நரக ஊழியம்

ஆணைமலை - பொள்ளாச்சி 1986,
மார்கழி மாதம், சனிக்கிழமை,
அதிகாலை நான்கு முப்பது மணி....!

கடுங்குளிர்,
ஒரே புகை மூட்டம்,
பனித்துளி படர்ந்த சாலை,

குறு குறுவென மாடசாமி
தொள தொள காக்கி சட்டையும்,
மொற மொற காக்கி டவுசரோடு...

கட முட, கட முடவென
இரு சக்கர தகர வண்டியை,
உருட்டி நடக்கிறான் ....

வண்டியில் பொருத்தப்பட்டிருந்தது,
நான்கடி, இரண்டங்குல
ஒரு தகர மூடிபோட்ட டப்பா.

டப்பா ஒரு புறத்தில்,
தென்னை ஓலையில் உரித்தெடுத்த,
ஈக்குமாறு குச்சியாளான -
கட்ட வௌக்குமாறும்,
கிழிந்த கோணிப்பையும்,
ஒரு பை சாம்பல் பொடியும் சொருகி இருந்தன..........

மறுபுறத்தில்,
கையுறையும், ஒரு பாட்டில் மண்ணெண்ணெயும்,
கவனமாக சுருட்டப் பட்டிருந்த
மஞ்சள் பையும் இருந்தன...

அவனோடு கூடவே,
அவன் மனைவி
குப்பாயும் நடந்து வந்தாள்...

முக்கால் உயர
குஞ்சம் வைத்த,
தக தக சுங்குடிட்ச்
சேலையும், சம்பந்தம் இல்லாத
ஜட்கா ரவிக்கையும்,
உடுத்தியபடி,

கலர் கலர் கண்ணாடி வளவி
போட்டு, கையில் ஒரு இரும்பு வாளியை
தொங்க விட்டு...

மறுகையில் இரண்டு மூன்று,
தகர முறம் அடுக்கி வைத்தபடி
வந்தாள்...

வெகு நேரம் நடந்த பிறகு,
ஊருக்குள் .நுழைந்தனர்...

தெருவின் தொடக்கத்தில்
ஐயப்பன்கோவில்...
"எங்கே மணக்குது சந்தனம்
எங்கே மணக்குது, ஐயப்ப சாமி
கோவிலிலே சந்தனம் மணக்குது"
பாடல் ஒலிபெருக்கியில்
பாடிக்கொண்டிருந்தது...

கூட்டமோ கூட்டம்..
மாடனும் அவன் மனைவியும்,
தலை திருப்பி பார்க்காமல்,
வெரசமாக நடந்து,
தெரு முக்கை அடைந்தனர்...

வண்டியை குப்பாயிடம் தந்துவிட்டு,
தகர மொரத்தையும்,
இரும்பு வாளியையும் பெற்றபடி
நகர்ந்தான்...

குப்பாயி,
டப்பா மூடியை திறந்து வைத்தாள்..

சாமியோவ், சாமியோவ்....!!
அய்யா சாமியோவ் சாமியோவ்...!
மாடன் வந்தாச்சு சாமியோவ்...!

தண்ணி ஊத்துங்க...
நான் கொல்லபுரம் வாரனுங்க...!
தினசரி ராகத்தை கூவி
முடித்தான் மாடன்.

போ போ போன்னு
ஒரு குரல் ஒலிக்கக் கேட்டு..
இருவரும் சிக்கு சிக்குன்னு
ஓடுறாங்க....கொல்லப்புரத்த
நோக்கி ஓடுறாங்க...

ஒரு காலை டிச்சு ஓரத்தில்
வைத்து, மறு கால் முட்டியை
வளைத்தபடி, இடக்கையில் வாளி,
வலக்கையில் முறம் ஏந்தி

தபால் பெட்டி போல்
ஒரு சிறிய செவ்வக அறை,
ஓரடி உயரம், ஒன்னரை அடி நீலம் இருக்கும்...
அதன் முன் காத்து நின்றான்...!

ஊத்தவா, தண்ணி ஊத்தவான்னு
ஒரு குரல் ஒலிக்க கேட்க...
மாடன் தலையசைத்து,
தொங்கிக்கொண்டிருந்த தகர
கதவை மேலே தூக்கி நிறுத்தினான்..

குப்பென்று ஒரு வாடை தாக்க,
ஹூம் ஹூம் மென தலையை
வெடுக் வெடுக்கென மூன்று முறை அசைத்து..

கையை உள்ளே விட்டான்...
முறத்தால் டர் டர்ரென வாரி,
ஒரு சிறு முகடு செய்தான்...

முகடான பின்,
அடிவாரத்தில் தகர மொரத்தை
ஒரே சொருகாக சொருகி...

அலேக்காக அள்ளி எடுத்தான்..
எடுத்ததை வாலியிலிட்டு,
வாளி வரும்பில் மொரத்தை
தடவி ஒட்டியிருந்த மிச்ச மீதியையும்,
வாளிக்குள்ளே விழச்செய்தான்..

மகா தெறமைசாலி மச்சான் நீயி..
குப்பாயி சொல்லக்கேட்டு
மெத்தனப் பட்டான் மாடன்..

ஊத்துங்க சாமி...
நல்லா அடுச்சு ஊத்துங்கன்னு சொன்னதும்..
திபு திபுன்னு மேலிருந்து
ஒரு ஓட்டை வழிய தண்ணீர் ஊற்றினர்...

மாடனோ, அதை லாவகமாக,
வெளக்குமாறு கொண்டு,
அடித்து அடித்து பெருக்குகிறான்...

கடைசியாக ரெண்டு சொட்டு
பிநோயில் ஊற்றியவிடும்
அதையும் ஒரு தேய்த்து விட்டு
இரும்பு கதவை திரும்பவும் மூடவிட்டு,
மறுவீடு கிளம்புகிறான்...

வாளியின் மேல்புறத்தில்,
சாம்பல் பொடியை தூவிவிட்டாள்
குப்பாயி...!

இம்முறை குப்பாயி,
சாமியோவ், சாமியோவ்....!!
அய்யா சாமியோவ் சாமியோவ்...!
அடுத்த வீடு முன்,
கூப்பாடு போட்டாள்..!

தகர கதவைத் திறந்தாள்,
முதல் வீடென்பதால்,
முகத்தில், சேலைத் தலைப்பை,
மூக்கில் சுற்றிக் கொண்டாள்.

கையை உள்ளே விட்டு,
வாறு வாரென வாருகிறாள்,
வந்தபாடில்லை...
காய்ந்து ஒட்டிக்கொண்டிருந்தது...
முகடு புடிக்க, மட்டுப் படவே இல்லை...
மாடன் கொல்லென சிரிக்கிறான்...

மச்சான் சிரிக்காதீங்க...
இந்த வீட்டுக்காரவுக,
என்னத்த தின்னாகளோ,
பாரக்கல்லு போல ஒட்டிக் கெடக்குது...
இல்லன்னா சுளுவா எடுத்துப்புடுவா
இந்த குப்பாயின்னு சொல்லி சிரிச்சா.....!


அதேபோல,
ஒவ்வொரு வீடா...
அள்ளி அள்ளி வாளியிலிட்டு,
வாளி நிறைந்த பின்,
இரும்பு டப்பாவில் கொட்டி
கொட்டி நடந்தனர்...

இன்னும் பத்தே வீடு தான் பாக்கி..!
களைப்பு தீர,
தெருவோரத்தில் அமர்ந்து,
வெத்தலை எடுத்து,
காம்பு கிள்ளி,
சுண்ணாம்பு தடவி,
வாயிலோரம் அடக்கி...
மறுபுறத்தில்,
லூசு பொகிளை இட்டு,
அசைபோட்டனர்...!

மணி ஆறு...
ஏழுக்குள் முடித்து விட திட்டமிட்டனர்...!

களைப்பாறி எழுந்தனர்..
முதல் வீடு,
சட்டென முடிந்தது..

அடுத்த வீடோ...
அத்தனை அழைப்பிட்ட பிறகும்,
சத்தமே இல்லை...

சரி கழுவி விடாமல்,
அள்ளி விட்டு மட்டுமே செல்வோம்
என்று முடிவு கட்டி
இரும்பு கதவைத் திறந்து,
அள்ள ஆரம்பித்தான் மாடன்...

முகடு பிடிக்கும் போது,
சொத்தென வலது மணிக்கட்டில்
நரகள் வந்து விழுந்தது...

வெடுக்கென கையை
வெளியே உருவி,
உதறி விட்டான்...

அங் த்தூ அங் த்தூன்னு
துப்பித் துப்பி சிரித்தாள் குப்பாயி....

நிறுத்து நிறுத்துன்னு சொல்லி,
மடேல்ன்னு ஒன்னு போட்டு விட்டான்,
குப்பாயி தலையில...!

இப்படியே,
அடுத்த வீடு,
அடுத்த வீடுன்னு மீதமிருந்த
பத்து வீட்டையும் முடிச்சு கட்டி,
குப்பாயியை வேப்ப மரத்தடியில்,
அமர வைத்து...

தகர வண்டியை,
உருட்டிக் கொண்டே,
மலக்காடு சென்றான்..
அள்ளியதை கொட்டி வர..!

அதற்குள்,
குப்பாயி, தூக்கு போசியில்,
பழைய சோறும்,
மொச்சைக்கல்லை குழம்பும்
பதினேழாம் வீட்டில் வாங்கி வைத்திருந்தாள்.

மாடன் வந்தவுடன்,
தெருக்குழாயில் கை கால் கழுவி,
கவர்மெண்டு குடுத்த கையுறையில்
முகம் துடைத்து...

தூக்குபோசியில் கை விட்டு,
ஒரு கையள்ளி,
உருண்டை பிடித்து ,
நீரிருத்து,
வாயில் இட்டு அசைபோட்டான்...

மொச்சை குழம்பை
தொட்டு நக்கினால்,
கெட்டுப்போய் இருந்தது...!

சாமியோவ், சாமியோவ்....!!
அய்யா சாமியோவ் சாமியோவ்...!
தொட்டுக்க ஊறுகா இருந்தா
குடுங்க சாமியோவ், சாமியோவ்....!!
கத்தினான்...

யாரும் வரல...
கெடச்சத திம்போம்ன்னு
மடக்கு மடக்குன்னு கவளம்
கவலமா உருட்டி உருட்டி
உண்ண ஆரம்பித்தான்...

கடும் பசி..!
ஆறாவது உருண்டை முடிஞ்சு,
ஏழாது உருண்ட உருட்டி ,
வாயிலுட்டு கையை திரும்ப,
போசிக்குள் விடும்பொழுது,

சொத்தென கைமேல்
விழுந்தது ஊறுகாய்......!

எழுதியவர் : கணேஷ்குமார் balu (26-Feb-17, 6:00 pm)
சேர்த்தது : Ganeshkumar Balu
Tanglish : naraka oolium
பார்வை : 200

மேலே