செப்பம்மா

அதென்னங்க செப்பம்மா? கயல் வினா எய்தினாள்,
தெலுங்கு சப்ஜெக்ட்டா இருக்கும் போல,
புகழ் பிரித்துரைத்தான்.

சாப்பிடும் போது,
ஏதோ ஒரு கருமம் ஓடினாதான்,
சாப்பாடு உள்ள ஓடுது...
என்ன பன்ன?

குறும் படத்தை டிவியில் ஓட விட்டனர்,
ரஸ்சியாவில் இருந்த படி,
ஒரு மத்தியான வேலையில்...!

திரை விரிகிறது...
சூரியன் உதயமாகிறது...
தேனாய் இனிக்கிறது,
புல்லாங்குழல் கீதம்,
பைரவி ராகத்தை அறையெங்கும்
தெளித்துக்கொண்டே!

லேசாக கண் விழிக்கிறான்,
இருட்டு லேசாக அகழ்கிறது,
அதை பார்த்த அவனுக்கு படபடப்பு....

பள்ளி செல்ல வேண்டுமே?
மறுநொடியே புரிந்தது,
இன்று முதல் முழுப் பரிச்சை லீவென்று..

குதூகலத்தில் தூக்கம் பிரிந்து...
மா, மா பூஸ்டு தண்ணி கொண்டா?
சுருக்குன்னு இல்லாம, பூஸ்டு தூல,
தூக்கலா போட்டு கொண்டா மா!

அடுப்படியில்,
அரக்க பறக்க, ஆறு திரி,
ஸ்டொவ்வை துடைத்தும்,
திரியை முறுக்கியும் இருந்தாள்..

திரி நெகு நெகுவென
மேலே தலைகாட்ட,
தாயம்மாளுக்கு பூரிப்பு,
மண்ணெண்ணெய் விட்டு,
மேலே அடுப்பு தட்டு வைத்து,
வத்தி குச்சி உரசி உள்ளே போட்டாள்...

சனியன் சனியன்!
குச்சி குறுக்கேத்தமா விழுந்து,
எந்த திரியும் எரியூட்டவில்லை!

விக்கிற விலை வாசிக்கு,
மறுக்கா ஒரு குச்சியா?
முடியாதுப்பா!!!

முனகிக்கொண்டே,
கோட்டர் பாட்டில் விளக்கு திரியை பத்தவிட்டு...
சைக்கிள் போக்ஸ் கம்பி,
மொனையில சிறு துணி சுத்தி,
இருக்க கட்டி, வெளக்கெண்ணெயில
ஒரு முக்கு முக்கி எடுத்து வைத்தாள்..

ஒரே ஒரு குச்சியை
சூதானமா ஒரசி,
கோட்டர் விளக்க பத்தவிட்டு,
கம்பி துணி நுனிய எறிய விட்டு,
அடுப்பு திரிய ஒன்னொன்னா
பத்தினா..

யம்மா, பூஸ்டு தண்ணி மா.....!
இருடா தம்பின்னு சத்தம் கேட்டு,
கொஞ்சம் அடக்கினான் ..!

தண்ணிப்பாலில்,
இன்னும் சில மடங்கு தண்ணிவிட்டு பெருக்கி,
அடுப்பில் ஏற்றினாள்..

பால் பொங்க,
அலேக்காக புடிதுணியில் இறக்கி,
பூஸ்டு டப்பா எடுத்து,
கவனமா அரை சிட்டிகை விட்டு,
ஓரிரு முறை ஆத்தினால்..

வெது வெது சூடுதான்..
முகர்ந்து பார்த்தாள்,
பூஸ்டு மனம் வந்தது...

அதை வாங்கி,
மடக் மடக்கென குடித்து முடித்து,
ஆள்காட்டி விரலை விட்டு,
டம்ளரை இரு முறை சுத்த விட்டான்,
ஒன்றும் தென்படவில்லை...

நிமிர்ந்து பார்த்தாள்,
யாருமில்லை...
இந்தம்மா ஒரு கஞ்சப்ப பிசுநாரி...!

என்னடா சொன்ன?
எடுபட்ட பயலே...
தீபாவளிக்கு வாங்குன பூஸ்டு
கால் பாட்டலு தான் இருக்கு,
இன்னும் சித்ரக்கனி கூட வரல..

பையனா போச்சுன்னு,
உனக்கு மட்டுதேன் தர்றேன்..
உன் ரெண்டு தங்கச்சிகளுக்கு
கருப்பட்டி காபி தான், தெரியும்ல?

மௌனமாகி,
பள்ளு விளக்க போனான்,
கோபால் பல்பொடியா?
பயோரியாவா?
லீவிட்ட சந்தோஷத்தில்,
கோபாலை மென்னு துப்பினான்.

கழுத்தில் துண்டை சுத்தி,
செவுரோரம் சாய்த்து வைத்த,
டயர் வண்டியை எடுத்து,
பெரம்பு குச்சியில் வார் பிடித்து,
ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்...
ஓட்ட ஆரம்பித்தான் ..

இரண்டு தெரு தாண்டி,
கோயில் குழாயில்,
தண்ணீர் குடித்து,
திரும்பவும், ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்...

ஐயா காடு வந்தவுடன்,
டயர் வண்டியை தோளில் போட்டு விட்டு,
ஒரு நல்ல மொழு மொழு
வெங்கச்சான் கல்லை தேடி எடுத்து,
மறவாய் ஒதுங்கி,
காலை கடனை முடித்து,
வீடு வந்து சேர பத்தாகி விட்டது...!

கொலை பசி,
டேய் தம்பி,
தோசையா? புட்டா?

மா, மொறு மொறு தோஷமா?
பன்னண்டு திரி அடுப்புல சுடும்மா?

பதில் வராமல்,
உஷ் சத்தம் மட்டுமே வந்தது...

மகனுக்கு புடிக்குமென்று,
தேங்காய் சட்டினி...!

இய்ய வட்டலில்,
தோசை போட்டு,
சட்டினி தேக்குசாவை திண்ணையில் வைத்தாள்..

வட்டலை அருகில் வைத்து,
சட்டினியை ஒரு ஓரத்தில் ஊத்தினால்,
தோசை ஓரமாய் சுழன்று ஓடிடிற்று...

தண்ணியான சட்டினியில்,
இரண்டே இரண்டு கருவேப்பிலை இலை,
நான்கைந்து கடுகு,
ஒரு பச்சை மிளகாய் தென்படுகிறது..

முருகலோரம் மூல்குவதற்குள்,
பிச்சுப் பிச்சு வாயிலிட்டேன்,
லேசான காரம், தேங்காய் ருசி,
புளித்த மாவு, மன மன நல்லெண்ணெய் வாசம்,
நாக்கை சுழட்ட வைத்தது..

தேவாமிர்தமாய் இருந்தது,
ஒன்பதாவது தோசை தாண்டும் போது,
சட்டினி மொட்டையாகி
காலியானது.

பசி அடங்காமல்,
அம்மாளிடம் மன்றாடி,
டால்டா ஒரு துளி உருக்கி,
முருங்கை தலையை அதில் வதக்கி,
கருகவிட்டு, கிண்ணத்தில் இட்டு,
அஸ்கா சக்கரை தூவி,
ஒரு கிளறு கிளறி,
உஷ்ணம் அடங்குவதற்குள்,
தோசைமேல் பரப்பி,
ஒரே மடியாய் மடித்து,
இரண்டாய் கிழித்து,
வாயிலிட்டு, மெல்ல மெல்ல,
சுகமோ சுகம்...

மா,
நீ செப்பம்மா..
செஃப்ம்மா !!!

பிலிம் பை .....
எச்சிலை விழுங்கியபடி
கயல் டீவியை சட்டென நிறுத்தினாள்

லொக்கு, லொக்கு, லொக்கென
புகழ் இருமியபடி விழுங்க முடியாமல்,
உண்டு கொண்டிருந்த பீட்ஸ்சாவை
மூடி விட்டு எழுந்தான்...!

எழுதியவர் : கணேஷ்குமார் balu (18-Mar-17, 9:29 pm)
சேர்த்தது : Ganeshkumar Balu
பார்வை : 157

மேலே