நரகத்தின் வாசலில் சுகபோகங்கள்

..........நரகத்தின் வாசலில் சுகபோகங்கள்.........

கடித்துத் துப்பிய பழத்தின் மீதியில்
கட்டுக்கட்டாய் பணத்தை எண்ணும்
இரத்தம் உறிஞ்சிக் குடிக்கும்
ஒட்டுண்ணிகளின் எச்சிலோடு ஒட்டிக்கொள்கிறது ககனத்தின் வாசம்...!

பத்துக் கிளையிலும் பவளங்கள் பூத்தும்
பட்டினி கிடக்கும் பறவைகளிடம் தட்டிப்பறித்து உரம் கேட்கும் விருட்சத்தின் வேர்களுக்கு கிடைக்கும் இறுதிக் கூலியில்
மண்ணுக்குள் கேட்கிறது மடிப்பிச்சையின் ஓலம்...!

காற்றோடு போட்டி போட்டு அளவுக்கதிகமாய் ஆட்டங்காட்டும் பட்டங்கள் நூலறுந்து தத்தளிக்கையில் காளகூடத்தின் கண்ணாடி காதோடு ரகசியம் பேசிச் செல்கிறது ஆடிய ஆட்டங்களின் எண்ணிக்கையை அகரவரிசையில்...!

எருதின் புண்ணிய தீர்த்தத்தில் காணாமல் போகும் பாவங்கள்..
சாணத்தோடு எரிந்து சாம்பலாகையில்
அனுபவித்த கேடு சூழ்ந்த சுகபோக வாழ்க்கைப் பக்கங்களின் கலப்படத்தால் நரகத்தின் வாசலைத் தட்டிக் கேட்கிறது மரணத்தின் சம்பளத்தை....!

(காளகூடம்-நரகம்)

-உதயசகி-

எழுதியவர் : அன்புடன் சகி (23-Feb-17, 5:44 pm)
பார்வை : 160

மேலே