பொய்சொல்லும் அரிச்சந்திரர்கள்

================================
ஒரு பதினொரு மணி முகூர்த்தத்திற்கு
ஒன்பதுமணிக்குத் தாலிகட்டுவதாய்
சொல்லிவைத்து மனைவியுடன்
சரியான நேரத்திற்கேனும்
போகக் கிடைக்கும் கணவன் புத்திசாலி.

கடைக்காரன் கழுத்தைப் பிடித்து
தள்ளும்வரைக் காத்திராமல்
கொள்வனவை முடித்து
மனைவியுடன் வெளியேறும் கணவன்
அதிர்ஷ்டசாலி.

எட்டுமணிக்குப் போகும் பேரூந்தை
ஆறு மணிக்கென்று சொல்லியேனும்
துரிதபடுத்தி தரிப்பிடம் வரவழைக்கும்
கணவனால்தான் நல்லடக்கம்
செய்யமுன் ஒரு மரணச்சடங்கில்
பங்குபற்ற முடிகிறது.

இல்லாத அழகை
இருப்பதாகச் சோடிக்கும் மனைவியை
உனக்கு சேலையை விட
சுடிதாரே அழகென்று வாய்க்கூசாமல்
புகழ் புளுகுகளை வீசி
பயணங்களை எளிதாக்கும் கணவரை
அரிச்சந்திரன் என நம்பும் பதிவிரதைகள்
ஆட்சியைப் பிடிக்கும் அவசரத்தில்
இலவசங்களை அள்ளி வழங்கும்
பெருங்கட்சிகளைபோல் இரகசியமாக
தேன்மழையும் பொழிந்து வைக்கிறார்கள்
*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (27-Feb-17, 2:04 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 200

மேலே