அன்னையின் சிறப்பை வெளிப்படுத்தும் பாடல்

என்னைக் கவரந்த தமிழ்த்துறவிகளில் முதன்மையானவர் பட்டினத்தார். இவர் பாடல்களும் இவருடைய வரலாறும் தத்துவங்களும் மிகவும் சுவையானது. இவருக்கென்றே ஒரு தொடர் எழுத நான் விழைந்தாலும் தற்போதைக்கு இவர் அன்னையின் சிறப்பை வெளிப்படுத்தும் பாடலை மட்டும் இங்கே பதிவு செய்கிறேன்.

கைப்பொருளும் மெய்ப்பொருளும் நிரம்பிய குடும்பம் அவருடையது. " தெளிவே வடிவாம் சிவஞானம் " என்று பாரதி பாடிய சிவஞானம் சிந்தையில் உரைத்தபோது துறவறம் பூண முடிவெடுத்தார். அதற்கு முன் அன்னையிடம் ஆசி பெறச் சென்றார். பட்டினத்தாரின் அன்னை பெயர் ஞானகலை. அவர் பட்டினத்தாரின் இடுப்பில் ஒரு துணிப்பையைக் கட்டினார். அது அவிழும் போது அவர் தன்னைக் காண வரவேண்டும் என்றும் அதுவே அவளின் இறுதிக்காலம் என்றும் கூறினாள். காலங்கள் சென்றன. அவரும் துறவியாய் வாழ்ந்து சிவநெறி வளர்த்து வந்தார். ஒருநாள் அவர் திருவிடைமருதூரில் இருந்த போது, அந்தப் பையின் முடிச்சு அவிழ்ந்தது. தன் தாயைப் பார்க்க விரைந்தார். அவர் வரும் வரை அவள் உயிர் காத்திருந்தது. அவர் கைகளிலேயே உயிரிழந்தாள். அன்னையின் பிரிவை ஆற்ற இயலாது துடித்தார். அவள் உடல் விறகிலிட்டால் துன்புறுமோ என்று உருகி, வாழைமட்டைகளை அடுக்கி , அதன் மேல் இட்டார். கீழ்வரும் பாடலைப் பாடினார். அவை தீ பற்றி எரிந்தன.

முன்னை யிட்டதீ முப்பு ரத்திலே
பின்னை யிட்டதீ தென்னி லங்கையிலே
அன்னை யிட்டதீ அடிவ யிற்றிலே
யானு மிட்டதீ மூள்க மூள்கவே

அருஞ்சொற்பொருள் :

முன்னை - முன் புறம் , நெற்றிக்கண்

முப்புரம் - மூன்று மலைகள் . அசுரர்கள் மூவர் பொன்,வெள்ளி, இரும்பு ஆகிய மலைகள் அமைத்து அனைவரையும் துன்புறுத்தினர். அவற்றைச் சிவபெருமான் தன் நெற்றிக்கண்ணால் எரித்தார்.

பின்னை - பின் புறம், வால் பகுதி
அனுமன் இலங்கையில் தன் வாலால் தீ வைத்தான்

அன்னை தன்னைக் கருவில் தாங்கிய வெப்பம் - அடிவயிற்றுத்தீ

யானுமிட்ட தீ - அவர் இறுதியாக தாயின் உடலுக்கு வைக்க வேண்டிய தீ

மூள் - தீ எழும்புவது

விளக்கம் :

முப்புரங்களை முன் இருந்த நெற்றிக்கண் தீயால் சிவன் எரித்தான். இலங்கையை பின் இருந்த வாலின் தீயால் அனுமன் அழித்தான். அவ்வரிசையில் என் அன்னையோ அடிவயிற்றிலே உள்ள தீ கொண்டு என்னைத் தாங்கினாள். இறுதியாக நானும் இட்ட தீ இதுதான் என்று பொருள் தருகிறது. மூள்க என்று தீயிற்கே கட்டளை இடுகிறார்.

தன் தாயின் அடிவயிற்றின் வலியை, தன்னை ஈன்று வளர்த்த இறைவியை அந்நிலையில் அவரால் காண இயலவில்லை. அவர் பாடல் அக்னி பகவானையே சுட்டுவிட்டது போலும். அப்பிரிவை அம்மட்டைகளாலும் தாங்க இயலவில்லை. நாம் ஏன் இன்னும் இருக்க வேண்டும் என்று அவை எண்ணின என்று தோன்றுகிறது. அவ்வாழை மட்டைகள் பற்றி எரிந்தன.
---------------------------------------------------------------------------------------------------
ஒரு குழந்தையைப் பெற்று வளர்த்த அன்னையே அவன்/அவளுக்கு தீங்கு நினைப்பதுண்டோ? இல்லை. அது மிக மிக அரிது. இருந்தாலும் அது அறியாமையால் செய்யும் பிழையாக இருக்கலாம்.

கோழி மிதித்து குஞ்சு முடம் ஆகி விடாது

இராமாயணத்தில் தசரதனின் வேள்விப்பயனாய்ப் பிறந்த நால்வருள் இராமன் கோசலைக்குப் பிறந்தவன் . பரதன் கைகேயிக்கு பிறந்தவன் . கைகேயி கூனியின் சூழ்ச்சியால், இளையவன் பரதன் நாடாளவும் , இராமன் கானகம் செல்லவும் தசரதனிடம் வரம் கேட்டுப் பெற்றாள். இராமனுக்கு இச்செய்தியை அவன் திருமுடி சூட்டும் விழாவிற்கு சில மணி நேரங்களுக்கு முன் தெரிவிக்கிறாள். இராமன் கைகேயியிடம் பின்வருமாறு கேட்பதாகக் கம்பர் விவரித்துள்ளார்.

கம்பராமாயணம் - அயோத்தியா காண்டம் - பாடல் 1600

‘எந்தையே ஏவ, நீரே
உரைசெய இயைவது உண்டேல்

உய்ந்தனென் அடியேன்; என்னின்
பிறந்தவர் உளரோ? வாழி!
வந்தது, என் தவத்தின் ஆய
வரு பயன்; மற்று ஒன்று உண்டோ?
தந்தையும், தாயும், நீரே;
தலைநின்றேன்; பணிமின்’ என்றான்

அருஞ்சொற்பொருள்

எந்தை - என் + தந்தை , தசரதன்

நீர் - இங்கு கைகேயியைப் பார்த்து இராமன் பேசுவதால் கைகேயியை குறிக்கும்

இயைவது - ஒப்புக் கொள்வது

பணிமின் - கட்டளையிடுங்கள்

விளக்கம்

என் தந்தை தசரதன் கட்டளையிட, அதை என்னிடம் கூற நீங்களே ஒப்புக்கொண்டு என்னை அழைத்தீர்கள். ஆதலால் நான் உயர்ந்தவன் ஆனேன். என்னைக் காட்டிலும் இந்த சிறப்பைப் பெற பிறந்தவர்கள் எவரேனும் உண்டோ? இல்லை. நான் முன் செய்த தவத்தின் பயன் வந்துவிட்டது. இதை விடச் சிறந்தாக இனிமேல் வரக்கூடிய பயன் ஒன்றும் இல்லை. எனக்கு நன்மையைச் செய்யும் தந்தையும் தாயும் நீங்கள் தான் . கட்டளையிடுங்கள் . நீங்கள் சொல்வதைத் தலைமேற்கொண்டு செய்யக் காத்திருக்கிறேன் என்று இராமன் கூறினான்.

இத்துடன் கம்பர் நிறுத்திவிடவில்லை. அந்தக் கட்டளையை இராமன் கேட்ட பிறகு , அவன் முகம் எப்படி ஆயிற்று என்றால் அன்றலர்ந்த செந்தாமரை மலர் போல் புதிதாய் தெளிவாய் இருந்ததாம். அதையும் வென்றுவிட்டது என்றே கூறுகிறார். அதைக் கேட்பதற்கு முன்பும் பின்பும் ஒரே போல் அவன் முகம் இருந்தது. கைகேயியின் வரம் நமக்கு கல்நெஞ்சத்தின் கட்டளை போல் இருந்தாலும் இராமன் அதைத் தன் தாய், தந்தை இருவரது அருளும் கொண்ட கைகேயியின் அருள் வாக்காக எண்ணினான். அதுவே தன் தவப்பயன் என்றும் உணர்ந்து முன்னை விடவும் மிகுந்த மகிழ்ச்சியுடன் கானகம் செல்ல ஆயத்தமானான்.

" மன்னுபுகழ் கோசலைதன் மணிவயிறு வாய்த்தவனே " என்று கோசலைக்குத் தான் பிறக்கும் போது புகழ் தேடித் தந்தவன், கானகம் செல்லும் கட்டளையை அறிந்த பின், கைகேயிக்கும் புகழாரம் சூட்டுகிறான். இராமன் தன் தாய் , தந்தை மீது கொண்ட பணிவும் அன்பும் நம்மை வியக்க வைக்கின்றன.

கைகேயி கல் நெஞ்சம் படைத்தவள் போல இருந்தாலும், இராமர் ஒரு வண்ணான் சொல்லுக்காக சீதையை அக்னிக்குள் இறங்குமாறு பணிப்பதும் இராமாயணத்தில் தீவினைகள் போல் தோன்றினாலும் இவற்றின் பின்னணியில் இருக்கும் நல்வினையை உணர்ந்து, தெரிந்தே இவை நடந்தன என்று அபூர்வ இராமாயணம் சொல்கிறது.

Posted Passionately by Iswarya Ganesan

எழுதியவர் : (5-Apr-17, 7:26 pm)
பார்வை : 275

மேலே