ஏன் தோன்றவில்லை- அருணை ஜெயசீலி

..........................................................................................................................

குளிரூட்டப்பட்ட அறை என்றாலும் வெளியில் வெயில் தகிப்பதை ஒவ்வொரு முறை கதவைத் திறந்து மூடும் போது நன்றாகவே உணர முடிந்தது. காலை பத்து மணி தொடங்கி இரண்டு மணி வரை இப்படித்தான் பல பேர் வருவதும் போவதுமாக இருப்பர். கல்லூரி முதல்வர் அறையல்லவா? பிறகு நான்கு மணி முதல் ஐந்து மணி வரை ஆட்கள் நடமாட்டமிருக்கும்.. அதன் பிறகு என் உதவியாளர்கள் மட்டும் வந்து கொண்டிருப்பர்....

நான் இந்த அரசு கலைக் கல்லூரிக்கு முதல்வராகி இரண்டு மாதமிருக்கலாம். பணி புரிந்த இடத்திலேயே பதவி உயர்வு என்றாலும் ஒரு முதல்வரின் உலகம் பேராசிரியரின் உலகத்தை விட சற்று வித்தியாசமாகவும் பெரிதாகவும் இருந்தது.

அப்போதுதான் என்னெதிரில் பேராசிரியை நீலா வந்து உட்கார்ந்து தம் கண்ணாடியைக் கழட்டினார். அடுத்து அவர் தமது கண்ணாடியைத் துடைப்பாரா அல்லது கண்களைத் துடைப்பாரா என்ற ஒரு சிறு ஆவல் மனதில் எழுந்ததை அடக்கினேன். அவர் கண்களைத் துடைத்துக் கொண்டார். “ சார், அந்தப் பொண்ணு கண்மணி..., அதான் முதலாம் ஆண்டு பிஸ்ஸி கெமிஸ்ட்ரி, காலேஜூக்கு வந்து இன்னிக்கோட எட்டு மாசமாகுது... அடுத்த மாசம் யூனிவர்ட்டி எக்ஸாம்.. நான் என்ன பண்றது? ” என்று கேட்டார்.

“ ஏதோ உடம்பு சரியில்லைன்னு சொன்னாங்களே? ” என்றேன்.

“ அதெல்லாம் மெடிக்கல் சர்ட்டிபிகேட் வந்துடும்.. அவளோட அப்பா வந்து சொல்லிட்டுப் போவார்.. கல்லூரிக்கு வர்ற அளவுக்கு உடம்பு சரியாகலேன்னு ஒரே பல்லவிதான் பாடுவார்.... நீள நீளமா மெடிக்கல் லீவ் போட்டுட்டு, ஒரு வீவ் முடியற சமயம் இவ ஒரு நாளாவது கல்லூரிக்கு வந்து எட்டிப் பார்க்கணுமில்லையா? இது வரைக்கும் வரலே... பழைய முதல்வர் மங்களா மேடம் இவ மேல எந்த ஆக்சனும் எடுக்க விடலே.. இப்ப நீங்க என்ன சொல்றீங்க? ”

“ ஒரு வேளை, படுத்த படுக்கையா இருப்பாளோ? ”

“ அப்படியெல்லாம் ஒண்ணுமில்லையாம்.. நல்லா சாப்புடுறா, நல்லாத் தூங்கறா.. அவ தோழி மாலா கிட்ட அடிக்கடி செல் ஃபோன்ல பேசறா.. ஆனா வீட்டுலேயே அடைஞ்சி கிடக்கிறா.. ”

சம்பந்தமில்லாமல் என் மனதில் தொலைக்காட்சி ஓடியது.. அவர் செவிலிகளோடு பேசினார்....,, கிச்சடி சாப்பிட்டார்...,, கலந்துரையாடினார்...

தலையை உலுக்கிக் கொண்டேன்...

“ போன மாசம் கூட அவளைப் பார்க்க அவ கூடப் படிக்கிற பொண்ணுங்களும் பசங்களுமா நாலஞ்சு பேர் போனாங்க.. அவ அப்பா அம்மா அவளைக் கண்ணுல காட்டாமலே திருப்பி அனுப்பிட்டாங்களாம்... ”

திரும்பவும் தொலைக்காட்சி ஓடியது.

நீலா மேடம் பேசிக் கொண்டே போனார்..

“ அவளுக்கு ஆபரேசன்னு சொன்னாங்க. நோய்த்தொற்று வந்திடும்னு யாரையும் பார்க்க விடலே. வார்டுக்கு வந்தப்புறம் நம்ம மங்களா மேடம் போய்ப் பார்த்ததா சொல்றாங்க.. வேற யாரும் அவளைப் போய்ப் பார்க்கலே.. அவளும் நம்மள வந்து பார்க்கல... ”

நீலா மேடம் தொடர்ந்தார்...

“ அவ கர்ப்பமா இருக்கிறதா ஒரு வதந்தி.. குழந்தை பிறந்துட்டதாவும் ஒரு வதந்தி.. அவ காதலன் ஒரு தாழ்ந்த சாதிக்காரன்னும் அவனை அவ அப்பா தாக்கிட்டாருன்னும் கொலை பண்ணிட்டாருன்னும் இன்னொரு செய்தி...”

நீலா மேடத்தின் குரலில் கோபமிருந்தது.. ஒழுங்கீனமான மாணவி மேல் நடவடிக்கை எடுக்க முடியாத கோபம்...

“ சார், இவ மோசமான உதாரணமா இருக்கா.. இத இப்படியே விட்டா மத்த மாணவ மாணவிகளும் கெட்டுப் போயிடுவாங்க... இப்பவே ஏடாகூடமாப் பேசுறாங்க... ”

நீலா மேடம் சென்று விட்டார்.

இருப்பினும் கண்டிப்புக்குப் பெயர் போன பழைய முதல்வர் மங்களா மேடம் என்னிடத்தில் இவளைப் பற்றி எதுவும் கூறவில்லை..

வருகைப் பதிவேட்டை வரவழைத்துப் பார்த்தபோது, பத்து பன்னிரெண்டு நாட்களுக்கு ஒருமுறை இவள் கல்லூரி வந்ததைப் போல கையெழுத்துப் பதிவாகி இருந்தது.

துணை முதல்வர் ராமகிருஷ்ணனை அழைத்தேன்.

சம்பிரதாயமாகப் பேசி விட்டு கண்மணியைப் பற்றி ஒன்றும் சொல்லாமல் அந்த கையெழுத்தை விசாரிக்கச் சொன்னேன்....

அவர் பதிவேட்டை எடுத்தபடி வெளியே சென்றார். சற்று நேரத்தில் திரும்பி வந்தார்.. “ அது மாலாவோட கையெழுத்து.. மங்களா மேடம் சொல்லி கண்மணிக்காக மாலா போட்டாளாம்... ” என்றார்.

“ ஏன்? அப்படி எதுக்கு அட்ஜெஸ்ட்மெண்ட்? ”

“ நமக்கென்ன சார் தெரியும்? ” அவர் நமட்டுச் சிரிப்போடு நகர்ந்தார்.. “ மங்களா மேடத்துக்கும் ஒரு பையன் இருக்கான்.. இவ சுமக்கறது அவன் வாரிசோ என்னவோ? ” காற்றோடு பேசுவதைப் போல பேசினார்..

அவர் போன பிறகு யோசித்தேன். என்ன பெண் இவள்? அவளுக்கு என்னதான் பிரசினை? இவளால் மங்களா மேடத்தின் பேரும் கெடுகிறது.. ஒரு வேளை அதுதான் உண்மையோ???

கண்மணியின் அப்பாவுக்கு போன் போட்டேன்.. கேட்டேன்...

“ ஐயா புது முதல்வருங்களா? அம்மா எதுவும் சொல்லலியா? ” கண்மணியின் அப்பா கேட்டார்.

“ இதோ பாருங்க.. எங்கிட்ட சலுகையெல்லாம் எதிர்பார்க்காதீங்க.. உங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கத்தான் போன் பண்ணினேன். அவ கல்லூரிக்கு வரணும்.. இல்ல டிஸ்மிஸ் ஆகணும்.. ” நான் குரலில் கண்டிப்பு காட்டினேன்..

“ ஐயா, நாளைக்கு நீங்க மட்டும் தனியா வீட்டுக்கு வாங்கைய்யா... எல்லாத்தையும் விளக்கறேன்.. ”

மீண்டும் மீண்டும் தனியாக வீட்டுக்கு வரச் சொல்லி கெஞ்சினார் அவள் தந்தை. அவரது குடும்பச் சூழ்நிலை அவர் எனக்கு லஞ்சம் கொடுக்க அழைப்பதைப் போல் தோன்றவில்லை.. பின் ஏன் தனியாக வரச் சொல்கிறார்???

அன்று ஞாயிற்றுக் கிழமை. நான் கண்மணியின் வீட்டைச் சமீபித்தேன்..

அதோ தெரிவது கண்மணியின் உருவம்தானே? ஜன்னலில் கை வைத்தபடி, அதே கையால் கன்னத்தை தாங்கியபடி... முழு உருவமும் தெரியவில்லை..

நன்றாய்த் தானே இருக்கிறாள், கல்லூரி வருவதற்கு என்ன கேடு?

வீட்டினுள் நுழைந்தேன்.

கண்மணியின் அம்மா கழுத்திலிருந்த பித்தளைச் சங்கிலியும் வீட்டின் எளிமையும் சமீபத்தில் பெருந்தொகை கரைந்து போயிருக்கலாம் என்கிற யூகத்தைக் கிளப்பின.

ஆசிரியர் ஒருவர் வீட்டுக்கு வந்து விட்டால் ஒரு மாணவி ஓடி வந்து பார்க்க மாட்டாளா? அல்லது வணக்கம்தான் சொல்ல மாட்டாளா? அறைக்குள் கொலுசு சத்தம் கேட்டது. அவள் வரவில்லை..
திமிர்... இக்கால மாணவிகளுக்கு இருக்கிற திமிர்...!!

கண்மணியின் அப்பாவும் அம்மாவும் என்னை உபசரித்தார்கள். ஏதேதோ பேசினார்களே ஒழிய விஷயத்துக்கு வரவில்லை. இனிமேலும் காலங்கடத்த முடியாது என்கிற என் கண்டிப்பில் கண்மணியின் அப்பா தயங்கித் தயங்கி ஆரம்பித்தார்.

“ சார், போன வருசம் குடும்பத்தோட ஒரு கல்யாணத்துக்குப் போயிருந்தோம். பஸ்ல ஏகப்பட்டக் கூட்டம்.. இறங்கறபோது நடந்த தள்ளுமுள்ளுல கண்மணி கீழே விழுந்துட்டா... ஒரு பைக் அவ வயித்து மேலே ஏறி இறங்கிடுச்சு.. இதுல அவ குடல்ல ஓட்டை விழுந்துடுச்சி.. குடல் சுவர் கிழிஞ்சும் போயிடுச்சு.. உயிருக்கு ஆபத்தான நிலையில ஆஸ்பத்திரியில சேர்த்தோம்.. உடனடியா அறுவைச் சிகிச்சை பண்ணினாங்க.. ஒரு ரெண்டு மாசம் ஆஸ்பத்திரியில இருந்தா.... ! கிடுகிடுன்னு சரியாவும் ஆயிட்டா.. ! ”

விஷயத்துக்கு வர மறுக்கிறாரே இவர்???

“ அவ சாப்பிட ஆரம்பிச்சத்துக்கு அப்புறம் ஒரு விசித்திரமான, வெட்கக்கேடான பிரசினை வந்திடுச்சி. சத்தத்தோடயும், நாத்தத்தோடயும் அடிக்கடி காத்துப் பிரிய ஆரம்பிச்சுடுச்சி. பத்து நிமிஷத்துக்கு ஒரு தரம்...! அவ அடக்க முயற்சி பண்ணா அதிக சத்தத்தோட பிரியும்... ! குழந்தை நாலு பேரு எதிர்ல வரவே கூச்சப்பட ஆரம்பிச்சுட்டா.. ”

நான் அதிர்ந்து போனேன். கனவில் கூட இப்படி எதிர்பார்க்கவில்லையே??

அவர் பேசிக் கொண்டே போனார்...

“ டாக்டருங்க இது போகப் போகப் சரியாயிடும்னுட்டாங்க... நம்ம குடல்ல சில நுண்ணுயிரிகள் வாழ்ந்து, உணவுப் பொருள்களை சீரணிச்சுக் கொடுக்குமாம்.. நிறைய நோய்க் கொல்லி மருந்துகளை எடுத்துட்டதால அதுங்க எல்லாம் செத்துப் போச்சாம்.. சரியான நுண்ணுயிரிகள் பல்கிப் பெருக ஆரம்பிச்சா இது சரியாயிடுமாம். உயிருக்கு ஆபத்தான நிலையில உங்க மகளை அட்மிட் பண்ணினீங்க.. இந்த அளவு குணப்படுத்திக் கொடுத்திருக்கோம்.. மருத்துவ மொழியில இவளுக்கு வந்திருக்கிறது வியாதியே இல்ல.. ஒரு தற்காலிக உடல் உபாதைதான்.. அதுக்கும் மருந்து கொடுத்திருக்கோம்.. காலப் போக்குல சரியாயிடுன்னு சொல்லிட்டாங்க...

டாக்டருங்க பாஷையில அது சரிதான்.. ஆனா பட்டாம்பூச்சியா சுத்திட்டிருந்த பொண்ணு... அவமானப்பட்டு கூனிக் குறுகி.... ”

கண்மணியின் அப்பா வாயில் துண்டு வைத்து அழ ஆரம்பித்தார்.. அதே சமயம் அறைக்குள்ளும் ஒரு பெண்ணின் விசும்பல் சத்தம் கேட்டது.

“ எத்தனை வதந்தி தெரியுமா இவளச் சுத்தி? எல்லாம் அவ காதுக்கும் எட்டுது.. ”

கண்மணியின் அப்பா தொடர்ந்தார்.

“ இவ என்ன பாவம் செஞ்சா? சாப்பிட்டாதானே தொந்தரவுன்னு சாப்பிடாம பட்டினி கிடந்தா.. பட்டினியிலும் அப்படித்தான் ஆகுது.. செத்துப் பொழச்ச உடம்பு... பட்டினியத் தாங்காது...? சத்தான ஆகாரம் கொடுங்கன்னு டாக்டருங்க சொல்றாங்க.. வேண்டாம்.. நான் செத்துப் போயிடறேன்னு இவ சொல்றா.. நாளைக்குச் சரியாப் போயிடும்... அடுத்த மாசம் சரியாயிடும்னு நம்பிக்கையில நாள் ஓடுது... வெட்கக் கேடான வியாதிய யார் கிட்ட வந்து நான் சொல்ல? முதல்வரம்மா கிட்ட மட்டும் சொன்னேன்... அவங்க அதை ரகசியமா வச்சுகிட்டாங்க..

எல்லோரும் ஒரே மாதிரி இருக்க மாட்டாங்க.. சரியா போற வியாதிய எதுக்கு தம்பட்டம் அடிச்சு அவ மானத்தை வாங்கணும்னு அவளை வெளிய அனுப்பாம.. யாரையும் பார்க்க விடாம பொத்தி பொத்தி வச்சிருக்கேன்... அவ்வளவுதாங்க.... ! ”

கண்மணியின் அப்பா முடித்தார்..

“ அடக் கடவுளே என்று மனம் கேவியது.. சின்னப் பெண்தானே அவள்??? இந்தச் சமூகத்தில் நடுத்தர வயதுக் குடும்பத் தலைவன் தன் வீட்டுக்குள் சங்கோஜமில்லால் இப்படிச் செய்யலாம்.... சின்னக் குழந்தைகள் செய்யலாம்... மற்றவர்கள் கூச்சப்படத்தானே செய்வார்கள்? கிண்டல் கேலிக்கு ஆளாகித்தானே போவார்கள்?

என் சொந்த மகளின் பூப்போன்ற முகம் என் கண் முன் வந்தது.. இதே நிலை என் மகளுக்கு வந்திருந்தால்...?

“ இத்தனை மாசத்துல முன்னேற்றம் ஏதும் இருக்குதா? ” நான் கேட்டேன்.

“ இருக்கு சார்.. இப்பல்லாம் நல்லாவே கொறஞ்சிருக்கு.. ஆனாலும்.... ”

“புரியுது” என்றேன்...

கண்மணியின் அப்பா அவளை அழைத்தார்.. “ வர முடியும்னா வாம்மா... உங்க சார் கிட்ட ஆசிர்வாதம் வாங்கிக்கோ... ”

கண்மணி வந்தாள் தன் தாயின் துணையோடு... கருத்துப் போய் ஓரளவு மெலிந்திருந்தாள்.. முகத்தில் அவமானத்தின் பூச்சு.. தலை குனிந்திருந்தாள்.

“ வணக்கம் சார்... ”

சற்று நேரம் நின்றிருந்தவள் தலை தெறிக்க உள்ளே ஓடினாள்.. அவள் கொலுசு சத்தத்தையும் மீறி அந்த சத்தம்.. ! ஒரு அஜீரண வாசனை நாசியைத் தாக்கி விட்டு மறைந்தது.. ! என் மனம் முழுதும் கரைந்தது.. என் மகள் ஓடுவதாகவே தோன்றியது.. !

“ அவசரமில்ல... அவசரமில்ல... நான் அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன்.. ”

உணர்ச்சி வேகத்தில் வந்து விழுந்தன வார்த்தைகள்..!


கண்மணிக்கு சாலை விபத்து ஏற்பட்டு குடல் கிழிந்த விஷயம் அப்போதைய செய்தித்தாள்களில் வந்திருந்தது.. அவளுடைய மருத்துவச் சான்றிதழ்களில் அஜீரணக் கோளாறு என்றும் இருந்தது..

தொலைக்காட்சியோ, பேப்பரோ படிக்காத நாட்டுப்புறத்துப் பாட்டிமார்கள் குடல் சம்பந்தப்பட்ட விவகாரமென்றால் உடனே வலி, வாந்தி பேதி, வாயுக் கோளாறு என்று அடுத்த தொந்தரவுக்கான வாய்ப்புகளை யோசித்துப் பார்ப்பார்களே??? ஊடகத்தோடு பழகுகிற நாம் சொந்த புத்தியை அடகு வைத்து விட்டோமா? இப்படியும் நேர்ந்திருக்கலாம் என்று ஏன் நாம் சிந்திக்கவில்லை? சினிமாவிலும் தொலைக்காட்சியிலும் தாறுமாறாகக் காட்டுகிறார்களென்றால் அவர்கள் தாறுமாறாகக் காட்டுவதை மட்டும் நிஜத்தில் சிந்தித்திருக்கிறோம்..

நரம்பில்லாத நாக்கு எப்படியெல்லாம் புரண்டிருக்கிறது????? உண்மையில் நாற்றமெடுக்கிற விவகாரம் இதுதானே???

மாலாவை வைத்து இவள் வருகைப் பதிவேட்டை சரி செய்தேன்.. பல்கலைக் கழகத் தேர்வுக்கு இவள் வந்துதானே ஆக வேண்டும்??

பல்கலைக் கழகத் தேர்வும் வந்தது. இவள் தாயாரிடம் சொல்லி மூன்று சின்னக் குழந்தைகளோடு ஒரு வித ஒலியெழுப்பும் சில விளையாட்டுச் சாமான்களையும் வைத்து இவளைக் காரில் அழைத்து வரச் செய்தேன்.. காரோட்டும் டிரைவர் குழந்தைகள் என்று நினைத்துக் கொள்ளட்டும் என்று... ! தனியறை கொடுத்து தேர்வெழுத வைத்தேன். இவளை மட்டும் தனிமைப்படுத்தினால் நன்றாக இருக்காது என்பதால் மருத்துவ விடுப்பு எடுத்திருந்த இன்னொரு மாணவனுக்கும் தனியறை கொடுத்தேன்.. எதிர்கேள்வி கேட்காமல் நான் சொன்னதைச் செய்யும் ஒருவரைத் தேர்வுக் கண்காணிப்பாளராக நியமித்தேன்.. கண்காணிப்புக் கேமராவில் மட்டும் கண்காணிக்க வைத்தேன்..

செய்முறைத் தேர்வுக்கு ஏற்கெனவே ஒரு தனியிடம் இருந்தது. அதை அவளுக்குக் கொடுத்து விட்டேன்.

நீலா மேடத்திடம் மட்டும் விஷயத்தைச் சொன்னேன்.. “ இது தெரியாம அவளைப் பத்தி தப்பா பேசிட்டேனே சார்.. ” என்று வருந்தியவர் “ நான் பாத்துக்கறேன்.. ” என்றார்.

நேர்முகத் தேர்வுதான் அவளுக்குச் சவாலானது.. கலந்து கொள்ளவே மாட்டேன் என்று ஓடியவளை நானும் நீலா மேடமும் அவளது பெற்றோர்களும் சேர்ந்து சமாதானப்படுத்தி, கலந்து கொள்ள வைத்தோம்.

நான்கு தேர்வாளர்களை அவள் எதிர்கொள்ள வேண்டும்.. முதலில் நீலா மேடம்.. அடுத்து இன்னொரு தேர்வாளரை வெற்றிகரமாக எதிர்கொண்டாள். மூன்றாவது தேர்வாளர் இவள் பெயரை அழைத்தபோது இவள் செல்லவில்லை.. சற்று நேரம் கழித்து வந்தவள் நீலா மேடத்தின் பரிந்துரையின் பேரில் ஒரு வழியாகத் தேர்வினை முடித்தாள். நான்காவது தேர்வாளர் முன் அது நிகழ்ந்தே விட்டது. தேர்வாளர் கண்டு கொள்ளவில்லை.....

இப்படியாகப் பல்கலைக் கழகத் தேர்வை அவள் வெற்றிகரமாக முடித்தாள். இன்னும் அதிக பட்சம் நான்கு மாதங்களில் அவள் பூரணமாகக் குணமடைந்து விடுவாள் என்று மருத்துவர்கள் உறுதியளித்தனர்.

தேர்வு முடிவு அவள் தேறி விட்டதை முறைப்படி அறிவித்த அதே சமயம், அவளையும் என்னையும் இணைத்து இண்டு இடுக்கு விடாமல் கல்லூரி முழுக்க கிசுகிசு பரவி இருந்தது...!

எழுதியவர் : அருணை ஜெயசீலி (25-Mar-17, 7:59 pm)
Tanglish : aen THONDRAVILLAI
பார்வை : 362

மேலே