பற்றி எரிக்கும் பயங்கரவாதம்
பயங்கரவாதம்...
தீவிரவாதிகளுக்கு புனிதவேதம்
மதவாதிகளுக்கு மௌனகீதம்
அரசியல்வாதிகளுக்கு அலாவுதீன் பூதம்
ஆத்திரவாதிகளுக்கு தலைமையேற்கிறது.
ஆதிக்கவாதிகளுக்கு அடிமையாகிறது.
அப்பாவி மக்களுக்கோ சவக்குழியாகிறது.
முடிவுக்கு வரும்வரை வாதம் பயங்கரமாகிறது.
முடியாது போனால் பயங்கரவாதமாகிறது.
பெற்ற பிள்ளைக்குகூட பால் புகட்டாது
வற்றிய மார்புகள் வறுமையின் பயங்கரவாதம்.
மந்திரதந்திரங்களில் மனதைவிட்டு
பச்சிளங்குழந்தைகளை பலியிடுதல் மடமையின் பயங்கரவாதம்.
உயிருக்கு உயிராகும் நீரும் காட்டும் பயங்கரவாதம்.
பொறுமைக்கு காட்டாகும் நிலமும் காட்டும் பயங்கரவாதம்.
மனிதா!
எங்கும் உண்டு எதிலும் உண்டு
எனக்குள்ளும் உண்டு உனக்குள்ளும் உண்டு
இப் பயங்கரவாதம்.
அது விழிக்காது இருக்கவே
முன்னோர்கள் மொழிந்தனர்
அன்பெனும் கீதம்.
உள்ளக் கோயிலில்
அன்பு எனும் ஒளியை ஏற்றுவோம்.
கோபம் எனும் இருளை அகற்றுவோம்.
சுற்றத்தை பற்றி அணைக்கும் மனிதநேயம் இனி விட்டுவிடோம்.
முற்றும் பற்றி எரிக்கும் பயங்கரவாதம் என்றும் தொட்டுவிடோம்.
என்று தணியும் இந்த பயங்கரகோபம்?
அன்று மடியும் இந்த பயங்கரவாதம்.