வாசனை

⁠⁠⁠இரவு உறங்கும் முன் கன்னத்திற்கு அருகில் வந்து முகர்ந்து பார்த்த பேத்தியிடம் என்ன என்று கேட்க,

"தாத்தா உனக்குனு ஒரு வாசனை முகத்தில் உண்டு அதுதான் முகர்ந்து பார்த்தேன்..."

எனக்கு என ஒரு வாசனையா...? நானே அறியாததை இவள் அறிந்திருக்கிறாள்.. நான் வாசனை திரவியம், பவுடர் எதுவும் பயன் படுத்துவதில்லை... அப்படியே எதிர் புறம் திரும்பியவள் என் வலது உள்ளங்கையை எடுத்து அவள் தலைக்கு தலகணியாக வைத்துக்கொண்டு, என் வலது கையை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு தூங்கத் துவங்கினாள்... எப்பொழுதும்போல் அவள் வலது கட்டை விரல் வாயில்...

என் உள்ளங் கை அவள் தலை பாரத்தில் வலிக்கத் துவங்கியது, இருந்தும் கையை எடுத்தால் எழுந்துவிடுவாளோ என்று அப்படியே இருந்தேன்... சிறிது நேரத்தில், அவள் வாயிலிருந்து ஜொள்ளு சில்லென்று என் கையில் விழ தூங்கிவிட்டாள் என்று உணர்ந்தேன்... மெல்ல அவள் கட்டை விரலை வாயிலிருந்து எடுத்து, என் உள்ளங்கையை அவள் தலைக்கடியிலிருந்து விடுவித்துக் கொண்டேன்....

உள்ளங்கை சிறிது நேரம் வலித்தது...

சிந்தனை மட்டும் என் வாசனை என்னவாக இருக்கும் என்றே வெகு நேரம் விழித்துக் கொண்டிருந்தது....

பேத்தி நிர்மலமாகத் தூங்கிக் கொண்டிருந்தாள்....
---- முரளி


Close (X)

4 (4)
  

மேலே