மூன்றாம் பால்
இதைக் (https://youtu.be/7zeeVEKaDLM) கண்டதும்
இதயம் பொழிந்தது !!
இருவிழி ஓரம் வழிந்திடும் ஈரம்
. இன்பம் துன்பம் மனத்திடையே
அருவிகள் இன்றென் அழகுமு கத்தில்
. அன்பும் பண்பும் மதியிடையே !
பெருமைமி குந்த செயலதி னாலே
. பெற்றாள் அவளும் தாய்மையினை !
கருவினில் பெற்றால் மட்டுமோ பிள்ளை ?
. கருத்தில் சுமந்தாள் சேய்தனையே !
கதையிது தானோ கற்பனை தானோ
. கட்டிக் கொடுத்த விளம்பரமோ ?
இதயத்தி னுள்ளே இடும்பல கேள்விக்
. கிங்கே யார்தான் விடையுரைப்பார் ?
நிதமொரு காட்சி நிதமொரு தோற்றம்
. நின்றும் கண்டும் நகர்கின்றோம்
மதியினி லிவரை மதித்தொரு வார்த்தை
. மகிழ்ச்சி தோன்ற உரைத்திருப்போம் ?
தாய்மையில் கிட்டும் அழகினை ஆகா
. தாரணி மீது யாரடைவார் ?
மாய்வது தேகம் மனமெனும் மோகம்
. மண்ணில் வாழும் வினைப்புகழே !
தேய்வது நிலவே நெஞ்சினி இல்லை
. தெம்போ டேநாம் நின்றிடுவோம்
போய்மடி யட்டும் புல்லரி னாட்டம்
. போகம் நம்முன் வாழ்ந்திடட்டும் !
மூர்த்தியும் மூன்று வேந்தரும் மூன்று
. முழுமைக் காலம் அதுமூன்று
சேர்த்தினி வைப்போம் பாலினம் மூன்று
. செகத்தில் பாலின் நிலைமூன்று
பேர்த்தவர் வேற்றார் என்றுபி ரித்துப்
. பேதைமை செய்தல் இனிவேண்டா !
ஊர்த்துவ மாடும் இறையவன் கூட
. உருவில் மூன்றாய் நின்றனனே !
-விவேக்பாரதி