இலையுதிர் காலம் - பகுதி 4

அது ஒரு மிகப்பெரிய நாகம். பார்த்த சிவாவுக்கும் சிலம்புவுக்கும் பாம்பைவிட அதிக பயம் தொற்றிக்கொண்டது. என்ன செய்வதென அறியாமல் பதற்றத்தில் சிலம்பு கிணற்றுக்குள் குதித்து விட்டான். சிவாவுக்கு இது மிகப்பெரிய அதிர்ச்சியை தந்தது கண்ணிமைக்கும் நேரத்தில் எல்லாமும் நடந்து விட்டது. அவன் இந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள் சிலம்பு நீருடன் மிகப்பெரிய யுத்தத்தில் இருந்தான்.

சிவாவுக்கும் நீச்சல் தெரியாது, நிலைமை கைமீறி போவதை உணர்ந்து உடனே சத்தமிட தொடங்கினான். " யாராவது வாங்க சீக்கிரம் வாங்க என் பிரெண்டு கிணத்துல விழுந்துட்டான் யாராவது வாங்க" என சத்தம் விண்ணை தொடுமளவு கத்தினான். ஏரிக்கரையோரம் துணிதுவைக்கும் சிலரின் காதுகளில் இந்த சத்தம் இடியை இறக்கியது போல இருந்ததோ என்னவோ? அவர்களில் இருவர் அலறியபடி ஓடி வந்தனர். சிலம்புவோ தனது முழு சக்தியும் இழந்து விட்டது போல தனது முயற்சியை கைவிட்டு நீரில் மூழ்க தொடங்கினான். " சிவா சிவா" என அவன் கத்தியது சிவாவிற்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.

ஓடிவந்த இருவரில் ஒருவர் என்ன ஏது என பாராமல் தொப்பில் என்று கிணற்றில் குதித்தார். நீரில் நிலை தடுமாறிக்கொண்டிருந்த சிலம்பின் தலை முடியை பிடித்து படியை நோக்கி இழுத்து வந்தவர் பின் அவனை தன் தோளின் மேல் போட்டு மேலேறி வந்தார். சிலம்பு அவரது தோளில் முழுதாய் மயங்கி மூச்சு பேச்சு இல்லாமல் கிடந்தான். சிவாவிற்கு தூக்கிவாரி போட்டது, அவனது மனம் எதை எதையோ நினைக்க தொடங்கியது. ஒருவேளை சிலம்புவுக்கு ஏதேனும் நடந்து விட்டால் என்ன செய்வது? எப்படி அவன் அம்மாவுக்கும் பள்ளி ஆசிரியர்களுக்கும் பதில் சொல்வது? என அவனது எண்ணங்கள் முழுதும் பயத்திலும் கவலையிலும் நிறைந்து அவனது கண்களில் தாரை தாரையாய் கண்ணீரை வரவைத்தது.

ஓடி போய் தோளில் தலை தொங்கி இருந்த சிலம்புவை கீழிறக்கி "சிலம்பு எழுந்துடுடா டே எழுடா" என கதறினான். அங்கிருந்த இருவரும் சிவாவை சற்று தூரம் நிற்க சொல்லிவிட்டு அதில் ஒருவர் "டேய் பழனி நிறைய தண்ணி உள்ள போயிருக்கு வெளியெடுக்கணும் வந்து வயித்த பிடிச்சு அழுத்து" என்றார்.

மற்றவரும் அவர் சொல்வது போலவே சிலம்புவின் வயிற்றில் தனது கைகளை ஒன்றின் மீது மற்றொன்றை வைத்து அமுக்க மயக்கத்தில் இருந்த சிலம்புவின் வாயிலிருந்து நீர் பொதக் பொதக் என வந்து விழுந்தது. கைகால் எல்லாம் நடுங்கியபடி நின்றிந்தான் சிவா. "நல்லா அமுக்குடா பழனி இன்னும் கொஞ்சம் இருக்கும் போல" என சொல்லி முடிப்பதற்குள் மற்றவர் கொஞ்சம் அழுத்தம் அதிகமாக கொடுத்து அழுத்தினார். சிலம்புவின் வாயிலிருந்து வெளியேறும் நீரின் அளவு குறைந்து பின் நின்றது.

" குமாரு இதுக்குமேல அழுத்தினா பையன் தாங்க மாட்டான் ரத்தமே வந்துடும் டா" என பழனி சொல்ல
"ஆமாம் பழனி ஹ்ம்ம் பையன் வேற மயக்கத்த்துலயே இருக்கானே இன்னும் என்ன செய்ய " என இருவருமே குழம்பினர். சிவாவிற்கு பயம் உச்ச்சத்தை அடைந்தது.

( தொடரும்....)

- கி. கவியரசன்

எழுதியவர் : கி. கவியரசன் (6-Apr-17, 11:38 am)
சேர்த்தது : கி கவியரசன்
பார்வை : 260

சிறந்த கட்டுரைகள்

மேலே