கொள்கை

வாக்குகேட்கும் காலங்களில் வாசலெங்கும் சென்று
=வணக்கங்கள் போட்டிட்ட வக்கற்றக் கொள்கை
வாக்காளன் கரங்கூப்பி வணக்கமிடும் நேரத்திலே
=வக்கணையாய் பார்த்தொதுங்கும் வசதியுள்ளக் கொள்கை
மூக்கற்ற வேளையிலே முதுகினிலே கழிவுகளின்
=மூடைகளை சுமக்கையிலே முடையறியாக் கொள்கை
நாக்கற்ற முதலைகளாய் நாட்டுக்குள் நடமாடி
=நமையிங்கு ஏப்பமிட நடித்தடிக்கும் கொள்ளை.

பார்வைக்கு அழகானப் பாசமெனும் வேலியிலே
=பதுங்கிப்பல நிறமெடுக்கும் பச்சோந்திக் கொள்கைப
போர்வைதனை போர்த்தியிங்கு புறப்பட்ட பலபேரில்
=புகழ்பூத்து வாழுதன்றோ பொல்லாத கொள்கை
கார்காலம் வெளிவந்து கத்துகின்றத் தவளைகளாய்
=கத்துமொரு காலம்வரக் காத்திருக்கு என்று
மார்தட்டிக் கொள்கின்ற மன்மதர்கள் புரியாமல்
=மரியாதை தனைக்கேட்கும் மாசுடையக் கொள்கை.

கொள்கையது என்னவெனக் கொள்ளாமல் இருக்கின்றக்
=கொள்கையினைக் கடைப்பிடித்துக் கொள்வதுவே தங்கள்
கொள்கைஎனக் கடைபிடிக்கும் குள்ளநரிக் கூட்டத்தின்
=கொடியேந்தி நடைபோடும் கொள்ளையர்கள் எங்கும்
வெள்ளையென வேட்டியினை வரிந்துகட்டி கொண்டெங்கள்
=வீதியிலே வரும்போது விழிப்புற்றுப் பார்க்க
எள்ளளவும் கொள்கைக்கும் எங்களுக்கும் சம்பந்தம்
=இல்லையென இருப்பாரை ஏற்றலோஎம் கொள்கை?
*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (12-Feb-17, 2:06 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 239

மேலே