத்ததாக செய்யும் கார்யங்கள் ந்யாயமாக இருக்க வேண்டும்.

பிறர்க்கு கெடுதல், பழிதீர்த்தல், பிறர் பொருளை அபகரித்தல் இத்யாதிகள். சரீரத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். கடைசியாக தனத்தை ந்யாயமான வழிகளில் பணத்தை சம்பாதிக்க வேண்டும்.மனிதன் ஸ்வபாவமாக ஆசைக்கு வசப்பட்டவன். பணத்தைசம்பாதிப்பதில் ஆசை காரணமாக தவறான வழிகளை கடைப் பிடித்தால் பாபங்கள் ஒருவனை அண்டுகின்றன. ஆக பணத்திற்கும் பாபத்திற்கும் நெருங்கின தொடர்புள்ளது. இதை நன்குணர்ந்துதான் சாஸ்திரங்களை இயற்றிய மஹான்கள் தனத்தைப் பற்றி நீதி மொழிகளை பலவாறாக கூறியிருக்கின்றனர். ப்ராமணன், க்ஷத்ரியன், வைச்யன், சூத்ரன் இந்த நால்வரில் பணத்தை கையாள்வது வைச்யனுக்கு என்றாயிற்று.

தான் தர்ம நெறியோடு வாழ்ந்து பிறர்க்கு தர்ம நெறிகளை போதிக்க வேண்டிய ப்ராமணன் எவ்விதத்திலும் பாபத்தை சம்பாதிக்கக் கூடாது. இதனடிப்படையில் அவன் அன்றாடம் உஞ்சவ்ருத்தி எடுத்து வாழ வேண்டும். பணத்தை கண்ணெடுத்தும் பார்க்காமல் ஸந்யாஸி பிற்பகலில் குடும்பஸ்தன் வீட்டு வாசலில் நின்று பிக்ஷை கேட்க வேண்டும். எக்காரணம் கொண்டும் வீட்டிற்குள் நுழையக் கூடாது. இன்று நேற்றல்ல பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக நான்கு வர்ணத்தார்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பதற்கான விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

தற்போது பணம் ஏராளமாக புழங்குகிறது. அது இடம் விட்டு இடம்வேகமாக செல்கிறது. ஒருவர் தன் உழைப்பினாலும் சாமர்த்தியத்தினாலும் நிறைய பணத்தை சம்பாதிக்கிறார். அவர் தவறான வழிமுறைகளை பின்பற்றியிருந்தால் அவர் வசமுள்ள தனத்துடன் பாபங்கள் இரண்டற கலந்திருக்கும். அவர் அதை மற்றவர்களுக்கு இலவசமாக விநியோகம் செய்தால் அந்த தனத்தை பெற்றுக் கொண்டவர்களும் அந்த பாபங்களை பங்கு பெறுகின்றனர்.

பாபங்களின் தன்மை அவைகள் ஓரிடத்திலேயே நிலைத்து தங்கி விடாது. அவைகள் இடம் விட்டு இடம் பெயர்ந்து கடைசியில் பொசுங்கி போய்விடும். சமுத்திரத்தைத் தாண்டுவதற்கு தோணி எவ்வாறு பயன்படுகிறதோ அது போல நம்முடைய வாழ்க்கை என்னும் சமுத்திரத்தில் பணம் பாபங்களை சுமந்து செல்லும் தோணியாக பயன்படுகிறது. சுகமாக வாழ விரும்புகிறவன் தன்னை எத்தகையிலும் பாபங்கள் அண்டக்கூடாது என்பது பற்றி ஆழ்ந்து சிந்திக்க வேண்டும். அவரவர்களின் புத்திசாலிதனத்திற்கேற்ப மனம், வாக்கு செயல்பாடுகளில் தூய்மையை காப்பாற்றிக் கொள்ள முடியும். ஆனால் பணம் விஷயத்தில் நியாயமான வழிமுறையை பின்பற்றுவது சுலபமல்ல. இப்போது ஒவ்வொருவருக்கும் தேவை, ஆசை அதிகரித்துள்ளது.

பின்விளைவுகள் இவ்வாறிருக்கும் என்று கொஞ்சமும் பயப்படாமல் தன்னை சாமர்த்தியசாலி என்று நினைத்துக் கொண்டு பணத்தை வாரி சுருட்டுக்கொள்வது மிகவும் சகஜமாகி விட்டது. வீணாக பணத்தில் ஆசை வைக்கக் கூடாது என்பதை மற்றவர்களுக்கு உபதேசம் செய்ய தகுதி படைத்தவர் யாராக இருக்க முடியும்? பணத்திற்கு சிறிதும் ஆசைப்படாத மகான் தான் முன்னுதாரணமாக இருந்து கொண்டு அன்றாட வாழ்க்கையை நடத்தி செல்ல வேண்டும். அத்தகைய மகானை அடையாளம் காண்பது அரிது. அப்படியே ஒருவர் காணப்பட்டாலும் அவருடைய உபதேசம் எடுபடுமா?பாபங்களின் போக்கிடத்திற்கான வடிகால்களில் ஒன்று திரவிய நஷ்டம்.

வியாதி, மருத்துவ செலவு. இத்தகைய பாதிப்புகளை ஒருவன் எதிர்கொள்ளும்போது தன்னை அண்டியுள்ள பாபங்கள் நசிகின்றன என்பதை அவன் உணர வேண்டும். இதில் வரவு செலவு போக மீதி பூஜ்யம் என்றுவைத்துக் கொள்ளலாம். லாபம் ஏதுமில்லை. சம்பாதித்த பணம் மறைந்தோடிவிட்டது. பணம் விஷயத்தில் எச்சரிக்கையாக இருந்தவன் பாதிப்புகள் ஏதும் எதிர் கொள்ளாமல் வாழ்ந்ததில் அவனுக்கு வரவு பூஜ்யம் செலவு பூஜ்யம் என்று கணக்கிட்டால் மேலே கூறப்பட்ட இரு பூஜ்யங்களும் சமம். ஆக இருவருடைய நிலையும் சமம் என்று கூறலாமா? முடியாது

பணத்தை தவறான முறையில் சம்பாதித்தவன் திரவிய நஷ்டத்தை அடைந்து மன உளச்சலுக்காளாகிறான். வியாதி, மருத்துவ செலவு மூலம் சரீர அவஸ்தைக்காளாகிறான். கடைசியாக ஒருவாறாக தேறி பிழைத்திருந்தாலும் அநுபவித்த கஷ்டங்கள் அழிக்க முடியாத வடு. பணம் விஷயத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது நேரிடையாக பலன் தராது. பணவரவை கட்டுப்படுத்தியதனால் ஒரு சில கஷ்டங்களை எதிர்கொள்ள நேரும். இருந்தாலும் ஒருவன் நாள் கடந்து இவ்வாறு கணக்கிடவேண்டும்.

அவன் வாழ்க்கையில் பாதிப்புகள் மிகக் குறைந்தளவு நேர்ந்திருக்கலாம். அவன் தன்னை மற்றவர்களுடன் ஒப்பிட்டுக் கொண்டு எத்தகைய பாதிப்புகள் அவன் வாழ்கையில் குறுக்கிடவில்லை. அவன் எவ்வாறு மற்றவர்களிடமிருந்து வித்தியாஸப் படுகிறான். இந்த நோக்கில் ஆய்வு செய்து தன்னை சமாதானம் செய்து கொள்ள வேண்டும்.

இன்றைய நிலையில் ஒருவன் தன்னை பலவீனன் என்ற நிலைக்கு தானே தள்ளப் பட்டவனாக ஆக்கிக் கொள்ளா மல் நற்பண்புகளால் ஒரளவு தன்னை பலசாலியாக மாற்றிக் கொள்ள முயற்சிக்க வேண்டும். இந்த நோக்கில் ஒருவன் நல்ல லக்ஷியத்தை வளர்த்துக் கொண்டால் அவனுக்கு சாஸ்திர விதிகள் நன்றாக கைகொடுத்து உதவும்.

இன்று பணத்தை அட்டகாசமாக சம்பாதிப்பது பெரிய சாதனையாகிவிட்டது. ஒருவன் தன் வசம் நிறைய பணமிருந்தால் பெருமிதம் கொள்கிறான். அதை தக்க வைத்துக் கொள்வதிலும் அதை மேலும் அபிவிருத்தி செய்வதிலும் உற்சாகமாக இருக்கிறான். அதில் ஒரு பகுதியை நல்ல மார்க்கத்தில் செலவிடுவதில் அவனுடைய அறியாமை வெளிப்படுகிறது. அதனால் அவனை அண்டியுள்ள பாபங்கள் பொசுங்காமல் பத்திரமாக இருக்கின்றன.

ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். ஒருவனிடம் அண்டியுள் பாபங்கள் அவன்வசம் உள்ள தனத்தை பற்றியிருக்கும். தனத்தை நியாயமான வழியில் சம்பாதித்திருப்பான். ஆனால் காம, க்ரோத, லோபாதிகளினால் வேறுவகை பாபங்கள் அவனை அண்டியிருக்கலாம். அவனிடமுள்ள பாபங்களின் ஒரு பகுதி அவனுடைய தனத்திலும் ஒரு பகுதி செல்வத்திலும் ஒருபகுதி அவனுடைய சரீரத்திலும் அண்டியிருக்கும். ஆக அவன் எச்சரிக்கையாக பணத்தை நல்ல மார்க்கத்தில் செலவழித்து ஒரு பகுதி பாபங்களை பொசுக்கி விடலாம். தனக்கும் தன்னுடைய சந்ததிக்கும் போதுமான செல்வத்தை ஒதுக்கிவிட்டு மிகுதியாக இருக்கும் செல்வத்தை நல்ல இடத்தில் சேர்த்து விட வேண்டும்.

இந்த இரண்டையும் சரியாக செய்யாது போனால் அவனுடைய சரீரத்தில் பலவீனமான இடங்களை வெளியிலிருக்கும் பாபங்கள் அண்டிவிடும். ஏற்கனவே அவனுடைய சரீரத்தில் அண்டியிருக்கும் பாபங்கள் பலன் கொடுக்க தக்கத் தருணத்தை எதிர்பார்த்து கொண்டிருக்கும். இதில் கவனக்குறைவாக இருந்துவிட்டால் சரீரத்தில் வியாதிகள் தோன்றி மருத்துவ செலவு பணவிரயத்தைத் தோற்றுவிக்கும்.

இத்தகைய இடர்பாடுகளிலிருந்து ஒருவன் விடுபட வேண்டுமானால் அவன் சில பிராயச்சித்தங்களை செய்ய வேண்டும் என்று சாஸ்திர விதிகள் கூறுகின்றன. அவற்றை எவ்வளவு பேர் கடைப்பிடிக்கிறார்கள்? அதனால் எத்தகைய பலன்கள் கிட்டியிருக்கின்றன? நம்மை சுற்றியிருப்பவர் களையும், நாம் மதிக்கும் பெரிய மகான்களையும் கவனித்துப் பார்க்கும் போது எவ்வளவு பேர் பலசாலிகளாக காணப்படுகின்றனர்? எப்படி பார்த்தாலும் நாம் எதிர் பார்க்கும் பலசாலியை காணமுடியாது.

ஆனால் ஒரு சில அதிர்ஷ்டசாலிகளை காணமுடியும். அவர்களைப் பார்த்து நாம் ஏமாறக்கூடாது. பணம் விஷயத்தில் ஒருவன் பரிசுத்தனாக இருக்க வேண்டிய அவசியத்தை இந்த கட்டுரையில் விரிவாக கூறப்பட்டுள்ளது. ஒருவன் தன்வசம் மிகுதியுள்ள பணத்தை நல்ல மார்க்கத்தில் செலவழிக்கத் தவறி வீணாக வேறு வழிகளில் ஆங்காங்கு செலவழிக்கப்படுவது கண்கூடு. அதன் காரணமாக அத்தகையவர்களுக்கு உரிய பலன்கள் கிட்டவில்லை. அதை அவர்கள் உணர்ந்தபாடில்லை.

எழுதியவர் : செல்வமணி (பகிர்வு) (11-Feb-17, 8:16 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 354

மேலே