வாழ்ந்த கதை மறந்துவிட்டோம் ஏனோ

கங்கையும் காவிரியையும்
ஈன்றெடுத்தவளை -இன்று ,
கருணைக்கொலை செய்துவிட்டோம்..

முப்போக விளைச்சலும்
மும்மாரி பொழிந்தவளை-இன்று ,
மூச்சடக்கி மடித்துவிட்டோம்..

சிக்காமல் பறந்த
சிட்டுக்குருவிகளையும் ,
சிட்டாய் சிறகடித்த தும்பிகளையும் -இன்று,
அழித்துவிட்டோம்..

கடல் நீரே குடிநீராய் அதுவும்
கானல் நீராய் போனததற்கான
காரணத்தை -இன்று ,
மறந்துவிட்டோம்...

கனல்வீசும் கோடையும்,
புனல்வீசும் அருவிகளையும்,
தென்றல்வீசும் சோலைகளையும் - ஏனோ - இன்று, இழந்துவிட்டோம்..

சாலையோர மரங்களையும் ,சந்தம்
பாடும் குயில்களையும் மறந்தோம் . பசுமை சரித்திரம்
மறந்த சந்ததிகளுமாய் -இன்று,
ஏனோ மாறிவிட்டோம்...


காலாற நடைபயின்று
கதைகள் நூறு பேசி
வயிறார உண்டு -வாசலிலே கூடி
வந்த சொந்தம் மகிழ
வாழ்ந்த கதையை ஏனோ -இன்று,
மறுத்துவிட்டோம்...


கொட்டாங்குச்சிக் கொண்டு
கூட்டாஞ்சோறாக்கி -குளத்தங்கரையில், கூட்டுப்
பறவைகளாய் திரிந்தவர்கள்
ஏனோ -இன்று,
அடுக்குமாடி கட்டிடங்களில்
அடுத்தவர்கள் முகமறியாது,
அலைபேசிக்கு அடிமைகளாய்
வாழுகின்றோம்..

காற்றுமண்டலத்தை ஓட்டையாக்கி
புவிவீட்டையும்தான் சூடாக்கி
பருவங்களை தொலைத்து -வாழ
பாதைத்தெரியாமல் -இன்று,
தவிக்கின்றோம்..


தமிழர்களாய்ப் பிறந்தும்
தமிழ்நாட்டில் வாழ்ந்ததும் -இன்று,
தமிழ்ப்பேச நாணுகின்றோம்........

எழுதியவர் : இரா.சுடர்விழி (22-Mar-17, 10:26 am)
பார்வை : 185

மேலே