கடற்கரை கால்தடம்
எண்ணி முடிக்க முடியாது
எத்தனை தடங்களென்று!
கரைவந்து அலைகள்
அழித்துப் போனபின்னும்..
நினைவுகளில் நிலைத்துவிடும்
கடலோர நடைபயணம்!..
காதல் ,குடும்பமென
காலாற நடக்கவென,
தனிமை பிடிக்குமென
தவவலிமை கிடைக்குமென
நட்போடு சேர்ந்து
நல்லுறவு வளர்க்கஎன
சூரிய அஸ்தமனம்
சுகமாகக் காணவென
கடலைப் பார்த்திருந்தால்
கண்கள் மகிழுமென
உடலை மணல்தரையில்
ஓய்வாக சாய்க்கவென..
எத்தனையோ நோக்கங்கள்
எத்தனையோ காரணங்கள்
ஆனாலும் கடலுக்கோ
எதுபற்றியும் கவலையில்லை!
கரைகளில் நிற்பவரைக்
கண்டுகொள்வதே இல்லை!
கற்றுக்கொள்ள கடலிடம்
கல்விபல இருந்தாலும்
கால்தடங்கள் அழித்துவிடும்
கலைஎனக்குப் பிடிக்கிறது
மனிதர்களில் பலருக்கோ
மறக்கவே தெரியவில்லை
எப்போதோ நடந்ததையே
எண்ணியெண்ணிச் சாகின்றார்
இப்போதே உண்மையென
அறியாமல் நோகின்றார்...
அ.மு.நௌபல்