சீர்கெடும் சமூகம்
சிறு பிள்ளை முதல் கிழப்பருவம் வரை
ஒவ்வொரு நாளும் போராட்டமாக,
எண்ணிப்பார்க்க நேரமும் இன்றி மறந்தே போன உறவுகள் பல.
தூக்கிச் சுமந்த தந்தை தாயையும் சுமையென்று
முதியோர் இல்லம் காண அனுப்பிய பலர்,
நாளை தமக்கும் ஒரு இடம் வேண்டி அங்கு நிற்க நேரும் என்பதை மறவாமல் இருந்தால் சரி.
பல்லேலக்கா பல்லேலக்கா என்று பாடலை ரசித்து விட்டு,
காய்கறி வியாபாரியிடம் ஐந்து ரூபாய்க்கு பேரம் பேசிடும் வெட்கம் கெட்ட சமூகம்.
தீப ஒளி திருநாளுக்கு பத்தாயிரம் பட்டாசு செலவு,
துப்புரவுப் பணியாளருக்கு பத்து ரூபாய் தரும்போது
முகம் சுளிக்கும் கருமிகள் இங்கே பலருண்டு.
பெண் சுதந்திரம் பேசிய பாரதி பிறந்த நாடு,
பெண் குழந்தைகள் கூட சுதந்திரமாக உலவ முடியாத திருநாடானது.
இலட்சம் பேருக்கு சோறு ஈய்த விவசாயி
அடுத்த வேளை சோற்றுக்கு யாரை கேட்பது என்று விழித்து நிற்கிறார்.
படிக்காத மேதையாய் வாழ்ந்தவர்கள் இங்கு பலருண்டு,
படித்தும் முட்டாளாய் வாழ்கிறவனும் இங்குண்டு.
சோற்றுக்கும் நீருக்கும் வழியில்லாமல் வாடும் மக்கள்,
சேர்த்த பணத்தை பதுக்க வழியில்லாமல் வாடும் மாக்கள்.
இருவரின் தேவையில் எவருக்கு முன்னுரிமை இங்கே!.
படித்த படிப்பிற்கு வேலை, பிடித்த வேலை என்ற கனவெல்லாம் போய்,
பிழைக்க ஒரு வேலை போதுமென்று தேடும் இளையோர் கூட்டம்.
காதலுக்கு மரியாதையை பார்த்தும்
காதலர்களை கல்லறையில் உறங்க வைத்த இரக்கமற்ற சமூகம்.
கேவலங்கள் பல நடந்தும் பாரில் பலரது பார்வை கேளிக்கைகளில் தேடியே சுழற்வதும் ஏனோ?.
அமைதியே காணாத இதயத்தில் இனி தேசியம் விதைத்து என்ன பயன்...
அன்புடன்,
தமிழ் ப்ரியா...