நீலக் குருதி - மரபு கவிதை
பேனாவின் மைதீர்ந்துப்
----- பெருமையினை இழந்ததுவே !
தானாக எழுத்துகளும்
----- தடம்புரண்டு வந்ததுவே !
தேனான வாழ்க்கையுமே
----- தெருநோக்கிச் சென்றதுவே !
ஊனாகப் பெருகியதே !
------ உலகெங்கும் குருதிவெள்ளம் !!!
நீலநிறக் குருதியினால்
------ நீள்வாழ்வும் தொலைந்ததுவே !
பாலங்கள் அமைத்திடவும்
------ பண்பட்டோர் யாருமின்றி
வேலவனின் கைகளிலே
------- வேல்இருந்தும் பயனின்றிக்
காலங்கள் முழுவதுமே
------- கயவர்கள் கைவசமே !!!!
உழைப்பவர்கள் கைகளிலே
------- உயிரில்லா ரேகைகளே !
பிழைப்பிற்கு வழியின்றிப்
------- பித்தனாக்கும் பருவகாலம் !
மழையில்லாக் கொடுமையினால்
------- மாளுகின்றான் விவசாயி !
தழைத்திடுமா இவன்வாழ்வும்
------- தரமில்லாச் சமுதாயம் !!!
எழுதுகின்ற கோல்கொண்டு
------ எடுத்துரைத்தும் பயனில்லை .
அழுகின்ற குரலோசை
------- அமைதியினை என்றுபெறும் !!
வழுவுகின்ற நீதிநெறி
------- வாடுகின்றார் ஏழைகளும்
தொழுதாலும் பலனில்லை
------- தொகைவேண்டும் என்கின்றார் !!!
வயிற்றுக்குச் சோறில்லை
------- வாழுகின்ற மானிடற்குப்
பயிற்றுகின்ற கல்வியில்லை .
------- பகுத்தறிவு ஞானமில்லை .
முயற்சிக்கும் பஞ்சமில்லை
------- முற்றிலுமே ஏமாற்றம் !
மயக்கத்திலே மக்களினம்
------- மாறிடுமா இந்நிலைமை !!!!
ஆக்கம் :- கவிஞர் . சரஸ்வதி பாஸ்கரன்