நம்தோழர்
நம்தோழர்!
(கலித்துறை)
மழையினை வேண்டி மண்வளம் காக்கும் விவசாயி
களைப்புடன் ஓய்ந்து கரங்களை வேற்று வேலைக்காய்
அழைப்பினை ஏற்றே அவனியில் மாறிச் சென்றிடுங்கால்
உழைப்பினால் சோற்றுக் குரமிடல் இல்லா தொழிவதாகும்!
உலகினில் பஞ்சம் உணவதில் வராமல் காத்திடவோர்
அலகென உழைப்பின் ஆற்றலைத் தருமோ ருன்னதமாய்
நிலமதை உழுது நீக்கம றவுண வூட்டுகின்ற
நலமிகுத் தொண்டு நாட்டிடும் உழவர் நம்தோழர்!
ஆற்றினில் நீரும் ஆழமாய் வற்றும் துயர்களுடன்
காற்றினில் ஈரம் கலங்கிடும் சோகம் வந்தாலும்
ஏற்றமும் இறைத்து ஏற்புடன் உழைப்போர் விவசாயி
சேற்றினில் கைகள் செம்மையாய்ப் பதிக்கும் நல்லோரே!
... நாகினி