கோலங்கள்

கோலங்கள்
****************

எழிலரசி எழுதுகிறாள்
எண்ணத்தை கோலமாக
திருமகள் வரைகிறாள்
திருத்தமுடன் கோலத்தை !

அழகுமகள் ஆர்வத்துடன்
இழுக்கிறாள் இழைகளை
கலையரசி பெண்ணரசி
போடுகின்ற கோலமிது !

காலங்கள் மாறுகின்றன
கணினிமயம் ஆகின்றன !
வழிமுறைகள் உருவாகி
செய்முறைகள் எளிதாகுது !

தலைமுறைகள் கடந்தாலும்
பழமைகள் மறக்கவில்லை !
வழிவழியாய் ஆற்றுகிறார்
கடமையாய் கோலமிடலை !

அழகுறவே புள்ளியிட்டு
பழகிட்ட கரங்களினால்
ஓவியமாக ஒளிர்கிறது
ஒயிலாளின் கோலமிது !

வளைவுகள் மாறினால்
வடிவமும் மாறுமென்று
புத்தியுள்ள மானிடனோ
புள்ளியிட்டு கோலமிட்டான் !

அழகியல் தத்துவத்தை
அழகுறவே அமைத்திட
வரிசையில் வைத்திட்டு
இணைத்தான் புள்ளிகளை !

காரணங்கள் பலவுண்டு
தோரணங்கள் கட்டினாலும்
மேளதாளம் கொட்டினாலும்
கோலமிலா சுபநிகழ்வேது !

வண்ணங்கள் சேர்ந்தாலே
அழகூட்டும் அலங்காரமும்
எழில்மிகு கோலங்களால்
விழிகளுக்கு விருந்தாகும் !

கோலத்தால் கோமகளும்
காலத்தும் போற்றுகின்ற
ஞாலத்தின் நாயகியாய்
குலமகளாய் வாழ்ந்திடுவாள் !

பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (28-Feb-17, 2:57 pm)
பார்வை : 141

மேலே