இதயமெனும் தடாகத்திலே மீனாய் நீ நீந்துகிறாயே --- மரபு கவிதை

இதயமெனும் தடாகத்தில்
------ மீனாய்நீ நீந்துகிறாய் !
உதயமாகும் என்காதல்
------ உயிர்க்காதல் உணர்வாயே !
பதங்களுமே வரமறுக்கப்
------ பரிதவித்தேன் உன்நினைவால்
இதமாகப் புரிந்துகொள்
------ என்னிதயம் உன்னிதயம் !


மீனாக நீந்துகின்றாய்
------ மீண்டுவர முடியவில்லை .
மானாக துள்ளியோட
------- மனத்தினையும் என்செய்வேன் !
தேனாகப் பேசிடுவாய்
------- தெவிட்டிடுமா உன்மொழியும் .
ஊனாக மாறாதே
------- உண்மைக்காதல் வென்றுவிடும் !


நீந்துகின்ற மீன்போலே
------- நீயும்தான் நீந்துகின்றாய்
காந்தவிழிப் பார்வையிலே
------- கண்டுகொண்டேன் உனையும்நான்
பாந்தமாகக் காதலினைப்
------- பக்குவமாய்ச் சொல்லிடுவாய் !
சாந்தமாகச் செவிமெடுப்பேன்
------- சற்றேனும் தளர்ச்சியின்றி !


கனிபோன்ற சுவையுடனே
------ கன்னிநானும் காத்திருக்கப்
பனிமலர்கள் மலர்கின்ற
------ பசுமைமிகு வேளையிலே
நனியழகு நடையழகில்
------ நளினமுடன் நானிருக்க
இனியாவும் நற்காலம்
------ இணைந்திடுவோம் என்னவனே !


ஆக்கம் :- கவிஞர் . சரஸ்வதி பாஸ்கரன்

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (18-Feb-17, 9:58 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 76

மேலே