புரியமுடியாத நான்

புரியமுடியாத நான்!...

கவிதைபோல் ஆறுதலைக்
காண இயலாததால்
கண்ணீரைக் கூடஇங்கு
கவியாகப் பொழிகின்றேன்
கவிதைபோல் காதலிக்கக்
கதியிங்கு இல்லையால்
காதலினைக் கவிதைக்கே
காணிக்கை செய்கின்றேன்
பலகாலம் மனதிற்குள்
பலவாறாய்ப் பத்திரமாய்
பதுக்கியதை ஒதுக்காமல்
பாடிவிட முயல்கின்றேன்
சிலகாலம் இருப்பேனா
செத்தழிந்து போவேனா
தெரியாது தெரியாது
தெரிந்தவற்றை அதன்முன்னே
உலகுக்குச் சொல்லிவிட
உள்மனமும் நச்சரிக்க
உதிக்கின்ற உண்மைகளை
உளறிவிடத் துணிகின்றேன்
நிலையானப் பிழைகளினால்
நிற்காமல் வருமந்த
நிர்ப்பந்தம் விதித்தவனை
நிந்திக்க மனமில்லை
சிலைபோல சிலநேரம்
சிரிப்பதற்கும் அழுவதற்கும்
சித்திக்கா மல்போன
சிறுமரண நிகழ்வுகளும்
சிந்தனையை ஆட்கொண்டு
சிதறடிக்கும் எப்போதும்
சீக்கிரமே ஆற்றிவிடும்
சேர்ந்துவரும் என்கவிதை
நல்ல முறைவாழ்க்கை
நானாய் ஒதுக்கவில்லை
நஞ்சுவிதை என்றெங்கும்
நட்டேனா இல்லையில்லை
மெல்ல எனதுபாதை
வேறுதிசை மாறியதும்
வெளியாளால் இல்லை
வெட்கம் மறந்ததுதான்
கடன்பட்டும் பிறருக்கு
காட்டிநின்ற கருணைகளே
கடன்காரன் ஆக்கியது
கவிஞனென ஊக்கியது
உடன்பட்டுப் படுகின்ற
உள்ளக் கவலைகளை
ஊரார்மேல் சாற்றுவது
உண்மையாண்மை கிடையாது!
திடன்கொண்டு எழுந்துநிற்க
தீவிரமாய் நான்நினைத்தால்
திடுக்கத்தைக் கொடுப்பதற்கு
தீர்ப்போடு இறைநிற்பான்!
அடங்காத அறிவினொடு
அல்லல்பட்டு நிற்பவனை
அறிவாளி என்பதில்லை
அறிவுள்ள இவ்வுலகம் !?
கூட்டத்தில் தனிமைகண்ட
கூர்மதியைக் கொண்டிருந்தேன்
கூடாத செயலென்று
கூடிபலர் சொல்லிவிட்டார்
வாட்டந்தரும் தனிமையென்றார்
வரமென்றேன் எனைச்சபித்தார்
வாய்ப்புகளைத் தவறவிட்டு
வறுமையினைத் தேர்ந்தெடுத்தேன்
ஆட்டிவிடும் சிரமங்கள்
ஆவலுடன் எதிர்கொண்டேன்
ஆடலிலும் பாடலிலும்
ஆனந்த நிழல்கண்டேன்
ஏட்டினிலே எழுதொண்ணா
ஏராளத் தலைகுனிவை
ஏற்றாலும் நம்பிக்கை
எழுச்சியென்றும் குறையவில்லை
பாட்டினிலே நான்மயங்கி
பட்டதுன்பம் மறப்பதுண்டு
பாட்டுக்கும் என்மேலே
பாரா பட்சமுண்டு
பாட்டுக்களில் பாதியிங்கு
பாட்டாகவே இல்லை
பண்பற்றுப் பயனற்றுப்
பல்லிளித்து நிற்குமவை
மனதுள்ள எனக்கிங்கு
மனதிருக்கும் விசயங்கள்
வாயாறக் கூறிடவோ
வழியென்றும் வாய்த்ததில்லை
எனதென்று நான்கொண்ட
எதுவுமிங்கு நிலைத்ததில்லை
ஏற்றிருக்கும் தமிழன்றி
ஏற்றிவிட நாதியில்லை
தனதென்று வாழ்வதற்கும்
தப்பான எண்ணமில்லை
தறிகெட்டுப் போகையிலே
தட்டவொரு கதவில்லை
தினமொன்று இரண்டென்று
தீராதக் கவலைவரும்
சினங்கொள்வ தில்லைநான்
சிறப்பாக இருக்கின்றேன்!...

அ.மு.நௌபல்
3/4/2017

எழுதியவர் : அ.மு.நௌபல் எ அபி (6-Apr-17, 1:35 pm)
பார்வை : 189

மேலே