எண்ணப்பறவை
எண்ணங்கள் நிறைந்ததொரு பறவையொன்று சிறகடித்து
விண்ணோக்கிப் பறக்கின்ற அழகியதோர் காட்சியினை
கண்களாலே கண்டதுமே மனதிற்குள் ரசித்தேனே .
மண்ணுலகில் பிறந்ததனால் சிறகில்லை நான்பறக்க !!
வண்ணமிகு இயற்கையினை வளமாகப் பார்த்தபடி
எண்ணமெலாம் கூடுநோக்க எடுத்ததுவோ பிறப்பும்தான்.
பண்களுமே பாடுகின்ற பறவையிது தொல்லுலகம்
கண்களினால் நோக்கிடவும் காலத்தால் பறக்கிறது !
இயற்கையுமே தந்திட்ட வரம்தானோ உனக்குந்தான்
முயற்சிகள் பலசெய்து சிறகடித்துப் பறக்கின்றாய் .
தயக்கமின்றித் தாண்டுகிறாய் கண்டங்களை நாள்தோறும்
செயற்கையைப் புகுத்தாதீர் செத்துவிடும் உயிர்களுமே !
பறவைகளின் சரணாலயம் பாதுகாத்தல் குறிக்கோளாம் .
உறவுகளைத் தொலைத்துவிட்டு ஊருராய்த் தேடுகின்றாய்
சிறகினையும் அசைத்திடுவாய் மாட்டிடுவாய் கூண்டுக்குள்ளே
மறந்திடவும் முடியவிலை மாற்றமுமே ஏதுமில்லை .
கூண்டுக்குள் அடைபட்டால் கூசிதானே போய்விடுவாய் !
மாண்புடைய பறவையேநீ மண்ணுலகில் உயிர்த்துவிட்டாய் !
ஆண்டவனும் திகைக்கின்றான் ஆள்பவனோ வதைக்கின்றான் .
காண்பீரோ சோகநிலை கண்ணீரே எம்மருங்கும் !!!
ஆக்கம் :- கவிஞர் . சரஸ்வதி பாஸ்கரன்

