உள்ளங்கால் மல்லிகை - காதல் ஸ்பெஷல்

பின்னலிட்ட கூந்தலை
கொத்தாய் இடக்கையில் பற்றி,
வலக்கை சுட்டு விரலால்
கொஞ்சம் முடியை சொருகி
எடுத்து பிடித்துக் கொண்டேன்.

வாழையிலையில் சுருட்டியிருந்த
நான்கு முழ பூவை சுருள் விரித்து,
இரண்டாய் மடித்து,
சிறுகச் சிறுக பூச்சரத்தை
முடி இடுக்கில்,
நுழைத்துவிட்டு, உயரம் திருத்தி
முடிப்பதற்குள்.....

பொறுமையிழந்த மனைவி,
வெடுக்கென்று விலகினாள்...

இதை சற்றும் எதிர்பார்க்காத நான்,
ஒரு புறத்தின் பூச்சரத்தை,
பிடித்திழுத்தேன்.....

பாசி மணிபோல்,
பொல, பொல பொலவென பூக்கள்,
தரையில் சிதறி விழுந்தன....

வேலை இருக்கிறது விடுங்களென்று,
விறு விறுவென நகர்ந்தவள்,
தரையிலிருந்து வெண் மொக்குகளை
மிதித்தெறிந்து ஓடினாள்.

கீழே சிதறிக் கிடந்த,
சிதையாத பூக்களொரு ஓவியமாய்
மாறியிருந்தது.

அருகில் சென்று ரசிக்க,
மண்டியிட்டு அமர்ந்தேன்.

பல உதிர்ந்த உதிரிப் பூக்கள்
வெடிக்காத மொக்குகளாகவே இருந்தன,
ஒரு சில மட்டுமே இதழ் விரிந்த
பூக்களாய் பூத்துக் கிடந்தது.

நான்கு, ஐந்து விரிந்த
பூக்களை மட்டும் கையில்
பொருக்கி எடுத்து,
உள்ளங்கையில் இட்டு,
முகர்ந்து பார்த்தேன்.....

மூர்ச்சையாகும் அளவிற்கு,
அடித்து அசத்தியது அசாத்திய
நறுமணம்...

இது மல்லிகையின்
உடன்பிறந்த வாசமா?
இல்லை என் மங்கையின்
உள்ளங்கால் உஷ்ணம் பட்டு
விரிந்த பூவில் நிகழ்ந்த
மாற்றமா?

சொக்கி அமர்ந்தேன்...
இந்தப் புது மணம்
மனதில் புது ரத்தம் பாய்ச்சியது...!

தெம்பாய் தலை திருப்பி,
மனைவி இருக்கும் இடத்தை
நோக்கினேன்....!

ஒரு விரலில் மல்லிகை காம்பை,
திருகிக் கொண்டே,
சமையல் அறையில் சுழன்று
கொண்டிருக்கும் சுந்தரியை கண்டேன்...

நேராய் நின்றபடி,
தலையை சற்று கோணித்து,
பிறகு உடம்போடு குனியாமல்,
தலையை மட்டும் குனிந்து,
அடுப்பு பற்ற வைக்கும் அழகும்...

கழுத்தோரும் வடிந்தோடும்
வியர்வையை புடவை தலைப்பால்,
துடைத்தெடுக்கும் துரிதமும்...

குக்கர் கூவும்போதெல்லாம்,
திடுக் திடுக்கென மேனி
துடிக்கும் எழிலும் ...

தூரமாய் தெரியும்
தொலைக்காட்சியை அரைக்கண்ணில்,
நோட்டமிட்டு பூரிப்பதும்...

மொபைல் போனில்,
பிடித்த பாடலை பாடவிட்டு,
பிடித்த வரிகளை மட்டும்,
தானும் சேர்ந்து பாடும் பொலிவும் ...

கத்தியை கொண்டு,
உதடு மடித்து,
காய்கறிகாரிகளோடு விளையாடும்
வீரியத்தையும் கண் கொட்டாமல்
பார்த்தது, என்னை சித்து
பிடிக்கவைத்தது...

சித்தம் தெளிய
நானும் சேர்ந்து விளையாடினாள் என்ன?
என தோன்றவே,
துள்ளி எழுந்தேன்,
வேகமாய் நகர முனைந்தேன்,
முடியவில்லை...

யாரோ காலை
கட்டிக்கொண்டிருந்தது புரிந்து,
குனிந்து பார்த்தேன்...

அப்பா! அப்பா!! அப்பா!!!
தூக்கு, தூக்குக்கு,
விளாடு, எங் கூட விளாடு,
வா வா வாயென்று,
கதறி அழுதான்...

என்வி ளையாட்டு ஆசையை
அடக்கிக் கொண்டு,
உள்ளங்கால் மல்லிகையை,
உள்ளங்கையில் மடித்து,
பால்கனி நோக்கி விசிறியடித்து
மூன்று வயது மகனோடு நடக்கத்
தொடங்கினேன்......

தூரத்தில் இருந்து,
சிரிப்பு சத்தம் கேட்க,
திரும்பினேன்...

நமட்டுச் சிரிப்பு,
சிரித்துக்கொண்டே,
அடுப்பை அனைத்து விட்டு,
பால் பாட்டிலோடு வந்தாள்,
என் தர்ம தேவதை....

என்னை வச்ச கண் வாங்காமல்,
பார்த்தபடி,
குழந்தையை பிடுங்கி,
தூக்கியபடி,
பசிக்குதாடாச் செல்லம்....
பசிக்குதா?
சொல்லு சொல்லுமா,
சொல்லுடா குட்டி என்று,
கொஞ்சிக்கொண்டே படுக்கையறைக்குள்
புகுந்தாள்..........!!!!!

எழுதியவர் : கணேஷ்குமார் balu (12-Feb-17, 4:45 pm)
சேர்த்தது : Ganeshkumar Balu
பார்வை : 2110

மேலே