கவிஞனின் இறுதிநேரம்
காலனே,
கொஞ்சம் பொறு!
கவிதை சொல்ல வேண்டும்!
இதுவரை யாரும்
எழுதாக் கவிதை!
இனிமேல் என்பேர்
சொல்லும் கவிதை,
அவகாசம் கொடு!...
மரணத்தை உணர்த்த
கவிதையால் சாத்தியமா?
மனதில் பலநாள்
எழுந்த கேள்வி!
இறந்து பார்க்காமல்
இறப்பைப் பாடிட
எவனால் முடியும்?!..
இறந்த பிறகு
ஏற்படும் அனுபவம்
எழுதிச் சொல்லவும்
சாத்தியமில்லை!
இறக்கும் தருணம்
மட்டுமே உள்ளது..
தள்ளி நில்!..
துளியில் துவங்கிக்
குழியில் முடியும்,
இடைபட்ட நேரம்
நடைபோட்ட தூரம்
கொண்டது,கொடுத்தது
உண்டது,உடுத்தியது
எல்லாம் விட்டுப்
போகும்போது..
ஏங்கவோ,எண்ணவோ
எதுவுமில்லை!...
இந்த உடல்தான்!
எத்தனை உணர்ச்சிகள்?
இந்த மனம்தான்
எத்தனை உணர்வுகள்?
நல்லதைக் கெட்டதை
எத்தனை பதித்தேன்?!
எத்தனை விதைத்தேன்?!..
மீளாத்துயில்
எவனோ சொன்னது..
யார் இங்கே துயில்வது
வெற்றுடல் எப்படி
செயல்படும்?!
இறப்பில் எது
தொடங்குகிறது?
எது முடிகிறது?
என் கவிதையைப் போல
இதிலும் கேள்விதான்!
கொஞ்சம் கொஞ்சமாய்ப்
பிரிகிற உயிரா
கெட்டியாய் இதுவரை
பிடித்து நின்றது?
கொடுத்ததும் பிரிப்பதும்
ஒருவனின் செயலா?
என்னால் எதுவும்
நடக்க வில்லையா?!
கனவினில் தானா
கனவுகள் கண்டது?!
நனவினில் இறப்பது
எத்தனை சிரமம்!!..
கவிதைகள் செய்ததில்
சொன்னவை எல்லாம்
கண்களின் வழியால்
மனதில் இறங்குமா?
எனக்குப் புரியும் மரணம் படிக்கும் பேர்க்கு புரியுமா?
நேரடி வர்ணனையால்
நிமிடத்தில் யுகத்தை
புகுத்த முடியுமா?!
சிரித்துக் கொள்கிறேன்..
அழுது கொள்கிறேன்..
சிலர் நல்ல மரணம்
என்பர்...சிலர் பாவம் என்பர்..
காதுகள் கேட்பதை
நிறுத்துகின்றன..
கண்களில் மங்கலாய்
காட்சிகள் தெரிய,
வேண்டாம் என்று
மூடிக் கொள்கிறேன்...
.........
அ.மு.நௌபல் எ அபி
24/2/2017