நேர்மையை பறிகொடுத்து வாங்கும் இலாபம்

ஆபத்தில் இருப்பவர்க்கு ஆனவற்றை செய்து
=ஆதாயம் கொள்வதிலே ஆசைகளும் வைப்பார்
கோபத்தை வரவழைக்கும் கொடுவார்த்தைப் பேசி
=கொந்தளிக்கும் எரிமலையை கூட்டிவரச் செய்வார்
சாபத்தை வாங்குகின்ற சதிசெயல்கள் மூலம்
=சத்தியத்தைக் கொல்லுதற்கு சட்டங்களும் செய்வார்
தீபத்தைக் கையேந்தி தெருகாட்டல் போன்று
=திக்கற்றோர் இல்லத்தில் தீமூட்டி வைப்பார்

பாவத்தின் சம்பளமாய் பரிதவிப்பை வாங்க
=பண்பற்ற செயலனைத்தும் பயமற்று செய்வார்
கூவத்தில் குளித்தெழுந்து கோயிலுக்குள் நுழைந்து
=குறைதீர வரமொன்று கொடுஎன்று கேட்பார்
நாவற்றிக் கிடப்போர்க்கு நீரூற்றும் வண்ணம்
=நலிவற்றுப் போவதற்கு நாசங்கள் செய்வார்
தூவட்டும் வானென்ற தொடர்வேண்ட லூடே
=தொழிலோங்க ஊரழிந்து தொலையட்டு மென்பார்.

யார்செத்தால் எனக்கென்ன நான்வாழ மட்டும்
=யாவுமிங்கு வேண்டுமென யாகங்கள் செய்வார்
சீர்கெட்ட மக்களென்றும் செம்மறிகள் போன்றே
=சீவியத்தை ஒட்டபல சிந்தனைகள் கொள்வார்
நீர்வற்றி போனபின் நிலமெல்லாம் தனது
=நிலமாக வேண்டுமென நினைவுகளும் வளர்ப்பார்
நேர்மையை பறிகொடுத்து நிதம்வாங்கும் இலாபம்
=நிச்சயமாய் அழியுமென நினைத்திடவே மறுப்பார்.
*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (19-Mar-17, 2:07 am)
பார்வை : 126

மேலே