என் காதலே ! என் காதலே

காதலியை பார்க்கச் சென்றேன் - மனக்
காயத்தோடு திரும்பி வந்தேன்
கண்ணில் அழைத்து அவள்
சொல்லில் அடித்து விட்டாள்

முல்லைப் பூச்சரத்தில் முள்ளிருந்து குத்தியது
கனியாய் இருந்த மனம்
கல்லாக மாறியது
தனியாய் புலம்ப விட்டு - நான்
தவிப்பதை ரசிக்கின்றாள்

தங்கத்தில் காதல்பொம்மை செய்து
அவள் பெயரை வடித்துவைத்தேன்
தவிடுபொடி ஆனது காதல்- அதனால்
பொம்மையை உருக்கிவிட்டேன்

கடல்மீன் அவளுக்கு கரையிலிருந்து
வலை விரித்தேன்
விண்மீன் நான் என சொல்லி
அவளும் சிரித்து விட்டாள்

பெண்கள் இதயம் கல்லாகும்
ஆண்கள் இதயம் கண்ணாடி
கண்ணாடிக்குத் தான் சேதம் எப்போதும்
பெண்களுக்கு இதிலென்ன லாபம்

காட்டை எரித்து குளிர்காய்வது போன்று
காதலை எரித்து குளிர்காய்ந்தாள்
குரலை ரசித்துவிட்டு
குரல்வளை நெரித்தாள்

பூமிக்கு ஒளிகொடுத்தாலும் வானத்துக்கு தான்
நிலவு சொந்தம்
வானத்து நிலவு அவளும்
வாழ்க பல்லாண்டு....


எழுதியவர் : விஷ்ணுதாசன் (17-Jul-10, 1:40 pm)
சேர்த்தது : விஷ்ணுதாசன்
பார்வை : 589

மேலே