ஊழிக்கூத்து

நெடுங்கடல் பொங்கிட நீள்மழை பெய்திட - எங்கும்
கரைபுரண்டோட காளியுமாட புயலால் - விதி
வழிநின்றிட விண்ணையும் நோக்கிடப் - படு
கதிர்வீசிட பறைஎங்கும் முழங்கிடவும்
அன்னை காளீ ! மாகாளீ ! பராசக்தி !
நீயாடுங் கூத்தைக் காணச் செய்வா யென்றும் !!!

பனிமழைவேகம் படைதிரண்டோட - என்றும்
சினமிகுகாளீ நடைமறந்தாட - நாளும்
கனிநிகர்மகளோ கடைவிரித்தாட - இங்கே
இனிவரும்காலமோ கலிகாலமாகிடும்
அன்னை காளீ ! மாகாளீ ! பராசக்தி !
நீயாடுங் கூத்தைக் காணச் செய்வா யென்றும் !!!

இடிமுழங்காட இதந்தராப் பேய்கள் - எனைத்
தொடர்ந்தோடிட மிடியென மின்னலும் - வெறிக்
கொண்டாடிட வீரமாகாளியாட - அங்கே
கலி மிகுந்தாட கோரத் தாண்டவமாம்
அன்னை காளீ ! மாகாளீ ! பராசக்தி !
நீயாடுங் கூத்தைக் காணச் செய்வா யென்றும் !!!

ஐம்பெரும்பூதம் ஐக்கியமாகிட - இனி
செங்காந்தள் மலரைச் சூடிட - சுடு
காட்டிலும் நாட்டிலும் குலமகள் பயந்தாட -என்றும்
மண்ணுலகில் கூத்தாடும் மரணஓலமாம் .
அன்னை காளீ ! மாகாளீ ! பராசக்தி !
நீயாடுங் கூத்தைக் காணச் செய்வா யென்றும் !!!

வான்வெளி நோக்க வான்மழை பொழிய - மனம்
சூழ்ந்திடும் கலியால் சூழ்நிலை மாற - வாழ்வில்
பாழ்படும் எண்ணம் பாய்ந்தோடிவர - எங்கும்
வேதனை மிகுந்திட வெறியாட்டமாடும்
அன்னை காளீ ! மாகாளீ ! பராசக்தி !
நீயாடுங் கூத்தைக் காணச் செய்வா யென்றும் !!!

படபடவென இடிமுழங்கிட தொடுவானில் - கேட்கச்
சடசடவென மழைத்துளி வெள்ளமாகிட - மண்ணில்
திடுதிடுவென மக்களுமாட புவியில் - தங்கும்
சிரிப்பொலி மறைந்திட விறுவிறுப்பாகிடும்
அன்னை காளீ ! மாகாளீ ! பராசக்தி !
நீயாடுங் கூத்தைக் காணச் செய்வா யென்றும் !!!

காற்றினிடையே கானகநீர் புகுந்திட - வேறு
மாற்றமதை அறியாத மானிடரோ - ஊழிக்
கூத்தாடும் காளியே ! சேற்றிலும் பூக்கும் - நெஞ்சம்
ஏற்றமிலா வாழ்வினையே எடுத்தோதும் .
அன்னை காளீ ! மாகாளீ ! பராசக்தி !
நீயாடுங் கூத்தைக் காணச் செய்வா யென்றும் !!!

கோலஞ்செயும் கோர தாண்டவமாடும் - காளி
கால முழுமையும் கால் தூக்கியாட - ஈசன்
பாலம் அமைத்திடப் பத்ரகாளியாகி - என்றும்
மோனநிலைக் கலைத்தும் மோகினியாகவும்
அன்னை காளீ ! மாகாளீ ! பராசக்தி !
நீயாடுங் கூத்தைக் காணச் செய்வா யென்றும் !!!

சினமும் மாறிட சிவனும் அருளிட - சக்தி
குணமுடன் மாறிட கொடுத்தாள் தன்னை - இனி
மோகமும் தாபமும் ஒன்றாகிட - ஊடல்
தணிந்து கூடல் கூடிடும் நாளன்று
அன்னை காளீ ! மாகாளீ ! பராசக்தி !
நீயாடுங் கூத்தைக் காணச் செய்வா யென்றும் !!!

மதிமயங்கிட மனம் ஒன்றிட எங்கும் - சிவன்
கதிஎனவும் பற்றிட சக்தியை - வாழ்வில்
அதிகாலையும் அந்தி மாலையும் - நீயாய்
விதி மாறிட விளக்கம் கட்டிடும் வேளை
அன்னை காளீ ! மாகாளீ ! பராசக்தி !
நீயாடுங் கூத்தைக் காணச் செய்வா யென்றும் !!!

ஊழிக்கூத்தாடும் நாழிகை எல்லாம் - இனி
வாழியென வாழ்த்தொலிக் கேட்டிட - காளி
ஆழிக்கடலலையும் ஆர்பரித்துப் பொங்க - வீரம்
சாதுவாகிச் சாபங்கள் தரவேண்டாம்
அன்னை காளீ ! மாகாளீ ! பராசக்தி !
நீயாடுங் கூத்தைக் காணச் செய்வா யென்றும் !!!

ஆக்கம் :- கவிஞர் . சரஸ்வதி பாஸ்கரன்

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (14-Feb-17, 8:40 am)
சேர்த்தது : sarabass
பார்வை : 89

மேலே