உயிர்பிரிந்தாலும் பிரியாத வரம் வேண்டும்

உயிர்பிரிந்தாலும் பிரியாத வரம் வேண்டும் !


உயிரதுவும் பிரிந்தாலும்
----- பிரியாத வரம்வேண்டும் .
பயிரதுவும் கருகினாலும்
------ பாழ்படாத நிலம்வேண்டும் .
உயிரெழுத்தை நீங்காது
------ உணர்வான தாய்மொழியும் .
பயிற்றுமொழி போன்றதுவே
------ பண்பான காதலுமே !!!


பூவோடு பூத்திருக்கும்
------ பூவையிவள் என்செய்வாள் !
பாவாடை தாவணியில்
------ பார்த்திட்டேன் ஓர்நாளில் .
பூவாடை நறுமணத்தால்
------ பூமகளும் காதலினால்
பாவோடு நாட்டியமும்
------ பாதகத்தி ஆடிடுவாள் !


தயங்காதே என்னவளே
------- தரைபார்த்து நடைபழகு !
முயல்போன்றே தாவியுமே
------- முழுதாக பிடித்துக்கொள் !
கயல்விழியாள் எனைநோக்கக்
------- காதலினால் மெய்மறந்தேன் !
வயல்வெளியில் வேலைசெய்தே
-------- வகையுறவே நேசிப்பேன் !!!!


தோழியோடு என்தலைவி
-------- தோகைமயில் எழிலழகி !
வாழியவே கற்புநெறி !
------- வாழ்த்தட்டும் அன்புநெறி !
கோழிகூவும் முன்னருமே
------- கோமகளும் விழித்திடுவாள் !
ஆழிபோல அன்பினாலே
------- அலையெனவே அணைத்திடுவாள் !!!


மீனவனும் நானடியோ
------- மீன்கண்ணாள் நீயடியோ !
தானதர்மம் பலசெய்தேன்
-------- தவமாக உனைப்பெற்றேன் !
ஆனவரைக் காதலிப்போம்
------- அழியாதே நம்காதல் !
ஊனமிலை இதயத்தில்
------- உன்நினைவே உள்ளத்தில் !!!


மாதுமிவள் மயங்கிடுவாள்
------ மாமன்நான் வந்திடவே !
சாதுவாகி என்மடியில்
------ சாய்வாலே சொர்க்கம்தான் !
ஏதுநீயும் தாமதமும்
------ ஏங்கிநிற்க வைக்கின்றாய் !
தூதுசென்ற தென்றலதைத்
------ தேடுகிறாள் எழிலாக !!!


ஆக்கம் :- கவிஞர் . சரஸ்வதி பாஸ்கரன்

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (3-Apr-17, 9:43 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 128

மேலே