தூண்டிலில் சிக்காத மீன்கள்

சாதிக்க நினைப்போரை மலையும் தடுத்திடாது
தாண்ட நினைத்தோரை கல்லும் தடுக்கிடாது
போதிக்க ஊரிலே பெரியோர்கள் பலருண்டு
வீணாக இருந்தோமெனில் காணாமல் போயிடுவோம்

முதலடி வைத்ததுமே முள்ளும் குத்திடலாம்
வலிக்குதென நினைத்தோமெனில் வரும்வெற்றி மாறிடலாம்
முள்ளை மிதித்துநின்று வலியைப் பொறுத்தோமெனில்
முள்ளும் மலராகும் வான்மேகம் மலர்தூவும்

புயலது அடிக்குமெனில் இலைகள் உதிர்ந்திடலாம்
கடலது கோபம்கொள்ள கரைகள் அழுதிடலாம்
எரிமலை பொங்கிடவே தரையெல்லாம் கருகிடலாம்
லட்சிய வெறிகொண்டால் எதையும் எதிர்த்திடலாம்

முயற்சி செய்வதற்கான முயற்சியை எடுத்துவிட்டால்
அயர்ச்சி ஓடிவிடும் நம்பிக்கைவிதை மரமாகும்
பயிற்சி செய்துவந்து பந்தயத்தில் கலந்துகொள்ள
தளர்ச்சி தளர்ந்தோடும் கிளர்ச்சி மனம்கொள்ளும்

புழுவினைக் கட்டித்தூண்டில் மீனினைப் பிடிப்பதுபோல்
மயக்கும் காரணிகள் சுற்றிலும் பயமுறுத்தும்
எழுச்சியே கொள்கையென்று நினைக்கும் இதயத்திற்கு
தடைக்கல்லும் படிக்கல்லாகும் நாளையே விடியலாகும்

எழுதியவர் : (7-Mar-17, 6:53 pm)
பார்வை : 56

மேலே