மனசே மனசே

ஒரு குறிப்பிட்ட நுகர் பொருளைக் காட்டி அந்தத் தொலைக் காட்சி விளம்பரத்தில் தன் நெஞ்சைத் தொட்டு ஒருவர் கூறுகிறார்: “இந்தப் பொருளை வாங்குங்கள். மனதாரச் சொல்கிறேன்.”
தளர்ந்து பிறந்த வீட்டிற்கு வந்த மகளிடம் அம்மா கூறுகிறாள்:
“மனசை மட்டும் தைரியமா வெச்சுக்கோம்மா. எல்லாம் காலப் போக்கில் நிச்சயம் மாறிடும்.
”நண்பர்களிடையே மிகவும் பரிச்சயமான உரையாடல்:
“மனசைத் தொட்டு சொல்லுடா. நீ சொஞ்சது சரியா?”
இப்படிப் பலரின் நாவில் விழுந்து புரளும் இந்த மனசு என்ற சொல்லுக்கு உண்மையான பொருள்தான் என்ன? இந்த மனம் எங்குதானிருக்கிறது? இதயத்தினுள்ளா? நெஞ்சிற்கு நடுவிலா? அல்லது மூளை இடுக்குகளிலா?
மூளையின் செதில் போன்ற நினைவுச் செல் அடுக்குகளில் ஏராளமான ஒலி-ஒளிப் பதிவுகள் சேமிக்கப்பட்டிருக்கிறது. சிறு வயது முதல் முதுமை வரையிலான ஒருவரின் கால அனுபவங்களின் மொத்த தொகுப்புகள் இவை. நியூரானிக் கட்டமைப்பிற்குள் தனித் தனிக் கோப்புகளாக இருக்கிறது. அடிக்கடி தேவைப்படும் கோப்புகள்; எப்போதாவது தேவைபடும் கோப்புகள்; தற்காலிகக் கோப்புகள் என்று பல பிரிவுகளில் மிகவும் பத்திரமாகப் பாதுகாக்கப்படுகிறது. நினைவாற்றலைப் பொறுத்தவரை நாம் கண்ட, கேட்ட மற்றும் அறிந்த அத்தனையும் பத்திரப் படுத்தி வைப்பது மூளையிலுள்ள நியூரான்களின் முதன்மைப் பணியாகும்.
ஆராய்ச்சிப் பூர்வமாக ஒப்புக்கொள்ளப்பட்ட மனம் என்பது இத்தகைய செல் அடுக்குகள்தானே தவிற வேறெங்கும் இல்லை. இந்த மனதை நாம் இரண்டு வகைகளாகப் பிரித்தாய்வோம். ஒன்று மனது. மற்றோன்று ஆழ் மனது. நம் மனதிலிருப்பது தினப் புழக்கத்திற்கு வேண்டிய சில அத்தியாவசியமான கோப்புகள். அவ்வளவாக தூசி எதுவும் சேர்ந்து விடாமல் மிகவும் பளிச்சென்று இருக்கும். ஆழ் மனதிலிருப்பது அப்படியல்ல. எப்போதாவது தூசி தட்டி அப்போதைய தற்காலிகத் தேவைக்கு எடுக்கும் முக்கியமான கோப்புகள். நம் வாழ்க்கையின் முக்கிய தீர்மானங்களை எடுக்க நம்மையுமறியாமலேயே உதவுவது இந்த அனுபவக் கோப்புகள்தான்.
அடிக்கடி மேற்கொள்ளும் பிரயாணங்களில் நம்முடன் பயணிக்கும் சக பயணியின் ஒரு சிறு அறிமுகத்திற்குப் பிறகு “உங்களை இதற்கு முன் எங்கேயோ பார்த்திருக்கிறேன் சார், ஆனா சரியா ஞாபகமில்லை” என்று கூறும் போது ஆழ் மனதிலிருக்கும் கோப்புகள் அத்தனையையும் கவிழ்த்துப் போட்டு மூளையைக் கசக்கிக் கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம். நம்முடைய விவாதப் பொருள் இந்த ஆழ் மனதுதான்.
கண்டதும் காதல் கூட, இந்த ஆழ்மனதில் கலைத்துப் போட்ட கோப்புகளில் என்றோ சிறு வயதில் நீங்கள் மனதார விரும்பிய அன்பு செலுத்திய ஒருவரது முகச் சாயலில் ஒரு சிறிய ஒப்பீட்டு பதிவுதானாம். இது போன்ற காதல் விவகாரத்தில் காதலை பிரம்மாண்டமான தெய்வீக நிலைக்கு உருவேற்றி, ஏழு பிறவியில் நமக்கிது எந்தப் பிறவிக் காதலென்ற ஆராய்ச்சியில் ஈடுபடுபவர்களும் உண்டு.
உங்களின் ஆழ் மனது அமைதியாக இருக்கும் போதுதான் உங்களால் தடையின்றி அதை அலசிப் பார்க்க முடியும். அமைதியான மனதால்தான் எந்தத் தீர்மானகளையும் உங்களால் எடுக்க முடியும். உங்களின் அனுபவங்களே உங்கள் ஆசான். சிறு வயதில் பெற்றவர்கள் எப்படி உங்களை நல் வழிப்படுத்தினார்களோ அதைப் போல் உங்களின் வாழ்க்கை அனுபவங்களே பல சமயங்களில் உங்களையும் அறியாமலேயே உங்களை நல்வழியில் நடத்தும்,
தினமும் இரவு படுக்கப் போகும் முன்பு அன்று நடந்த எல்லா நிகழ்வுகளையும் கோர்வையாக அடுக்கிப் புதுப்பித்துக் கொள்ளுங்கள். இந்தப் பயிற்சி, அடுத்த நாளே நேற்றைய நிகழ்வுகள் பழைய கோப்பிற்குப் போய்விடாமல் குறைந்த பட்சம் ஒரு வாரத்திற்காவது நீங்கள் அடிக்கடி புரட்டிப் பார்க்க ஏதுவாகும். கணினி மொழியில் கூறுவதென்றால், இதுதான் தற்காலிக அலுவலக கிளிப் போர்டு.
நம் பெற்றோர்களே ஆரம்பக் காலத்தில் ரெடிமேடாக நம் ஆழ்மனதினில் சில விஷயங்களைப் பதிவு செய்து விடுகிறார்கள். பரம்பரை பரம்பரையாக நடக்கும் தொடர் பதிவுப் பணி இது. இந்தக் கட்டத்தில்தான் மதங்கள் சார்ந்த கொள்கைகள் ஊக்குவிக்கப்படுதிறது. வருங்கால லட்சியமென ஆரம்பத்திலேயே பெற்றோர்கள் தங்களது நிறைவேறாத, அரைகுறையாக நிறைவேறிய கனவுகளுக்கேற்ப பிள்ளைகளை வடிவமைத்து விடுகிறார்கள். எனக்கு என் அப்பா கற்றுக் கொடுத்ததை என் பிள்ளைகளுக்கு நான் கடத்தி விடுகிறேன். பிறகு அந்தப் பிள்ளைகள், தங்களின் பிள்ளைக்கென அந்த டேர்ம் பிளேட்டையே மறுபடியும் மறுபடியும் உபயோகப்படுத்துகிறார்கள்.
மதவாதிகளும் அப்படித்தான். கவர்ச்சியான பேச்சில் உங்களை தன்நிலை மறக்கச் செய்து , ரகசியமாக அவர்களின் கருத்துக்களை நம்மையும் அறியாமலேயே நம் ஆழ் மனதில் பதித்து விடுவார்கள். எனக்குச் செந்தமான நிலப்பரப்பில் வழிப்போக்கனென வந்தவன் ஒரு கவர்ச்சியான விஷச் செடியை நம் வீட்டுத் தேட்டத்திலேயே நட்ட கதைதான் இது. கவர்ச்சியான வெளிப் பசுமையக் கருதி வெட்டவும் மனசில்லாமல், அந்த விஷச் செடி வளார்ந்து, கிளைகள் பரப்பி ஆழ் வேர்களூன்றி விருட்சமாக பரம்பரை பரம்பரையாக பாதுக்காக்கபட வேண்டிய ஆச்சார மரமாக நின்று உங்களின் இயலாமையைப் பார்த்து கை கொட்டிச் சிரிக்கும்.
சில மேலை நாடுகளில் ஒரு கலச்சாரம் இருக்கிறதாம். கருவுற்ற பெண்கள் பிறக்கப் போகும் குழந்தைக்கு தங்களுக்குப் மிகவும் பிடித்த தலைவர்களின் குண இயல்புகள் வர ஏதுவாக அன்னாரின் வாழ்க்கை வரலாறு, திரைப்படம், ஒலி-ஒளிப் பதிவுகள், விவாதப் பட்டறைகள் என்று முழு மனதையும் ஆட்படுத்துவார்களாம். இந்தக் குண இயல்புகள் குழந்தைகளின் ஆழ் மனதில் விதைக்கப்படும். நமக்குப் மிகவும் பிடித்த குண இயல்புகளின் பிரதியாக குழந்தையைப் பெற்றுக்கொண்டு வீடு திரும்புவார்களாம். இது ஒருபுறம் குழந்தையின் கருத்துத் தேர்வு உரிமையை பிறப்பதற்கு முன்பே பறிக்கிற செயல்.
அடிப்படையில் மனம் என்பது ஒவ்வொரு தனிமனிதனின் மூளை, அனுபவம் சார்ததுதான் என்றாலும் அடிப்படையாக ஒவ்வொரு மனசையும் வடிவமைக்கிற ஆற்றல் மிக்க சக்தி ஒன்று இருக்கிறது. அதுதான் சமுதாயம். அதை தனியாக விவாதத்திற்கு எடுத்துக் கொள்வோம்.
மற்றபடி நெப்போலியன் கூற்றுக்கிணங்க உங்களின் அனைத்து பிரச்சினைகளுக்கும் முடிவு உங்களின் கைகளில்தான் இருக்கிறது. ஆகக் கூடி நீங்கள் செய்ய வேண்டிய ஓரே காரியம் மனதார நம்பிச் செயல் படுங்கள்.
ஐம்பது வயதிற்கு மேற்பட்டவர்களை இன்றளவும் பழைய திரப்பாடல்கள் அப்படியே கட்டிப்போடுகின்றன என்றால் அதற்குக் காரணம் அவர்களின் ரசிப்புக்கு உட்பட்டது பாடல்கள் மட்டுமல்ல. அந்தப் பாடல்களளைச் சார்ந்து அவர்களின் ஆழ்மனதில் எழும் இளவயது நினைவுகளும்தான்.
ஒரு புராணக் கதை. ஒரு சமயம் படைப்புக் கடவுள் பிரம்மாவுக்கு ஒரு பிரச்சினை. எல்லா மானுடர்களும் கடவுளாகும் சூட்சுமத்தை அறிந்து கொள்கிறார்கள். அதன் பின் எல்லோரும் தத்தம் இச்சக் கேற்ப வாழ ஆரம்பிக்கிறார்கள். அதர்மம் ஒரு பக்கம் பெருகுகிறது. இந்தத் தேவலோக ரகசியத்தை எந்த மானிடரும் அறியாவண்ணம் எங்கே ஒளித்து வைக்கலாம் என்று ஆராய சபை கூடியது. வானம், பூமி, பாதாளம் என்று பல இடங்களை யேசித்து, அவை எதுவும் ஒத்துவராமல், கடைசியாக அந்த பிரம்ம ரகசியத்தை அவரவர்களின் ஆழ் மனதிலேயே ஒளித்து வைத்தானாம் அந்த புத்திசாலி பிரம்மா.
கதை ஒரு புறம் கிடக்கட்டும். உங்கள் ஆழ்மதினைத் தோண்டி எடுத்தால் நீங்களும் ஒரு கடவுள்தானே, அந்த ஒரு இடத்தை மட்டும் விட்டுவிடுகிற நம் தேடுதல் வேட்டையில் நமக்குக் கிடைப்பது ஒரு சராசரி மனிதனின் பேராசையான எதிர்பார்ப்பும் கண் மூடித்தனமாகத் துதி பாடும் கலாச்சாரமும்தான். அவ்வாறு துதி பாடப்படுவது தனி மனிதர்களாகவும் இருக்கலாம், தெய்வங்களாகவும் இருக்கலாம்.
ஒரு சிறுவன் பாறை முகட்டிலிருந்து வழியும் ஓடை நீரில் தாகம் தீர்த்துக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக தன் குவிந்த கைகளில் நீரோடு வந்திறங்கிய ஒரு சிறிய பல்லியையும் சேர்த்து விழுங்கி விட்டான். நாட்டு மருத்துவரிடம் உடனே காட்டி மாற்று மருந்து கொடுத்தும் எந்தவிதப் பயனுமில்லை. எதை உட்கொண்டாலும் அந்தச் சிறுவன் உடனே வாந்தி எடுத்துக் கொண்டிருந்தான். ஓரே வாரத்தில் உடம்பு இளைத்து மிகவும் பலவீனமானான். மற்றோரு நாட்டு மருத்துவரை நாடிய போது, அவர் அதிகாலையில் சிறுவனைக் கூட்டிக்கொண்டு மீண்டும் தன்னை வந்து பார்க்கும் படி கூறினார்.
சிறுவனை அதிகாலையைலேயே அழைத்து வந்தார்கள். மருத்துவரும் ஒரு சிறிய மண் கலயத்தில் கால் பங்கிற்கு சோற்றுக் கஞ்சியை ஊற்றி அவன் முன் வைத்து பச்சை நிறத்திலிருந்த ஏதோ ஒரு மூலிகை மருந்தை குடிக்கச் சொல்லி, வாந்தி வந்தால் அந்தக் கஞ்சிக் கலயத்திலேயே எடுக்கச் சொன்னார். இரண்டு மூன்று முடக்கிலேயே அந்தச் சிறுவன் பலமாக வாந்தி எடுக்க ஆரம்பித்தான். பிறகு அந்த மருத்துவர் அந்தப் பானையில் கை விட்டு செரிக்காத இரண்டு வழவழப்பான கொழுப்பு போன்ற பொருளை எடுத்தார். பிறகு மீண்டும் பானையில் கையை விட்டுச் சிதைந்த நிலையில் உள்ள சிறிய பல்லியை சிறுவனிடம் காட்ட அவன் உடல் முழுவதும் சிலிர்க்க முதன் முறையாக தன் உபாதை நீங்கிய நம்பிக்கையில் மனம் விட்டுச் சிரித்தான்.
சிறுவன் போன பிறகு அந்த மருத்துவர் தன் மனைவியிடம் “புள்ளைக்கு உடம்பிலே ஒன்னுமில்லே. மனசுலேதான் தடுமாற்றம். நம்ம வூட்டு உத்திரப் பல்லியிலே ஒன்னு குறைஞ்சிடுச்சுன்னு வெச்சுக்கோ. அவ்வளவுதான்” என்று சத்தம் போட்டுச் சிரித்தார்.