சோறு தந்து காப்பதால்

வாழ்ந்த முன்னோர்கள்
வடிவமைத்த படைப்புகளும்
வகுத்த ஒழுக்க நெறிமுறைகளும்
ஊருக்கு பெருமை சேர்த்த
எங்க ஊரு சின்ன ஊரு,
நாங்கள் ஊறி வளர்ந்ததும்
அந்த உணர்வில் தான்

மனம் மகிழ்ந்து கூத்தாடி
மழையில் நனைந்து வரும்
தெருப்பிள்ளைகளையும்
தன்னோட பிள்ளைபோல
தலை துவட்டி வழியனுப்பும்
தெய்வங்களாய் அன்னையர்கள்
தோன்றிய ஊரு அது

மீசையோடு, முரட்டு தோற்றம்
முண்டாசோடு நீண்ட துணிப்பை
ஒரு கையில் மகுடி
மறு கையில் மூங்கில்கூடை
மகுடியை ஊதி, கூடையை திறப்பான்
புஷ் என்ற சத்தத்தோடு
படமெடுத்து எழும் பாம்பு

இசைக்கேற்ப பாம்பு
ஆடத்தொடங்கும்
வீதிக்கு வரும்போதெல்லாம்
வீட்டுக்கு வீடு ஆடுவது
வாடிக்கை--வீட்டாருறவு
வீதியோடு முடிந்தாலும்
வட்டிலில் சோறும், குழம்பும் நிறையும்

ஊரோர அரசமர நிழலில்
பாம்பாட்டியின் வருகைக்கு
பாசத்தோடு காத்திருப்பாள்
அவனோட மனைவி,
அருகில் வந்து அமர்வான்
ஒன்றாய் இருவரும் உண்பார்கள்
எச்சில் பார்க்காதவர்கள்

இன்றுவரை அதனால்தான்
இணைபிரியாமல் வாழ்கிறார்கள்
பாம்பையும் சேர்த்துத்தான்,
பாம்பு கொத்தினாலும்
பல் இல்லாத பாம்பின் எச்சிலையும்
பெரிது படுத்துவதில்லை
சோறு தந்து காப்பதால்.

எழுதியவர் : கோ.கணபதி (28-Feb-17, 1:15 pm)
பார்வை : 38

மேலே