உயிரே போகும் நிலையிலும்

தேவதைகள் கோயிலுக்கு அதிகாலையிலேயே வரும் மார்கழி மாதம் ...சில்லென்ற தென்றல் வீசும் காலை நேரம் ... தந்தையும்,மகனும் சாலையோரம்...யாருக்காகவோ காத்துக்கொண்டிருந்தனர் .

மகன் பாலாவிற்கு 13 வயது, விஞ்ஞானம் எவ்வளவு வளர்ச்சி அடைந்திருந்தாலும் புத்தகங்களில் விஞ்ஞானம் வளர்ச்சி அடைவது எட்டாம் வகுப்பு முதல் தான் அதே எட்டாம் வகுப்பில் தான் பாலா படித்துக்கொண்டிருந்தான்.

அவன் தெரிந்துக்கொள்ள வேண்டிய விஞ்ஞானத்தில் பதில் தெரியாத கேள்விகள் பல அவனிடம் இருந்தன அந்த கேள்விகளுக்கெல்லாம் தன் தந்தையிடம் பதில் இருக்கும் என நம்பி சில கேள்விகளை அவன் தந்தை ரவியிடம் கேட்டான், ரவி எல்லா வகையான புத்தகங்களையும் படிக்கும் பழக்கம் கொண்டவன் என்பதால் இவன் கேட்ட விஞ்ஞானத்தின் ஆரம்பகட்ட கேள்விகளுக்கு எளிதாகவே பதில் சொன்னான் ரவி.

தன் தந்தையை சந்திராயன் ஏவுகணையை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய விஞ்ஞானிகளுக்கு நிகராவே பார்த்தான் பாலா.

அனால் அடுத்து பாலா கேட்ட சில வரலாற்று கேள்விகளுக்குக்கும், விடுகதைகளுக்கும் பதில் சொல்ல தோல்வியுற்றான் ரவி, மகனிடம் தோற்பது தந்தைக்கு எப்போதுமே வரம் தானே அதனால் ரவியும் தன் மகனை புலவன் போல பார்க்க தவறவில்லை.

இவர்கள் காத்துக்கொண்டிருந்த பேருந்து காலைப்பொழுதின் நிறமில்லா காற்றுக்கு கருப்பு வண்ணம் தீட்டிக்கொண்டே வந்தது, ஜன்னல் ஓரத்தில் அமர்ந்திருந்த கொடை வள்ளல் ஒருவன் வெற்றிலை பாக்கு அவன் எச்சிலுக்கு பரிசளித்த சிவப்பு நிறத்தை சாலைக்கு பரிசளித்தான் ,

சனி அல்லது ஞாயிற்று கிழமைகளில் தன் மகன் பாலாவை எங்காவது வெளியே அழைத்து செல்வதை வழக்கமாக வைத்திருந்தான் ரவி, சுற்றுப்புற சூழல் என்பதை பாடமாய் படிப்பதை விட நேரில் பார்த்து அறிந்துகொள்வது தான் சிறந்தது என்ற நம்பிக்கை ரவிக்கு .

பேருந்து புறப்பட ஆரம்பித்தது ....

வரலாற்றை படிப்பதும் வரலாற்று கதைகளை கேட்பதிலும் பாலாவிற்கு ஆர்வம் அதிகம் நீதிக்கதைகள் கூட அதில் அடக்கம் இவையெல்லாம் அவனின் கற்பனைத்திறனுக்கு தீனிப்போடும் வகையில் இருந்தது,

நேற்றிரவு பாதியிலே நிறுத்திய உண்மையைப்போற்றும் ஒரு நீதிக்கதையை சொல்லுமாறு வற்புறுத்தினான் பாலா , ரவியும் கதையை சொல்ல ஆரம்பித்தான் ஆர்வத்துடன் கதையை கேட்டான் பாலா , கதையை சொல்லிமுடித்த பிறகு கதையில் மட்டுமல்ல "நிஜ வாழ்க்கையிலும் கூட நாம் உயிர் போகும் நிலைமையிலும் பொய் பேசக்கூடாது உண்மைதான் எப்பொழுதும் வாழ்க்கைக்கு உதவும் " என்று சொன்னான் ரவி இதை வேத வாக்காகவே கருதினான் பாலா .

இவர்கள் பேசிக்கொண்டிருக்க நடத்துனர் "பயணசீட்டு எந்த ஊருக்கு எத்தனை" என்று கேட்டான்.

அதற்க்கு ரவி "சாத்தனூருக்கு ஒன்றரை சீட்டு கொடுங்கள் என்றான்" ,

"12 வயதிற்குட்பட்டோருக்கு மட்டுமே அரை சீட்டு உங்கள் மகனுக்கு எத்தனை வயதாகிறது என்று கேட்டான் நடத்துனர் ,

"என் மகனுக்கு 12 வயதாகிறது" என்று சொன்னான் ரவி,


இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த பாலா நடத்துனரிடம் "எனக்கு வயது 13 முழு சீட்டையே கொடுங்கள் என்றான்"


ரவியை பார்த்து முறைத்த நடத்துனர் ,பாலாவின் கன்னத்தை தட்டி "இப்படித்தான் இருக்க வேண்டும் " என்றான் மற்றும் ஒன்றரை சீட்டுக்கு மட்டுமே பணம் வாங்கிகொண்டு இரண்டு பயணசீட்டை கொடுத்தான் அந்த நடத்துனர் ,

இதை ரவியும் பாலாவும் ஆச்சர்யமாக பார்த்தனர் ,நடத்துனர் பாலாவை பார்த்து " இது உன் நேர்மைக்கு நன் கொடுக்கும் பரிசு என்றான்" .

ரவி இப்பொழுது குற்றஉணர்ச்சியில் மூழ்கியிருந்தான்...

"அப்பா நான் பொய் சொல்கிறேனா இல்லையா என்று சோதிக்கத்தானே இப்படி செய்தீர்கள் ?"
வெகுளியாக கேட்டான் பாலா

ஆமாம் என்று சொல்லி பாலாவின் தலையை வருடினான் ரவி .

எழுதியவர் : பாலசுப்ரமணி மூர்த்தி (16-Feb-17, 6:05 pm)
பார்வை : 644

மேலே