எங்கே அது
கண்ணாடி பார்த்தேன் !
கவிதையை வார்த்தேன் !
எங்கே அது ??
எனக்கு முன்பொரு கண்ணாடி - அதில்
. என்னை நானிங்கு காணுகிறேன் !
வனப்பு நிறைந்தவென் திருமுகமும் - நல்ல
. வலுவை ஏந்திடும் இருபுயமும்
கனிந்த காட்சியைக் காணுகிறேன் - எனில்
. கவலைக் குறுவதைக் காணவில்லை !
மனமே ! நீயெங்கு போனாயோ ? - உனை
. மனிதர் பார்த்திட வழியிலையோ ?
நில்லா தெங்கணும் உழல்வதுநீ ! - ஒரு
. நித்ய அமைதியில் சுழல்வதுநீ !
சொல்லைக் கேட்காமல் திரிவதுநீ - மெய்ச்
. சோதி உணர்ந்ததும் எரிவதுநீ !
பொல்லாச் செயல்கள் விழைவதுநீ - உயர்
. போதம் கண்டதும் கலைவதுநீ
இல்லா உருவமே பொய்மனமே - நீ
. இருக்கும் இடமெது ? சொல்மனமே !
நானும் என்செயலும் ஒன்றிவிட்டால் - அட
. நடுவில் நீயெங்கோ சென்றிடுவாய் !
நானும் செய்கையும் வேறாகின் - உடன்
. நடிக்க நீயுளே நின்றிடுவாய் !
மேனி நடத்திடும் விசையெனவே - பொய்
. மீது புரண்டிடும் சிறுமனமே !
நானிங் கென்னுரு காணுகிறேன் - அதில்
. நடத்தும் பொருளெங்கு போயினையோ ?
-விவேக்பாரதி