இலை
![](https://eluthu.com/images/loading.gif)
இலை:
“நான் பிறந்ததில் இருந்து என் வீட்டில் இருக்கும் தென்னை மரத்திற்கும், முறிந்து விழுந்து மறுபடி வளரும் முருங்கை மரத்திற்கும், இதுவரை மக்களுக்கு காற்றும், நிழலும்,பழமும், இலையும், உயிர்காற்றும் (oxygen), உணவும் அளித்து வர்தா புயலால் சென்னை மற்றும் இதர இடங்களில் மாண்ட மரங்களுக்கும், செடிகளுக்கும், கொடிகளுக்கும் அதன் இலைகளுக்கும் மற்றும் இன்றியமையாத இயற்கைக்கும் இக்கட்டுரை சமர்ப்பணம்”
-அகரன்.
இலை. நம் வாழ்வில் நம்மோடு பயணிக்கும் மேலும் நாம் வாழவே தேவையான ஒரு பொருள். கண்ணை மூடி நம் மனதில் இயற்கை என நினைக்கும் போது பெரும்பாலும் தோன்றுவது காடுகளும்,மரங்களும், பூக்களும் அதன் இலைகளும்தான். இதில் பெரும்பாலானவர்களுக்கு தாவரத்தில் பூக்கள்தான் பிடிக்கும். ஆனால் எனக்கு இலையின் மீதே விருப்பம். எப்படி பெண்களின் கண்களை மட்டுமே பார்த்து காதலிப்பவர்கள் உண்டோ. அதே போல் ஒரு தாவரத்தின் பழங்கள், பூக்கள், வேர்கள், விதை, தண்டு, காய், கிளை என பல பகுதிகள் இருந்தாலும் நான் இலையை காதலிப்பவன். அதற்கு அதன் அழகான தலைகீழ் இதய அமைப்பும், பசுமையான பச்சை வண்ணமும் கூட ஒரு காரணம்.
பூ என்பது அழகை குறிக்கும். ஆனால் இலை பசுமையை குறிக்கும். பூவை விட இலை நம் வாழ்வில் நெருக்கமாய் பிணைந்துள்ளது. உண்ணும் உணவின் ருசியை கூட்டும் வாழையிலையாக, உண்டபின் சுவைக்கும் வெற்றிலையாக, நன்னாளில் வீட்டின் வாயிலில் மாவிலை தோரணமாக என இலைக்கு பல பரிணாமங்கள் உண்டு. மூலிகை இலையாக மருத்துவத்திலும் பங்காற்றுகிறது. வீட்டு மருத்துவரான துளசி இலைக்கு அதன் மருத்துவ குணம் காரணமாக, அதற்கு ‘தெய்வ மூலிகை’ என்ற பெயரே உள்ளது. மூலிகைக்கு இலைகள் பயன்படுவது மட்டுமில்லாமல் சாதாரணமாக நாம் தினசரி பயன்படுத்தும் கொத்தமல்லி, கறிவேப்பிலை இலைகளிலேயே மகத்தான குணங்கள் உள்ளன.
நாம் சந்தையில் தேவையான பொருட்களை வாங்கிய பின்பு இறுதியாக விலையில்லாமல் சிறிதளவு கொடுங்கள் என வாங்கி வரும் கொத்தமல்லி, கறிவேப்பிலையில் பின்வரும் சத்துக்கள் உள்ளன என கூறும் போது சற்று வியப்பாகத்தான் உள்ளது. கொத்தமல்லி இலையில் மட்டும் வைட்டமின் ஏ, பி, பி12, சி, எண்ணெய், இரும்பு, மேக்னீசியம், பொட்டாசியம், ஜிங்க், சுண்ணாம்பு சத்துகளும் மேலும் கறிவேப்பிலையில் மிகுதியாக நார்ச்சத்து, வைட்டமின் ஏ, பி, பி2, புரதம், உயிர்ச்சத்து, இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, அயாமைன், ஆஸ்பர்ஜான்சொரின், ஆஸ்பார்டிக் அமிலம், தலியோரெசின், கந்தகச்சத்து, குளுகோசைட், குளோரின், கோபினிஜான், தாமிரச்சத்து, புரோலைன், மேக்னீசியம் போன்ற எண்ணற்ற சத்துக்கள் புதைந்துள்ளன. மேலும் கொத்தமல்லியானது உடல் சூட்டை தணித்து, குளிர்ச்சி ஏற்படுத்தவும், குமட்டல்,வாந்தி, தலை சுற்றல் போன்றவற்றை தடுக்கவும் உதவும்.
கொத்தமல்லி வாசமே ஒரு தனித்தன்மை உடையது! அதேபோல் கறிவேப்பிலை உடம்பில் இரத்த சோகை மற்றும் தேவையற்ற கொழுப்புகளை குறைக்கும். மற்றும் கண்பார்வையை தெளிவாக்கும் வல்லமை உடையது. இதுமட்டுமல்லாது கறிவேப்பிலை புற்றுநோயை ஆரம்பநிலையில் குணப்படுத்தும் சக்தி இருப்பதாக ஆய்வில் கண்டறிந்துள்ளனர். எனவே, இந்த இலைகளை முடிந்த அளவிற்கு உணவில் இருந்து விலக்கி உண்ணாமல் இருக்கலாம். முடிந்தால் கொத்தமல்லி துவையல், கறிவேப்பிலை குழம்பு போன்ற உணவுகளை செய்து சாப்பிட்டால் ஆரோக்கியம் அதிகமாகும்.
அழகிற்காக இலைகளை சேர்த்து கொள்வதைப்போல, இலையும் ஒரு தனி அழகுதான். இயற்கையும், பசுமையும் இலையின் செழிப்பில் தெரியும். ஒரு புத்தகத்திற்கு இடையே நாம் மறைத்து வைத்து, ஒரு வாரம் கழித்து பார்க்கும் இலை, அழகு.
பெருநகர சாலைகளில் வாகனப்புகை தூசியால் அழுக்காக உள்ள இலைகள், திடீரென்று பெய்த மழையால் தூய்மையாகி,மழை நின்ற பின்பு புதுப்பொலிவாக பளிச்சென்று காட்சி தரும் இலைகள் பேரழகு. அப்பொழுது அந்த இலையின் மேல் வீழ்ந்து இருக்கும் ஒரு சிறிய நீர்த்துளியோடு பார்கையில் கொள்ளை அழகு. இப்போதும் கூட ஒரு செய்தித்தாள் அல்லது வார நாளிதழ்களில் முதல் 5 பக்கத்திற்குள் ஏதேனும் ஒரு படத்தில், எங்கேனும் ஒரு இடத்தில ஒரு இலை நிச்சயமாக தென்படும். இந்த இலையை சின்னமாக வைத்ததால்தான் அந்த காலத்தில் திரு எம்.ஜி.ஆர் அவர்களின் கட்சிக்கு தமிழ்நாடு முழுவதும் ஒரு நல்ல அபிப்ராயம் உருவானது. இலைகளுக்கு அந்த அளவிற்கு மக்களிடம் ஈர்ப்பு உள்ளது.
இந்த இலையை வைத்து ஒரு கலையும் உள்ளது. லீப் கட்டிங் ஆர்ட் (leaf cutting art) எனப்படும் இது இலையை வெட்டி ஓவியமாக மாற்றும் திறன் ஆகும். மேலே உள்ள படமும் அந்த வகை கலையே. ஒரு தாவரத்தில் உணவு மற்றும் நீரை சேகரிக்கும் களஞ்சியமாகவும், அதேபோல சில சமயங்களில் தான் சேமித்த நீர் ஆவியாகி விடக்கூடாது என அந்த இலை முள்ளாக மாறியும், செடியை காக்கின்றன.
இன்னொரு முக்கியமான செயல் என்னவென்றால் இலை இல்லை என்றால் இந்த உலகத்தில் யாருக்கும் உணவு இல்லை! ஆம், உணவு சங்கிலியில் அடிப்படையில் தாவரங்களே உள்ளது என்பது எல்லாருக்கும் தெரிந்த ஒன்றே. இத்தாவரங்கள் உற்பத்தி செய்யும் உணவையே சிறுவிலங்குகள் உண்கின்றன. மனிதர்களாகிய நாம் அந்த சிறு விலங்குகளையும், சில தாவரங்களையும் உண்டு வாழ்கிறோம்.
இந்த தாவரங்கள் இலைகளை கொண்டே உணவு உற்பத்தி செய்கின்றன. இலைகளானது சூரிய ஒளியை கவர்ந்து ஒரு உயிர்ம வேதியியல் நிகழ்வை (bio-chemical effect) நிகழ்த்தி உணவை உற்பத்தி செய்து, அதை சேமித்து வைத்து தாவரத்திற்கு அளிக்கிறது. இதற்கு ஒளிச்சேர்க்கை என்று பெயர். இதன் மூலம் உலகிலுள்ள அனைத்து உயிர்களின் உணவிற்கு மூலம் இந்த இலைகள்தான். எனவேதான் எனக்கு இலைகள் மீது விருப்பம். எனவே இயற்கையில் ஒரு முக்கிய பொருளாகவும், தாவரத்தின் ஒரு முக்கிய புலனாகவும் உள்ள இந்த இலைகளின் சிறப்பை என்றென்றும் போற்றுவோம்.
-அகரன்.
கைப்பேசி: 9941189319