புன்னகை

புன்னகை
மாலையிட்ட மணாளனிழைத்த துரோகத்தால்
மரித்துப்போனதே அவளிதழிலிருந்த மந்தகாசப்புன்னகை – தன்
மக்களின் நலன்கருதியவள் மயானத்திலிருந்ததை தோண்டியெடுத்து
புத்துயிரூட்டி புதுப்பொலிவேற்றி
நித்தமும் நீரூற்றி காத்திட்டபோதிலும்
நிரந்தரமாய் அவள்புன்னகையில் உயிர்ப்பில்லையே!

என்றுமாறுமிந்த ஈனத்தனம் ஆண்வர்க்கத்திடம் – எந்நாளும்
ஏமாந்துபோக பெண்ணினமென்ன பேதையர் கூட்டமா?
பொறுமைக்குமோர் எல்லையுண்டு என்னினமே
போற்றுதலுக்குரிய பூமாதேவியே அதையிழந்து பிளக்கையில்
தூற்றி வீசியெறி உனை துச்சமாய் எண்ணியவனை
புல்லுருவிபாய்ந்த மரத்தை பூஜிக்காதே என்றும்!


பிள்ளைகள் வாழ்வே பெரிதென்றெண்ணி
சிறுமைபடுத்திய ஆண்மகனை பொறுத்துப்போவதே
சீரானவாழ்வுக்கு வழிவகுக்குமென்று துதிபாடும் ஒரு கூட்டம்
மதிகெட்டமாந்தரை தூக்கிதூரப்போடு – அதுதான்
விதியென்று வீணில் பேசுபவர்களுக்கென்ன நட்டம்
வீறுகொண்டெழுந்து தன்மானங்காத்திட வாழ்வில்வரும் நாட்டம்!

பட்டுப்போனவுறவை பாதுகாத்திடாமல் பாழாய்ப்போனதை
வெட்டிவீழ்த்திடு இன்றே முற்றிலுமதை
வேர்கள்கூட மண்ணுக்குரமாகி பலன்தரவேண்டாம் – இதனால்
இனிவரும் சமுதாயம் சிறப்பாய் அமையும் – அதனால்
உன்னிதழில் மட்டுமா புன்னகை பூ பூக்கும்
உன்மனதிலொரு புன்னகை தோட்டமே உருவாகும்!

எழுதியவர் : மணிமாலா மதியழகன் (10-Mar-17, 8:35 am)
சேர்த்தது : Manimala Mathialagan
பார்வை : 96

மேலே