இவர்கள் யார்
இவர்கள் யார்...?
குளமாகிய விழிகளில்
குற்றுயிராய் கிடக்கும் ஏக்கங்களில்
இளகாத மனங்களிடம்
இரந்து வாழும் இவர்கள் யார்...?
நாகரீக நடை பயிலும்
கந்தலாடைக்குள்
நாகரீக கிழியல்கள் தான் எத்தனையோ...
காய்ந்து கறுத்துபோன மேனிக்குள்
பாய்ந்தோடும் குருதி உண்டு
உணர்வுள்ள ஜீவனும் உண்டென்று
காணமறந்த கலியுக உலகமிது...
விதைத்தவர்கள் யார்?
விதை நிலந்தான் எங்கே?
விண்ணின் தூறல்களில் விளைந்தவர்களா?
விரைந்த காற்றில் அள்ளி வீசப்பட்டவர்களா?
தளமின்றி முளைத்து
வளமின்றி கிடக்கும்
இவர்கள் யார்?
கருவில் காற்றுகூட தொடாத இவர்களை
தெருவோரத்தில் தேனீக்களும் தீண்டிபார்த்தன
கொசுநுளம்பின் தாலாட்டு
மாசுக்களின் மடிவாசம்
தென்றலின் குளிர்வதையில்
மன்றாடும் இவர்கள் யார்?
அமில வீச்சில்வயிறு புண்ணாகி
அகில நிராகரிப்பில் வாழ்வு வீணாகி
மொழியின்றி விழிசொரிந்து
வழியின்றி வலிகாணும்
இவர்கள் யார்?
இதுவரை விடையில்லை?
வண்ண பாவைகள் தொட்டதில்லை
வகைவகையா உண்டதில்லை
கால்வயிறும் நிறைந்ததில்லை
கல்வி என்றால் அறிந்ததில்லை
அன்பில் நனைந்ததில்லை
அகிலத்தில் இவர்கள் யார்?
எய்தவன் இருக்க அம்பை
எப்படி நோகமுடியும்???
இழிசொல் இசைமீட்க
பழிவந்து பண் அமைக்க
காரணமின்றி காலமோட
கழியும் பொழுதில் களிப்பில்லை ஆனலும்
கடவுளின் பிள்ளைகள்?
காற்றின் கலப்படத்தை நுரையீரல் வடிகட்டும்
கலப்படமே காற்றானால் நுரையீரல் என்ன செய்யும்?
படைத்தவனின் பார்வைபுலம் கடந்து படைக்கப்பட்டவர்களோ..?
பூவே உன் புன்னகை கொஞ்சம் கொடு
பூமியில் இவர்களும் புன்னகை செய்யட்டும்...