எப்படியும் தொலைந்துபோவேன்

என் எதிரே அவள்!
நீந்தித் திரியும் கயல்களோ என்று
பார்க்கையில் விரிந்துபோய் காற்றிலே
அலைந்து போகும் மாங்கனியாய் மாறிய
அவ்விழிகளை நான் விழுங்கிட ஆசைப்பட...
கார்குழலது தவழ்ந்து வந்த காற்றினில்
சற்று மிதந்தும் களிநடனம் ஆடியும்
கன்னத்தை தீண்டிவிட ஆசைகொண்டு
தோற்றுப்போய் காதுமடலில் வீழ்ந்துவிட...
யாருடனோ அவள் புரியும் இதழ்களின்
புன்னகை கன்னங்களில் தெறித்து காதுமடல்
ஓரத்தில் உள்ள காதணிக்குப் போட்டியாய்
என் எண்ணங்களில் வண்ணமாய் மின்னிவிட...
என்னையும் மறந்து எப்படித்தான் ரசித்தேனோ?
எங்கெங்கோ பார்த்து எனை ஈர்த்த விழிகள்
எனை நோக்கினால் எப்படியும் தொலைந்துபோவேன்
என்ற அச்சத்தில் தப்பிவந்தேன் அவ்விழிகளிடமிருந்து...